கேரளா ஸ்டைல் "செம்மீன் மப்பாஸ்" செய்வது எப்படி?
மட்டன் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது போலவே மீன், இறால் ஆகிய கடல் சார்ந்த உணவுகளை விரும்பி ரசித்து ருசித்து உண்பவர்களும் அதிகம்.
பலரின் விருப்பமான உணவு அசைவமாக இருந்தாலும், அதில் நமது விருப்பம் எதில் இருக்கிறது என்பதும் முக்கியம். சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவது போலவே மீன், இறால் ஆகிய கடல் சார்ந்த உணவுகளை விரும்பி ரசித்து ருசித்து உண்பவர்களும் அதிகம். அந்த வகையில் இன்று நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் காண இருப்பது சற்று வித்தியாசமான கேரளா ஸ்டைல் செம்மீன் மப்பாஸ் குழம்பு செய்வது எப்படி? என்பது பற்றித்தான். இந்த வகை உணவு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நமது வீட்டில் மிகவும் எளிமையாகவும், சுவையாகவும் செய்து அசத்துவது எப்படி என்பதை விளக்கமாக நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம்.
கேரளா ஸ்டைல் செம்மீன் மப்பாஸ் செய்முறை
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்.
பாத்திரம் சூடானதும் 50ml அளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் சோம்பு மற்றும் வெந்தயத்தை போடவும்.
இரண்டும் சேர்ந்து கொஞ்சம் பொரிந்ததும் பொடி பொடியாக நீளவாக்கில் நறுக்கிய இஞ்சியை போட்டு வதக்கவும்.
அதனை தொடர்ந்து சிறிய அளவிலான பச்சை மிளகாயை 5 முதல் 7 வரை இரண்டாக கீறி சேர்த்து வதக்கவும்.
இதன் பிறகு, பொடி பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இறாலில் மசாலா பொருட்களை சேர்க்கும்போது...
வெங்காயம் வதங்கிய பிறகு நன்கு கழுவி வைக்கப்பட்டுள்ள ப்ரான் சேர்த்து அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் முதலில் எடுக்கப்பட்ட திக்கான தேங்காய் பாலை இரண்டாக பிரித்து முதலில் அரை கப் அளவு மற்றும் சிறிதளவு காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்து வேகவிடவும்.
ப்ரான் நன்கு வெந்து மசாலா வாசனை போனதும், மீதமுள்ள திக்கான தேங்காய் பாலை அதில் சேர்த்து விடவும்.
இப்பொழுது குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும் மேலாக கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் செம்மீன் மப்பாஸ் ரெடி.
இதனை ஆப்பம், இடியாப்பம், ஸ்ட்ரீம் பிரட், சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
இறுதியாக தேங்காய் பால் ஊற்றும் தருணம்
இறாலில் உள்ள நன்மைகள்
இறால் (ப்ரான்) மப்பாஸ் என்பது கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.
செம்மீன் மப்பாஸ் என்பது இறால்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகை உணவு வகையாகும். தேங்காய்ப் பால் கொண்டு சமைத்தால் சுவையாக இருக்கும்.
இறாலில் புரதம், வைட்டமின் B6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக உள்ளன.
மேலும் இறாலில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இவை உடலில் சீரான செயல்பாட்டை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது.