போல்டான மாடலிங் லுக் மேக்கப் போடுவது எப்படி? எவ்வித பவுடரும் தேவையில்லை!

எப்போது மேக்கப் செய்தாலும் வெளியே தெரிகிற காது, கழுத்து போன்ற பகுதிகளையும் சேர்த்துதான் சுத்தப்படுத்த வேண்டும்.;

Update:2025-04-01 00:00 IST
Click the Play button to listen to article

வாரந்தோறும் முகூர்த்தம், ரிசப்ஷன் என பிரைடல் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலை தொடர்ந்து பார்த்துவந்தோம். இந்த வாரம் சற்று வித்தியாசமாக ரேம்ப் வாக் போகிற மாடலிங் செய்யக்கூடிய மாடல்ஸுக்கு எப்படி மேக்கப் போடுவார்கள் என்ற லுக்கை செய்துகாட்டுகிறார் அழகுக்கலை நிபுணர் மினி. மற்ற மேக்கப்பை போன்று இந்த மேக்கப்பில் பவுடர் எதுவும் பயன்படுத்துவதில்லை என்பதுதான் இதில் ஸ்பெஷல். எப்படி பவுடரே பயன்படுத்தாமல் நீண்ட நேரம் கலையாமல் மேக்கப் இருக்கும் என்ற கேள்விக்கும் இந்த மேக்கப்பின் முடிவில் பதில் கிடைக்கும். மாடலிங் மேக்கப் ஸ்டெப் பை ஸ்டெப் உங்களுக்காக...

முதலில்  பிரெப்பிங்!

பொதுவாக மேக்கப் போடும்போது பார்லர்களில் க்ளென்சிங் செய்வார்கள். ஆனால் மாடல்கள் பெரும்பாலும் தங்களுடைய சருமத்தை சுத்தமாகவே வைத்திருப்பார்கள். இருந்தாலும் வெட் டிஷ்யூ வைத்து முகத்தை நன்றாக துடைக்கவேண்டும். இதனால் முகத்தில் படிந்திருக்கும் தூசு போன்றவை அகன்றுவிடும். சிலர் மேக்கப் போடவந்தாலும் ஐலைனர், மஸ்காரா போன்றவற்றை போட்டுக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு மேக்கப் ரிமூவர் வைத்து க்ளீன் செய்யவேண்டும். எப்போது மேக்கப் செய்தாலும் வெளியே தெரிகிற காது, கழுத்து போன்ற பகுதிகளையும் சேர்த்துதான் சுத்தப்படுத்த வேண்டும்.

நிறையப்பேருக்கு சரும துவாரங்கள் திறந்திருக்கும் என்பதால் முதலில் டோனர் பயன்படுத்த வேண்டும். டோனரை அப்படியே முகத்தில் தடவாமல் கையில் எடுத்து முகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக டேப் செய்யவேண்டும். இது சருமத்தில் இறங்குவதற்காக 1 நிமிடம் அப்படியே விடவேண்டும்.

முகத்தில் சருமத்துளைகள் பெரிதாக இருந்தால் அவற்றை குறைக்கும் வகையில் பிரைமர் பயன்படுத்த வேண்டும். இதையும் டேப் செய்துதான் அப்ளை செய்யவேண்டும். முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருந்தால் அதன்மீதும் பிரைமர் போட்டுக்கொள்ளலாம். பிரைமரை சருமத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.


ஃபவுண்டேஷன் தடவி பியூட்டி ப்ளெண்டர் கொண்டு நன்றாக ப்ளெண்ட் செய்தல்

பவுடரே இல்லாமல் ஸ்கின் மேக்கப்!

