வாய்க்கு ருசியான வாழைக்காய் பொடி! இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க..!

வாழைப்பழத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பெரும்பாலும் வாழைக்காய்க்கு கொடுப்பதில்லை என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம்.

Update:2025-03-04 00:00 IST
Click the Play button to listen to article

வாழைப்பழத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, பெரும்பாலும் வாழைக்காய்க்கு கொடுப்பதில்லை என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், வாழைப்பழத்தை விட நமது சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவது வாழைக்காய்தான். நாவில் எச்சில் ஊற வைக்கும் வாழைக்காய் பஜ்ஜி தொடங்கி வகை வகையான வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பால்கறி, வாழைக்காய் கோலா உருண்டை என ஏராளமான ரெசிபிக்கள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது சற்று புதுவிதமான வாழைக்காய் பொடி செய்வது எப்படி என்பது பற்றித்தான். வாழைக்காயில் இப்படி ஒரு ரெசிபி இருக்கிறதா என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், மிகவும் பாரம்பரியம் மிக்க ஒரு ரெசிபிதான் இந்த வாழைக்காய் பொடி. மிகவும் ஆரோக்கியமும், அறுசுவையும் நிறைந்த இந்த பொடியை நமது வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி? என்பதை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி.சாரதா சந்திரசேகர்.


வாழைக்காய் பொடி செய்முறை

முதலில் வாழைக்காயை நெருப்பில் வாட்டி தண்ணீரில் போட்டுவிட வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் அதில் நான்கு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் ஒன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை வறுப்பது மட்டுமின்றி அதனுடன் புளியையும் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்பொழுது வறுத்த பொருட்கள் மூன்றையும் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொர பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.


 வாழைக்காயை நெருப்பில் வாட்டுதல் 

இதனை தொடர்ந்து நெருப்பில் வாட்டி எடுக்கப்பட்ட வாழைக்காயை தோலை உரித்து கிரேட்டரில் துருவி எடுத்துக் கொள்ளவும்.

துருவி எடுக்கப்பட்ட வாழைக்காயில் அரைத்து வைக்கப்பட்டுள்ள உளுத்தம் பருப்பு பொடியை தேவையான அளவில் எடுத்து தூவி கடாயில் வைத்து சூடாக்கவும்.

இறுதியாக வாழைக்காய் பொடியின் சுவையை கூட்ட ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வாழைக்காய் பொடி ரெடி.


நெருப்பில் சுடப்பட்ட வாழைக்காயை தோலுரித்து கிரேட்டரில் துருவுதல்

இந்த பொடியை சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். சாம்பார், ரசம் சாதம் போன்றவற்றிற்கு தொட்டும் சாப்பிடலாம்.

வாழைக்காயில் உள்ள பயன்கள்

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சினைகளை சரி செய்வதுடன், நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

வாழைக்காயை நமது உணவில் நாம் சேர்த்து உட்கொள்ளும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, வயிற்று புண் போன்ற செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.


தயார் நிலையில் சுவையான வாழைக்காய் பொடி

வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளது.

100 கிராம் வாழைக்காயில் 30 முதல் 32 சதவிகிதம் கொழுப்பு மட்டுமே உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு சிறந்ததாகவும் உள்ளது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் வாழைக்காயில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்