உளுந்து, உருளைக்கிழங்கு போதும்! முகத்துக்கு ப்ளீச் செய்த எஃபக்ட் கிடைக்கும் - பியூட்டி டிப்ஸ்!

வெளியே போவதற்கு முன்பு உடனடியாக முகப்பொலிவு வேண்டுமென நினைப்பவர்கள் அரை மணிநேரத்திற்கு முன்பு இந்த பேக்கை தயார் செய்து தடவினால்கூட போதுமானது. இதனால் முகம் பொலிவாவதுடன், மினுமினுப்பாகவும் இருக்கும்.

Update:2025-02-25 00:00 IST
Click the Play button to listen to article

எப்படியாவது கலராக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதற்காக நிறைய க்ரீம்கள் மற்றும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தினாலும் தோலின் நிறம் மாறுவதற்கு பதிலாக பயன்படுத்திய ரசாயனம் கலந்த பொருட்களால் சருமத்தில் ஏற்பட்ட பக்கவிளைவுகளை சரிசெய்ய நிறைய செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இப்படியிருந்த நிலை மாறி சரும ஆரோக்கியம் மற்றும் நிறம் குறித்த கருத்துகள் கடந்த சில ஆண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது. கலராக இருந்தால்தான் அழகு என்ற எண்ணம் மாறி, இருக்கும் நிறத்தை எப்படி மேம்படுத்தி பராமரிக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி வருகின்றன நிறைய காஸ்மெட்டிக் நிறுவனங்கள். அதற்காக டார்க், டஸ்க்கி, ஃபேர் ஸ்கின்களுக்கு ஏற்றவாறும், அதேபோல், வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் போன்ற தோலின் தன்மைக்கு ஏற்றவாறும் தனித்தனியாக ப்ராடக்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. என்னதான் இதுபோன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் அவற்றிலிருக்கும் கெமிக்கலானது சருமத்தில் பக்கவிளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, சருமத்தின் நிறத்தை, இயற்கை முறையில் எப்படி மேம்படுத்தி பொலிவாக்கலாம் என டிப்ஸ் கொடுக்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா.

கார்போக அரிசி தண்ணீர்!

எல்லாருடைய சருமமும் எப்போதுமே ஒரே மாதிரி நன்றாக இருக்காது. அவ்வப்போது அரிப்பு, முகப்பரு, தழும்புகள், சொரியாசிஸ் போன்ற பல பிரச்சினைகள் வரும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது கார்போக அரிசி. இந்த அரிசியை நீரில் ஊறவைத்து, அதை வேகவைத்து, அந்த நீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து தொடர்ந்து குளித்துவர வேண்டும். இப்படி செய்வதால் உடலில் இருக்கும் பல்வேறு சரும பிரச்சினைகள் நீங்கும். இந்த நீரில் முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும். தலைக்கு குளிக்க இந்த நீரை பயன்படுத்தினால் பொடுகு தொல்லை கட்டுப்படும்.


கார்போக அரசி

சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்!

பைக்கில் அதிக தூரம் பயணிப்பதால் சருமம் கருத்துப்போகிறவர்கள் சார்க்கோல் ஃபேஷியல் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். சார்க்கோல் கிடைக்காதவர்கள் தேங்காய்த் தொட்டியை எரித்து சாம்பலாக்கி, நன்றாக அரைத்து, அரிசி மாவுடன் சேர்த்து பேக்காக பயன்படுத்தலாம். இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து, பேக்காக போட்டால் முகத்தில் படிந்திருக்கும் கருமை (sun tan) நீங்கும்.

மங்கு மறைய!

அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு முகத்தில் அதிகப்படியாக தூசு படிந்து, மங்கு ஏற்படும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால் நல்லது. அதற்கு, ஆளிவிதைகள் என்று சொல்லக்கூடிய ஃப்ளாக்ஸ் விதைகளை அரிசியுடன் சேர்த்து ஊறவைத்துவிட்டு, வேகவைத்து நன்றாக அரைத்து முகத்தில் தடவிவர, படிப்படியாக குறையும்.

ரெட் ஒயின் பேக்!

ரெட் ஒயின் கடைகளில் கிடைக்கும். இல்லாவிட்டால் கருப்பு திராட்சையை வாங்கி அரைத்து, ஒருநாள் முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு ஐஸ் கட்டிகளாக செய்து முகத்திற்கு மசாஜ் கொடுக்கலாம். இப்படி செய்வதன்மூலம் முகம் பொலிவடையும்.


பூசணிவிதையுடன் தேன் கலந்து அரைத்து தடவ சரும நிறம் கூடும்

சரும நிறம் அதிகரிக்க!

பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிறமாற்றம் தெரியும். அதுமட்டுமல்லாமல் பூசணியை நன்கு அரைத்து அதில் பாலும், தேனும் கலந்து முகத்திற்கு தடவலாம். இதன்மூலம் சரும நிறம் கூடுவதை கண்கூடாக பார்க்கமுடியும்.

இன்ஸ்டன்ட் பொலிவிற்கு!

உளுந்தை ஊறவைத்து அரைத்து, அதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து பேக்காக போட ப்ளீச்சிங் செய்தது போன்ற எஃபக்ட்டை கொடுக்கும். வெளியே போவதற்கு முன்பு உடனடியாக முகப்பொலிவு வேண்டுமென நினைப்பவர்கள் அரை மணிநேரத்திற்கு முன்பு இந்த பேக்கை தயார் செய்து தடவினால்கூட போதுமானது. இதனால் முகம் பொலிவாவதுடன், மினுமினுப்பாகவும் இருக்கும்.


முகத்தை ப்ளீச்சிங் செய்த எஃபக்டை கொடுக்கும் உளுந்து பேக்

மணப்பெண்களுக்கு...

திருமணமாகும் பெண்களுக்கு சருமத்தை பராமரிக்க நேரம் இல்லையென்றால் ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஆரஞ்சு தோல், பூசணி, உளுந்து மற்றும் பாதாம் ஆகிய 4 பொருட்களை பயன்படுத்தினாலே போதும். இந்த நான்கையும் ஊறவைத்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, தினமும் பேக்காக தடவி, ஸ்க்ரப் செய்துவர நாளடைவில் சருமம் பளிச்சென மாறுவதை பார்க்கமுடியும்.

எண்ணெய் சரும பராமரிப்பு

அதிகப்படியான எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு அதிகமாக வரும். முகத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த ஆலிவ் ஆயில், தேன், பால் பவுடர் மற்றும் தக்காளி ஆகிய நான்கையும் கலந்து முகத்தில் பேக்காக தடவ, எண்ணெய் கட்டுப்படுத்தப்படுவதுடன், முகப்பருக்களும் மறையும்.


முகப்பரு தழும்புகள் மறைய உதவும் எலுமிச்சை சாறு + அரிசி மாவு பேக்

தழும்புகள் மறைய...

முகப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் முகத்திலிருக்கும் தடிப்புகள் மறைய, எலுமிச்சை சாறுடன், அரிசி மாவு, கடலை மாவு கலந்து பேக்காக தடவவேண்டும். இதனால் படிப்படியாக தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு...

தினசரி வேலை மற்றும் கல்லூரிக்கு செல்பவர்களுக்கு சருமத்தை பராமரிக்க போதிய நேரம் இருக்காது என்பார்கள். அவர்கள் கற்றாழை ஜெல்லுடன் தேங்காய்ப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தினமும் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மசாஜ் செய்ய புத்துணர்ச்சி கிடைப்பதுடன், சருமம் ஈரப்பதத்துடனும் இருக்கும். இதை பயன்படுத்தும்போது சருமம் கருமையாவதும் தடுக்கப்படும். இதை காலை, மாலை என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.   

Tags:    

மேலும் செய்திகள்