முகப்பொலிவிற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் - பியூட்டிஷியனின் டிப்ஸ்!

கோல்டன் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்த சரும நிறம் மாறுவதை கண்கூடாக பார்க்கமுடியும். இதை காலை, மாலை என இருவேளை பயன்படுத்திவந்தால் சருமத்தில் புள்ளிகளோ, தழும்புகளோ இருக்காது. திடீரென வெளியே செல்பவர்களும் இதை பயன்படுத்தினால் உடனடியாக பொலிவை பெறலாம்.

Update:2025-03-04 00:00 IST
Click the Play button to listen to article

நிறையப்பேர் முகம் பளிச்சென இருக்கவேண்டுமென ஆசைப்படுவார்கள். அதற்காக கிரீம்கள் மட்டுமல்லாமல் இயற்கையாகவும் வீட்டில் கிடைப்பதையெல்லாம் முகத்தில் தடவுவார்கள். அப்படி செய்தாலும் நிறையப்பேருக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காததற்கு காரணம், உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்குறைபாடுகள்தான். எனவே நல்ல சத்தான உணவுகளை உட்கொள்வது உட்புற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் வெளித்தோற்றத்தையும் அழகாக்கும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் பிரியா. முகம் மட்டுமல்லாமல் உடல் முழுக்க ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க என்ன செய்யவேண்டுமென அவர் டிப்ஸ் கொடுக்கிறார்.

மூலிகை குளியல் பொடி

மூலிகை குளியல் பொடி தயாரிக்க பச்சை பயறு அரை கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, விராலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ, ரோஜா இதழ்கள், கார்போக அரிசி, கருஞ்சீரகம் மற்றும் நாட்டு சீரகம் போன்றவற்றை சேர்த்து அரைத்து குளியல் பொடியாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மூலிகைப்பொடியை பயன்படுத்தி குளித்தால் உடலில் அரிப்பு வராது. அப்படியே அரிப்பு, சொரியாசிஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் நாளடைவில் சரியாகும். முகத்திற்கு பயன்படுத்தும்போது முகப்பருக்கள் குறையும், சரும கருமை மறையும்.


சரும பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் மூலிகை குளியல் பொடி

நலங்கு மாவு

நிறைய பொருட்களை வைத்து குளியல் பொடி செய்யமுடியாதவர்கள் நலங்கு மாவு செய்து பயன்படுத்தலாம். அதற்கு வெள்ளை உளுந்து, பச்சை பயறு, பார்லி அரிசி, பாதாம், வெள்ளை கொண்டைக்கடலை, கடலை மாவு, வெட்டி வேர், வசம்பு, கருஞ்சீரகம் அனைத்தையும் ஒன்றாக அரைத்து பொடியாகவோ அல்லது ஃபேஸ் மாஸ்க்காகவோ பயன்படுத்தலாம். வெட்டி வேர் நல்ல வாசனை கொடுக்கும். இந்த கோல்டன் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்த சரும நிறம் மாறுவதை கண்கூடாக பார்க்கமுடியும். இதை காலை, மாலை என இருவேளை பயன்படுத்திவந்தால் சருமத்தில் புள்ளிகளோ, தழும்புகளோ இருக்காது. திடீரென வெளியே செல்பவர்களும் இதை பயன்படுத்தினால் உடனடியாக பொலிவை பெறலாம்.

எண்ணெய் பசையை குறைக்கும் பேக்

வீட்டிலிருக்கும் பெண்கள் சருமம் குறித்து அதிகம் கண்டுகொள்ளமாட்டார்கள். நிறைய நேரம் கிச்சனிலேயே இருப்பதால் அந்த சூட்டினாலும் சருமம் கருமையடையலாம். இவர்கள் அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் உளுந்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, தயிரில் கலந்து முகத்தில் தடவிவர, முகத்தில் படிந்திருக்கும் கருமை மாறும். அதுபோக, எண்ணெய்படிதல் குறைந்து முகப்பரு வராமல் இருக்கும்.


சரும நிறத்தை அதிகரிக்கும் நலங்கு மாவு பேக்

உடல் ஹைட்ரேஷனுக்கு...

திருமணத்திற்கு தயாராகும் நிறையப்பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களால் தங்களை சரியாக பராமரித்துக்கொள்ள முடியாது. அவர்கள் முகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின்மீதும் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, மேக்கப் போடும்போது சருமம் ஹைட்ரேட்டாக இல்லை என்று கூறி அதற்கென தனி ஜெல் போடுவார்கள். அதை தவிர்க்க, உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு ஜூஸை தினசரி குடித்துவந்தால் போதும். புதினா, நெல்லிக்காய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து குடித்துவர உடல் நீரேற்றத்துடன் இருக்கும். புதினா பிடிக்காதவர்கள் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் தயிர் ஆகியவற்றை நன்றாக அரைத்து மோராகவும் குடிக்கலாம். இதனால் முடி வளர்ச்சியும் அதிகரிப்பதோடு, பொடுகு தொல்லையும் குறையும்.

சருமம் பொலிவு பெற...

நட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது என்று நம் அனைவருக்குமே தெரியும். பாதாம், அத்தி, பேரீச்சை, பூசணி விதை ஆகியவற்றை வாழைப்பழத்துடன் சேர்த்து அரைத்து காலை, மாலை இருவேளையும் ஜூஸாக குடிக்கலாம். இதை சற்று திக்காக அரைத்து ஃபேஸ் பேக்காகவும் போட்டுக்கொள்ளலாம்.

சரும பொலிவு வேண்டுமென ஆசைப்படுபவர்கள் பப்பாளி ஜூஸ் குடித்துவர சருமம் பளபளவென மின்னும். அந்த தோலை அரைத்து முகத்தில் பேக்காகவும் தடவலாம்.


சரும ஆரோக்கியம் மேம்படவும் பொலிவுடன் இருக்கவும் உதவும் நட்ஸ் ஷேக்

வெயில்கால பராமரிப்பு

வெயில்காலம் வந்தாலே நிறையப்பேருக்கு சருமம் வறண்டுபோகும். அவர்கள் வெள்ளரி ஜூஸுடன் தயிர் சேர்த்து அடித்து மோராக குடிக்கலாம். இல்லாவிட்டால் வெள்ளரிக்காயுடன் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு சாலடாகவும் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் அதிகமாக சாப்பிட்டாலும் சருமம் ஹைட்ரேட்டாக இருக்கும்.

தொடர்ந்து கற்றாழையை முகத்திற்கு தடவுவதுடன், ஜூஸாக குடிக்கலாம். இதனால் உடல் முழுக்க ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் கற்றாழை ஜூஸ் குடிப்பார்கள். இதனால் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

குழந்தைகள் மட்டுமல்லாமல் டீனேஜில் இருப்பவர்களும் பெரியவர்களும்கூட சத்து மாவை சாப்பிட்டுவர, சருமம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். கேழ்வரகு, சோளம், பாதாம், பிஸ்தா, அத்திப்பழம் போன்றவற்றை சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சியோ அல்லது கூழாகவோ குடித்துவந்தால் உடல் மட்டுமல்லாமல் முகமும் பளபளவென இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்