அடுத்து கன்சீலர் போடவேண்டும். சரும நிறத்தைவிட ஒரு ஷேடு டார்க்காக இருக்கும் கன்சீலர்தான் எப்போதும் பயன்படுத்தவேண்டும். பெரும்பாலும் கண்களுக்கு கீழ் கருமை இருப்பவர்களுக்கு போடும்போது மேல்நோக்கி பார்க்கும்படி சொல்லி பிரஷ்ஷால் போடவேண்டும். அதுவே கண்களை ஒட்டிய பகுதிகளில் விரல்களால் எடுத்து மெதுவாக தடவவேண்டும். கண்களுக்கு மேலும் விரல்களால் கன்சீலரை தடவி, பியூட்டி ப்ளெண்டரை வைத்து மெல்லமாக டேப் செய்தால் சருமத்துடன் மெர்ஜ் ஆகிவிடும்.

சருமத்தின் நிறத்திற்கு ஏற்றவாறு ஃபவுண்டேஷனை எடுத்து விரல்களால் அப்ளை செய்து ப்ளெண்டரால் டேப் செய்து ப்ளெண்ட் செய்யவேண்டும். எப்போதும் ப்ளெண்டர் பயன்படுத்தும்போதும் அழுத்தம் கொடுக்கக்கூடாது.

அடுத்து மூக்கு, தாடை மற்றும் கன்னங்களில் காண்டோர் பயன்படுத்தவேண்டும். மாடல்களுக்கு காண்டோர் செய்யும்போது ஷார்ப்பாக செய்தால்தான் போட்டோக்களில் பார்க்க நன்றாக இருக்கும். காண்டோரிங் செய்த இடத்திலேயே பிளஷ் போடவேண்டும். இரண்டும் தனித்தனியாக தெரியக்கூடாது. அதன்மீதே ஹைலைட்டரையும் போட்டுக்கொள்ளலாம். எப்போதுமே பிரைடல் மேக்கப்பைவிட மாடல்களுக்கு அதிகமாக ஹைலைட்டர் பயன்படுத்தப்படும். இவை அனைத்தும் ஒன்றாக மெர்ஜ் ஆவதுடன் நீண்ட நேரம் இருக்கவேண்டும் என்பதற்காக ப்ளெண்டராக மெல்ல டேப் செய்யவேண்டும். ப்ளெண்ட் செய்தபிறகு இன்னும் அதிகமாக ப்ளஷ் வேண்டும் என்றால் பவுட் போஸ் செய்து தட்டையான பிரஷ்ஷால் ப்ளஷ்ஷை எடுத்து கன்னங்களில் பூசவேண்டும்.


ஐஷேடோ போட்டு அதன்மீது லைட் க்ளிட்டர் தடவுதல்

போல்டான ஐ மேக்கப்!

ப்ளஷ் செய்தபிறகு, மீண்டும் கண்களுக்கு கீழ் மற்றும் தாடைப்பகுதிகளில் ஹைலட் செய்யவேண்டும். இதனை வி வடிவில் செய்யும்போது முகம் சற்று நீளமாக தெரியும். க்ளோயிங்கான மேக்கப் செய்யவேண்டும் என்றால் எந்தவிதமான பவுடர்களையும் பயன்படுத்தக்கூடாது.

போட்டிருக்கும் டிரெஸ்ஸுக்கு ஏற்றவாறு ஐஷேடோவை தேர்ந்தெடுக்கவேண்டும். மாடல்களுக்கு போட்டிருக்கும் டிரெஸ் நிறத்தில்தான் பெரும்பாலும் ஐஷேடோ போடவேண்டும். அதற்கு உடையின் நிறத்தில் லைட்டர் ஷேடை முதலில் தடவவேண்டும். ஐஷேடோவை பிரஷ்ஷால் முதலில் தடவி அதன்மீது லைட்டாக க்ளிட்டர் போடவேண்டும். போட்டிருக்கும் ஐஷேடோவை மேம்படுத்தி காட்ட, அதிலும் லைட்டர் ஷேட் ஹைலைட்டரை எடுத்து கண்களின் உட்புற ஓரங்களில் தடவ வேண்டும்.

மாடல்களுக்கு பெரும்பாலும் ஐலைனர் போடாமல் ஐஷேடோ பவுடரில் கருப்பு நிறத்தை ப்ரஷ்ஷால் எடுத்து ஸ்மட்ஜ் செய்யவேண்டும். மேலே போட்டிருக்கும் ஐஷேடோவையே கண்களுக்கு கீழும் போட்டுக்கொள்ளலாம்.


