திருமண முகூர்த்தத்தில் மணப்பெண் தலையை அலங்கரிக்கும் வேணி! - செய்வது எப்படி?
ஒவ்வொரு பூவின் காம்பும் நாரும் சேர்ந்து இருக்கும்வகையில் நூலால் சுற்றி முடிச்சுப்போட்டால்தான் பூ கீழே விழாது. ஒவ்வொரு பூவிற்கும் முடிச்சு போடப்பட்டிருப்பதால் இந்த வேனியை சற்று வளைத்தாலும் ஆட்டினாலும்கூட பூ கீழே விழாமல் இருக்கும். கடைசியாக முடிச்சுப்போட்டு வேனியை முடித்துவிட வேண்டும்.
ரிசப்ஷன் மற்றும் கிறிஸ்தவ திருமணங்களுக்கு பயன்படுத்தக்கூடிய டியாரா செய்வதை கடந்தவாரம் பார்த்தோம். இந்த வாரம் முகூர்த்தத்திற்கு பயன்படுத்தும் வகையில் மலர் வேணி எப்படி செய்வது? என்று பார்க்கலாம். டியாராவை போன்று வேணியை அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. இதை முதன்முதலாக செய்து பயிற்சி பெறுபவர்கள் மல்லிகைப்பூவில் முயற்சித்தால் சற்று சிரமமாக இருக்கும். எனவே சாமந்தி போன்ற பெரிய பூக்களை பயன்படுத்தி செய்து பழகலாம். இதிலும் கலர் ஸ்ப்ரே செய்து வித்தியாசமாக காட்டலாம் என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா.
வேணி செய்முறை
வேணி செய்ய நார் தேவை. முதலில் நாரை திக்கான நான்கு லேயர்களாக மடித்து, நாரின் ஒரு ஓரத்தில் பூ கட்டுவதைப் போன்று மெல்லிய நார் அல்லது நூலால் முடிச்சுப்போடவும். மடித்த நாரின் மீதமுள்ள பகுதியை நன்றாக முறுக்கிவிடவும்.
முதலில் ஒரு சாமந்தி பூவை எடுத்து நூலில் வைத்து எப்போதும் பூக்கட்டுவதைப் போன்று முடிச்சுப்போடவும்.
திக்காக மடித்த நாரின் ஓரத்தில் பூவை வைத்து மெல்லிய நூலால் முடிச்சுப்போடுதல்
அடுத்து ஒரு பூவை எடுத்து முடிச்சுப்போட்ட பூவுடன் சேர்த்து வைத்து பிடித்து, இரண்டு பூவையும் சேர்த்து அதன்மீது நூலைச் சுற்றி, மடித்த நாரினைசுற்றி எடுக்கவும். அடுத்த பூவை இரண்டு பூக்களையும் ஒட்டியவாறு சற்று கீழேதள்ளி நாரின்மீது வைத்து, நூலினை மூன்று பூக்களையும் சேர்த்து சுற்றியவாறு நாரினையும் சுற்றி எடுக்கவும். அடுத்தப்பூவை மூன்றாம் பூவின் மீது வைத்து அதேபோல் மொத்தமாக சுற்றி நூலை கொண்டு வரவும்.
இப்படி ஒவ்வொரு பூவாக ஒன்றன்மீது ஒன்று இருக்கும்படி, கொஞ்சமாக கீழே வைத்து நூலால் நாரையும் சேர்த்து சுற்றி எடுத்துக்கொண்டே வரவர பூக்கள் நார் தெரியாதவண்ணம், சுற்றிலும் உருண்டையாக சேர்ந்து இருக்கும்.
பூக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக நாரை சுற்றிலும் வைத்து கட்டுதல்
ஒவ்வொரு பூவின் காம்பும் நாரும் சேர்ந்து இருக்கும்வகையில் நூலால் சுற்றி முடிச்சுப்போட்டால்தான் பூ கீழே விழாது. ஒவ்வொரு பூவிற்கும் முடிச்சு போடப்பட்டிருப்பதால் இந்த வேணியை சற்று வளைத்தாலும் ஆட்டினாலும்கூட பூ கீழே விழாமல் இருக்கும். கடைசியாக முடிச்சுப்போட்டு வேணியை முடித்துவிட வேண்டும். வெளியே தெரியும் பூக்களின் காம்புகளை கத்தரிக்கோலால் வெட்டிவிட வேண்டும்.
முடியின் நீளத்தைப் பொருத்து வேணி செய்யப்படும். பெரும்பாலும் 8 இன்ச், 11 இன்ச், 13 இன்ச் அல்லது 15 இன்ச் என வெவ்வெறு சைஸ்களில் வேணி செய்யப்படும். வாடிக்கையாளர் கேட்கும் நீளத்திற்கு செய்து அதற்கேற்ப விற்கப்படும். டோனட் வைத்து கொண்டைப்போட்டு அதன்மீது வேணி வைக்கும்போது எந்த சைஸ் டோனட் பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்றாற்போல் வேணியின் அளவும் இருக்கவேண்டும்.
கொண்டையின் அளவுக்கு ஏற்றாற்போல் செய்யப்படும் வேணி
கடைகளில் ஒரு வேணியின் விலையானது ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது. அதுவும் முகூர்த்த நேரத்தில் இதன் விலை இன்னும் கூடுதலாக இருக்கும். எனவே வீட்டிலிருக்கும் பெண்கள் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டால் ரோஜா, மல்லிகை, நந்தியாவட்டம் என எந்தவகை பூக்களை வைத்தும் வேணி செய்யலாம். மல்லிகைப்பூவின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் நந்தியாவட்டம் பூவில் செய்து அதன்மீது கோல்டன் கலர் ஸ்ப்ரே அடித்தால் பார்க்க அழகாக இருக்கும். நல்ல விலை வைத்தும் விற்கலாம்.
இது பார்ப்பதற்கு சுலபமாக இருந்தாலும் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் பெறக்கூடிய தொழிலாகும்.