தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகளவில் வரக்காரணம் என்ன?
வெஜிடெபிள் ஆயில்களில் டிரை கிளிசரைடுகள் அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு அதிகமாக இருப்பதாலும், பதமூட்டிகள் அதிகம் சேர்க்கப்படுவதாலும் நீரிழிவு வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் ஒருவருக்கு நீரிழிவு வருகிறது.
உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களால் தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோயானது அதிக அளவில் வருவதாக தரவுகள் கூறுகின்றன. நீரிழிவு என்றாலே பெரியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்று நிறையப்பேர் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் சிலர் பிறக்கும்போதே நீரிழிவு நோயுடன் பிறப்பார்கள். அதற்கு இன்சுலின் சுரப்பு குறைபாடுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்று இன்சுலின் சுரப்பில் பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது? நீரிழிவில் எத்தனை வகைகள் இருக்கின்றன? இதை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் நீரிழிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் ஷேக் சுலைமான் மீரன்.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது diabetes mellitus என்று சொல்வார்கள். டயாபெட்டிஸ் என்பது அதிகப்படியான சிறுநீர் கழிப்பது. மில்லிடஸ் என்பது அது இனிப்பாக செல்வது. சிறுநீரகத்தில் 180 மி.லி கிராம்தான் சர்க்கரை அளவு இருக்கவேண்டும். ஆனால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதைவிட அதிகமாகும்போது சிறுநீர்மூலமாக வெளியேறும். இதற்குத்தான் நீரிழிவு நோய் என்று பெயர். சர்க்கரை எதனால் அதிகரிக்கிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் டைப் 1, டைப் 2, ஜிடிஎம் என பலவகை டயாபெடிக்ஸ் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
நீரிழிவு நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?
நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகியவை பெரும்பாலும் வரக்கூடியவை. சிறுவர்களுக்கு வருவது டைப் 1. கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலுமாக இல்லாதபோது இந்த பிரச்சினை வரும். கணையத்தில் இன்சுலின் சுரந்தால்தான், நாம் சாப்பிடும் உணவானது குளுக்கோஸாக மாற்றப்படும். அதாவது, குளுக்கோஸானது ரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவு அதிகமாகிவிட்டால் கணையத்துக்கு சிக்னல் சென்று, அங்கிருந்து இன்சுலின் சுரக்கும். அந்த இன்சுலினானது ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துச்சென்று, தசைகள், ஃபேட்ஸ் மற்றும் சிறுநீரகம் போன்ற எல்லா பாகங்களுக்கும் கொண்டுசேர்க்கும். டைப் 1-இல் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது என்பதால் ரத்தத்தில் குளுக்கோஸ் இருந்தாலும் உடலால் அதை பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும். சிறுவர்களுக்கு வரக்கூடிய இந்த பிரச்சினைக்கு இன்சுலின் கொடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாது. டைப் 2 என்பது எல்லாருக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று. இதில் இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனால் குறைவாக இருப்பதால் சரியாக வேலைசெய்யாது. சரியாக வேலைசெய்யாததால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தாலும் செல்களால் அவற்றை கிரகிக்கமுடியாது. இதனால் சர்க்கரை அளவு மேலும் அதிகரிக்கும். டைப் 2 நீரிழிவு நிறையப்பேருக்கு வர முதன்மை காரணம் வாழ்க்கைமுறை. மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது, சாப்பிடும் உணவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் கோதுமையை அரைத்து பயன்படுத்தினோம். ஆனால் இப்போது எல்லாமே பதப்படுத்தப்பட்ட வடிவில் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. அதுபோக ஃபாஸ்ட் புட் அதிகளவில் சாப்பிடுகிறோம். அடுத்து புகைப்பழக்கம் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளுதலாலும் நீரிழிவு அதிகரிக்கிறது. அதுபோக, உட்கார்ந்த இடத்திலேயே வேலைபார்ப்பதாலும் இந்த பிரச்சினை வருகிறது. ஆனால் இந்தியர்களில் தென்னிந்தியர்களுக்கு மரபணுரீதியாகவே நீரிழிவு வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.