மேலே போட்டிருக்கும் ஐஷேடோவையே கண்களுக்கு கீழும் போட்டு ஸ்மட்ஜ் செய்தல்

அடுத்து காஜல் போடவேண்டும். ஒரே காஜலை பலருக்கு பயன்படுத்தவேண்டும் என்பதால் ஒவ்வொரு முறையும் ஷார்ப்னரால் சீவி பயன்படுத்தவேண்டும். எப்போது காஜல் போட்டாலும் ஒரு விரலால் கீழே பிடித்துக்கொண்டு முன்பின்னாக போட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். வேண்டுமானால் கண்களின் மேற்பகுதி வாட்டர்லைனிலும் காஜல் அப்ளை செய்யலாம். இதனால் கண்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும். மஸ்காரா போடும்போது மேல்நோக்கி பார்த்தபடி, மேல்நோக்கியே போடவேண்டும்.

அதன்பிறகு ஐலாஷ் எக்ஸ்டன்ஷன் வைத்துக்கொள்ளலாம். எக்ஸ்டன்ஷனுக்கு க்ளூ தடவும்போது லாஷின் ஒரு நுனிமுதல் அடுத்த நுனிவரை நன்றாக தடவித்தான் ஒட்டவேண்டும். ஒட்டுவதற்கு முன்பு லேசாக வளைத்துவிட்டு ஒட்டினால் அந்த வடிவம் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். கண்களை மூடி, ஒரு கையால் ஒட்டும்போதே, மற்றொரு கையால் அழுத்திவிட வேண்டும். அப்போதுதான் சுருக்கங்கள் விழாது. ஒரிஜினல் ஐலாஷுக்கும் எக்ஸ்டன்ஷனுக்கும் வித்தியாசம் தெரியாதவாறு சேர்த்து ஒட்டவேண்டும். அதன்பிறகு சிறிய பிரஷ்ஷின் பின்பகுதியால் மேல்நோக்கி நன்கு அழுத்திவிடவேண்டும். இதை ஹேம்மர் டெக்னிக் என்று சொல்வர். ஒட்டும்போதே கண்களை திறந்து மூடச்சொல்லி சரியாக ஒட்டியிருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.


உதடு பெரிதாக தெரிய டார்க் கலரில் அவுட்லைன் வரைந்து லிப்ஸ்டிக் போடுதல்

டார்க் & க்ளிட்டரிங் லிப்ஸ்!

மாடல்களுக்கு எப்போதும் டார்க் கலர் லிப்ஸ்டிக் போடுவார்கள். எனவே முதலில் டார்க் லிப்ஸ்டிக் போட்டு நடுவில் க்ளிட்டர் கொடுக்கலாம். உதடு சிறியதாக இருந்தால் பெரிதாக தெரிய, வெளிப்புறத்தில் சேர்த்து வரைந்துகொள்ளலாம். ஐஷேடோ போட்டிருக்கும் க்ளிட்டரில் லைட்டாக உதட்டுக்கும் போட்டுக்கொள்ளலாம்.

கடைசியாக ஹேர்ஸ்டைல் செய்து, போட்டிருக்கும் டிரெஸுக்கு கான்ட்ராஸ்ட்டாக இருக்கும்படி செயற்கை பூக்கள் மற்றும் ரீத்களால் அலங்கரிக்க வேண்டும். கீழிருக்கும் முடியை கர்ளிங் செய்யவேண்டும். ஒருவேளை எக்ஸ்டன்ஷன் வைத்திருந்தால் அந்த முடிக்கு ஏற்றவாறு ஹீட் செட் செய்து கர்ள் செய்யவேண்டும். கடைசியாக பெரிய கம்மல், கைகளில் பிரேஸ்லெட் மற்றும் விரல்களில் மோதிரம் அணிவித்தால் ரேம்ப் வாக் போவதற்கான மாடலிங் லுக் ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்