நீண்ட நாள் கனவு நனவாகிறது; ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் வரவேற்பு... Advt
ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதன் மூலம் சமயபுரம், லால்குடி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது.
ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதன் மூலம் சமயபுரம், லால்குடி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவும் நனவாக உள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியின் கம்பீரமாக, மாபெரும் அடையாளமாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். பூலோக வைகுண்டம் என பெருமை பெற்ற இந்த திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை யானதாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பல லட்சம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வருவார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ரங்கநாதரை தரிசித்து செல்கிறார்கள். இத்தனை புகழ்பெற்ற இந்த திருத்தலத்தில் ஒரு பஸ் நிலையம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. ராஜகோபுரத்தின் அருகாமையில் தற்போது இயங்கி வரும் திறந்தவெளி பஸ் நிலையத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஆகவே ஸ்ரீரங்கத்தில் ஒரு டவுன் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது.
அதைத்தொடர்ந்து தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்தார். ஏற்கனவே இங்கு பஸ் நிலையம் அமைக்க பலமுறை முயற்சிகள் மேற்கொண்டு பாதியில் நின்று போனதால் இதை மக்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பஸ் நிலையத்துக்கு தேவையான இடத்தை உடனடியாக தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடுகள் செய்தனர். பின்னர் இடம் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 11 கோடியே 10 லட்சம் செலவில் பஸ் நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை வழங்கினர். இதையடுத்து மாநில அரசு அதனை பரிசீலனை செய்து உடனடியாக நிதியையும் ஒதுக்கியது.
அதன் பின்னர் கடந்த அக்டோபர் 12ம் தேதி கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி பணிகள் தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டால் ஒன்றரை ஆண்டுகளில் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த புதிய பஸ் நிலையம் நவீன டிசைனில் அமைக்கப்படுகிறது. இங்கு 8 பஸ்கள் நின்று செல்லும் வசதி, 22 கடைகள் அமைகிறது.மேலும் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிவறை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. முக்கியமாக இந்த பஸ் நிலையத்தின் முதல் தளத்தில் ஒரு டைனிங் ஹால் அமைக்கப் படுகிறது. இங்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிச்சயதார்த்தம், பிறந்தநாள் நிகழ்ச்சி காது குத்து விழா போன்ற நிகழ்ச்சி களை நடத்தி கொள்ளலாம். இந்த புதிய பஸ் நிலையம் அமைவதற்கு ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதன் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. ஸ்ரீனிவாசன் கூறும் போது, ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் இந்த புதிய பஸ் நிலையம் அமைய முக்கிய காரண கர்த்தாவாக இந்த நல சங்கத்தின் முன்னாள் தலைவர் பி. ஹேமநாதன் இருந்தார். இந்த இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என அரசுக்கு முதன் முதலில் வரைபடத்தோடு அவர் ஆலோசனை மனுவை 2018 ல் அளித்தார். இன்றைக்கு நம்மிடையே ஹேமநாதன் இல்லாவிட்டாலும் அவர் முன்வைத்த திட்டம் நிறைவேற இருக்கிறது என்ற தகவல் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் விரைந்து செயலாக்கம் பெறுவதற்கு காரண கர்த்தாவாக இருந்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேரு பழனியாண்டி எம்.எல்.ஏ., மேயர் அன்பழகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது ஸ்ரீரங்கம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். தற்போது ஸ்ரீரங்கம் வருகை தரும் பக்தர்கள் சமயபுரம், லால்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஸ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவலுக்கு ஒரு பஸ்ஸில் செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து நம்பர் ஒன் டோல்கேட் வழியாக சமயபுரம், லால்குடி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது. புதிய பஸ் நிலையம் அமையும் போது ஸ்ரீரங்கத்திலிருந்து சமயபுரம், லால்குடி மட்டுமல்லாமல் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த புதிய பஸ் நிலையம் ஸ்ரீரங்கம் வருகை தரும் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஸ்ரீரங்கம் வருகை தரும் வெளியூர் பக்தர்களின் கார், வேன் மற்றும் டூரிஸ்ட் பஸ்கள் நிறுத்துவதற்கும் ஒரு இட வசதியை மாநாகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தினால் ஸ்ரீரங்கம் வாசிகளுக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.