உடலில் சர்க்கரை நோய்வரக் காரணமான இன்சுலின் சுரப்பு குறைபாடு
சுகர் வந்தாலே டயாபெடிக்ஸ் வருமா? சுகர் என்பது டயாபெட்டிக்ஸின் ஆரம்ப நிலையா?
இரண்டுமே ஒத்த வார்த்தைகள்தான். ரத்தத்திலுள்ள சுகர் லெவல் அதிகரித்தால் அதை டயாபெடிக்ஸ் என்று சொல்கின்றனர். சாப்பிடுவதற்கு முன்பு 100க்கு கீழ் இருக்கவேண்டும். சாப்பிட்ட 2 மணிநேரத்திற்கு பின்பு 140க்கு கீழ் இருக்கவேண்டும். வெறும் வயிற்றில் இருக்கும்போது பரிசோதித்து 126க்கு மேல் இருந்தாலோ அல்லது சாப்பிட்ட பிறகோ, குளுக்கோஸ் குடித்தபிறகோ 200க்கும் மேல் போனாலோ நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம். இப்படி சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களைத்தான் டயாபெடிக்ஸ் நோயாளி என்கிறோம்.
ஒருவருக்கு சுகர் வருவதற்கு என்ன காரணம்?
தென்னிந்தியர்களுக்கு மரபணுரீதியாகவே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வருகிறது. இரண்டாவது வாழ்க்கைமுறை. இப்போது 8, 9 மணிக்கெல்லாம் படுத்து தூங்குபவர்களை பார்ப்பதே அரிது. டிவி பார்த்துவிட்டு மிகவும் லேட்டாக தூங்குகின்றனர். அடுத்து மன அழுத்தம் எல்லாருக்குமே அதிகமாக இருக்கிறது. உணவு பழக்கவழக்கங்களும் மோசமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய் முதற்கொண்டு எல்லாமே மாறிவிட்டது. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் போன்றவற்றைத்தான் பயன்படுத்தினோம். இப்போது வெஜிடெபிள் ஆயில் என்று சொல்லக்கூடிய பாமாயில், ரைஸ் பிராண்டு ஆயில், சோயா ஆயில் என நிறைய பயன்படுத்துகிறோம். இதுபோன்ற வெஜிடெபிள் ஆயில்களில் டிரை கிளிசரைடுகள் அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு அதிகமாக இருப்பதாலும், பதமூட்டிகள் அதிகம் சேர்க்கப்படுவதாலும் நீரிழிவு வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் ஒருவருக்கு நீரிழிவு வருகிறது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் டைப் 2 டயாபெட்டிக் வரும். ஆனால் இப்போது 25 வயது நபருக்குக்கூட டைப் 2 டடயாபெடிக்ஸ் வருகிறது.
ஜங்க் உணவுகளால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இனிப்பு சாப்பிட்டாலே சுகர் வந்துவிடும் என நிறையப்பேர் பயப்படுகிறார்கள். இனிப்பு சாப்பிட்டாலே சுகர் வருமா?
கணையம் நன்றாக வேலைசெய்யும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் வெள்ளை சர்க்கரையை சாப்பிட்டவுடன் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். இந்த சிக்னல் கணையத்துக்கு போகும். உடனே அங்கு இன்சுலின் சுரக்கும். நிறைய சர்க்கரை சேர்த்துக்கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் இன்சுலின் தீர்ந்து அதன் சுரப்பு முற்றிலும் நின்றுவிடும் அல்லது குறைந்துவிடும். அப்படி இன்சுலின் கட்டுப்பாடு இல்லாதபோது சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்துக்கொண்டே போகும். எனவே டயாபெடிக்ஸ் இல்லாதவர்கள் இனிப்பு சாப்பிடலாம். ஆனால் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. மற்றபடி கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு பிறக்கும்போதே சர்க்கரை இருப்பதாக சொல்கிறார்கள். அதை தவிர்க்கமுடியுமா?
