"சிக்கன் கஃப்ரியல்" - கோவா ஸ்பெஷல் ரெசிபி!
அசைவ உணவுகளில் எத்தனை வகைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அடிக்கடி எளிமையாக செய்து சாப்பிடுவது என்னவோ சிக்கன் உணவுகளைத்தான்.;
அசைவ உணவுகளில் எத்தனை வகைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அடிக்கடி எளிமையாக செய்து சாப்பிடுவது என்னவோ சிக்கன் உணவுகளைத்தான். சிக்கனில் ஒரு நாளைக்கு ஒரு வெரைட்டி என்று செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் நாம் காண இருப்பது சிக்கன் கஃப்ரியல் செய்வது எப்படி? என்பதைத்தான். இந்த வகை உணவானது இந்தியாவின் கோவா மாநிலத்தில் பிரபலமாக அறியப்படும் உணவுகளில் ஒன்றாகும். சுவையான மூலிகைகள் மற்றும் மசாலா கலவைகளால் செய்யப்படும் இந்த ரெசிபியானது மிகவும் ருசியாகவும் அதேநேரம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதனை மிக எளிமையாக நமது வீட்டில் செய்வது எப்படி என்பதை விளக்கங்களுடன் செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு.
"சிக்கன் கஃப்ரியல்" செய்முறை
அடுப்பை பற்ற வைத்து வாணலி சூடானதும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு , பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு நன்கு கழுவி எடுத்து வைக்கப்பட்டுள்ள சிக்கன் துண்டுகளை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
சிக்கன் போட்டு வதக்குதல்
இதனை தொடர்ந்து 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும். 10 முதல் 15 நிமிடம் வரை அனைத்தும் நன்கு வெந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து கலவையானதும் பிழிந்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கெட்டியான தேங்காய் பாலை கொஞ்சம் ஊற்றி கிளறி விடவும்.
இப்பொழுது மேலாக ஓர் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் கஃப்ரியல் ரெடி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள்.
சிக்கன் கஃப்ரியல் ரெடி
இந்த சிக்கன் கஃப்ரியல் ரெசிபியை, சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால், அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதனை கிரேவியாக மட்டும் இல்லாமல் எலும்புடன் கூடிய சிக்கனாக வாங்கி வறுவல் அல்லது கிரில் சிக்கன் போன்றும் செய்து சாப்பிடலாம்.