செய்து அசத்துங்கள்! பாண்டிச்சேரி ஸ்பெஷல் "இறால் நுங்கு தொக்கு"!
புதுச்சேரியின் கடல் சார்ந்த உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவான பாண்டிச்சேரி இறால் நுங்கு தொக்கு செய்வது எப்படி? என்பதைத்தான் இன்றைய நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் காண இருக்கிறோம்.;
புதுச்சேரி என்றாலே அங்கு விசேஷங்களுக்கு பஞ்சம் இருக்காது. சுற்றுலா தளங்கள் தொடங்கி பாரம்பரிய மிக்க உணவுகள் வரை பலவும் அங்கு விசேஷம்தான். அதிலும் தமிழ் மற்றும் ஃப்ரெஞ்ச் மரபு சார்ந்த பல வித்தியாசமான உணவுகள்தான் பாண்டியில் அதிகம் புழக்கத்தில் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடல் சார்ந்த உணவுகள் அங்கு இன்னும் ஃப்ரெஷ்ஷாகவே கிடைக்கும். அந்த வகையில், புதுச்சேரியின் கடல் சார்ந்த உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவான பாண்டிச்சேரி இறால் நுங்கு தொக்கு செய்வது எப்படி? என்பதைத்தான் இன்றைய நமது ராணி ஆன்லைன் சமையல் பகுதியில் காண இருக்கிறோம். நமது நேயர்களுக்காக சுவை மிகுந்த பாண்டிச்சேரி இறால் நுங்கு தொக்கை எளிமையாக செய்து அசத்துவது எப்படி என சமைத்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் திருப்பதி.
பாண்டிச்சேரி "இறால் நுங்கு தொக்கு" செய்முறை
அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் அதில் 50 முதல் 75 எம்எல் அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகை போட்டு வெடிக்க விட்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பொடியாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் அளவுக்கு வதக்கி அதனுடன் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
இறால் மற்றும் நுங்கை வதக்குதல்
பின்னர், பட்டை, மிளகு, காய்ந்த மிளகாய், முழு மல்லி ஆகியவற்றை லேசாக வறுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து, அதையும் கடாயில் போட்டு வதக்கவும்.
மசாலா அனைத்தும் நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும், கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள இறாலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து, பொடியாக நறுக்கிய நுங்கையும் சேர்த்து வேகவிடவும்.
இரண்டும் ஓரளவு வெந்ததும் முதலில் பிழிந்து எடுக்கப்பட்ட தேங்காய் பாலை ஒரு கப் சேர்த்து, மேலாக கருவேப்பிலை, கொத்தமல்லியை தூவி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
நுங்கு இறால் மசாலாவில் தேங்காய் பால் சேர்ப்பது
இறுதியாக அனைத்து மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து தயாரானதும், கெட்டியாக எடுக்கப்பட்ட தேங்காய் பாலை ஒரு ஸ்பூன் விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கினால் பாண்டிச்சேரி இறால் நுங்கு தொக்கு ரெடி.
இதனை இடியாப்பம், தோசை, பரோட்டா, ரைஸ் போன்றவற்றுடன் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும், மணமாகவும் இருக்கும். மீண்டும் எப்போது சாப்பிடலாம் என்ற உணர்வு ஏற்படும்.
நுங்கு இறால் மசாலாவில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடும் காட்சி
நுங்கில் உள்ள நன்மைகள்
நுங்கில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.
நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் உதவுவது மட்டுமின்றி கோடை காலங்களில் ஏற்படும் அம்மை நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
நுங்கில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன.
தயார் நிலையில் "இறால் நுங்கு தொக்கு"
செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கின்றன.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரி செய்கின்றன.
உடலில் தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன.
கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக காலையில் வாந்தி வருதல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கின்றன.