பிறக்கும்போதோ அல்லது இளம்வயதிலோ வருவது டைப் 1 டயாபெடிக்ஸ். நோயெதிர்ப்பு சக்தி மாறுபாட்டால் இது வரும். அதாவது நமது உடலே நமது கணையத்துக்கு எதிராக வேலைசெய்து, இன்சுலின் சுரக்கக்கூடிய பீட்டா செல்களை அழித்துவிடுவதால் இன்சுலின் சுரப்பு என்பதே முற்றிலும் இருக்காது. எனவே நாம் சாப்பிடும் உணவுகள் எல்லாமே சர்க்கரையாக மாறி, ரத்தத்தில் எப்போதுமே சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பே இருக்காது என்பதால் அவர்களுக்கு இன்சுலின் ஊசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த பிரச்சினையுடன் சாதித்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர். உதாரணத்திற்கு, கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம் டைப் 1 டயாபெடிக்ஸால் பாதிக்கப்பட்டவர். ஆனால் இன்றுவரை அவர் நலமுடன் இருக்கிறார். இந்த டைப் 1 இன்சுலினை பொருத்தவரை ஒரு நேரம்கூட இன்சுலின் எடுப்பதை தவிர்க்கக்கூடாது. காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் கட்டாயம் எடுக்கவேண்டும். ஒரு டோஸ் போடாவிட்டாலும் டயாபெடிக்ஸ் கீட்டோ அசிடோசிஸ் என்று சொல்லக்கூடிய சிக்கல் ஏற்படும். அதனால் சர்க்கரை அதிகமாகி மயக்கநிலைக்கு சென்றுவிடுவார்கள். சிலர் கோமாவரைகூட போக வாய்ப்புகள் இருக்கின்றன.
வெள்ளை சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் நீரிழிவு வரும்
டயாபெட்டிக்ஸ் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
டயாபெடிக்ஸ் வராமல் இருக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் டயாபெடிக்ஸை தவிர்க்கமுடியாது. இப்போது நாம் ஒருநாளில் ஒருவேளையாவது வெளியே சாப்பிடுகிறோம். அந்த உணவுகளில் பதமூட்டிகள், அஜினமோட்டோ, கலப்பட எண்ணெய் ஆகியவை இருக்கும். எனவே ஃபாஸ்ட் புட்ஸ்களை தவிர்த்து நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடவேண்டும். வயிற்றைச் சுற்றி ஃபேட்ஸ் இல்லையென்றால் சுகர் வராது. எனவே டயட் மற்றும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம். டயாபெடிக்ஸ் என்பது ஸ்லோ பாய்சன் போன்றது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றினால் 35 வயதில் வரக்கூடிய நீரிழிவு 50 வயதுக்கு பிறகு வரும். இதனால் டயாபெடிக்ஸை தள்ளிப்போடமுடியும்.
வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் சுகர் வரும் என்று சொன்னீர்கள். அதுபோல அரிசி, மைதா போன்ற வெள்ளை உணவுகளை சாப்பிட்டாலும் டயாபெடிக்ஸ் வருமா?
வெள்ளை நிறத்தில் இருக்கும் எதுவாக இருந்தாலும் அது உடலுக்கு கேடுதான். சர்க்கரை, மைதா, அரிசி, கிரீம் போன்றவற்றை அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டு அல்லது கருப்பட்டியை பயன்படுத்துவது நல்லது.
எந்தவகை சிகிச்சை எடுத்தாலும் தொடர் பரிசோதனை அவசியம்
அலோபதியில் சர்க்கரைக்கு வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டுமென்கிறீர்கள். ஆனால் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவமுறைகளில் குறிப்பிட்ட அளவுக்கு பிறகு மருந்து எடுக்க தேவையில்லை என்கிறார்கள். இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?
எந்த மருத்துவமுறையை பின்பற்றினாலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இதில் டயட், உடற்பயிற்சி, சிகிச்சை மற்றும் தொடர் பரிசோதனை அவசியம். தொடர் பரிசோதனை என்பது கொடுக்கும் சிகிச்சை சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவே. அலோபதியை பொருத்தவரை வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டும்.
சமூக ஊடக வீடியோக்களில் சில பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் சர்க்கரை வராது என்கிறார்களே. அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?
எதுவாக இருந்தால் அறிவியல்பூர்வமாக நிரூபணமாக வேண்டும். ஆதாரத்தை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சைமுறைதான் அலோபதி. ஒரு மருந்து கொடுக்கும்போது அதன் விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து நமக்கு தெரியும். அதற்கு பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆதாராமில்லாமல் யூடியூப்களில் போடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முயற்சித்தாலும் பரிசோதனை மேற்கொண்டு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.