புற்றுநோய் இருப்பவர்களும் நல்லபடியாக குழந்தை பெறலாம்! - IVF நிபுணர் ராஜலட்சுமி

இன்றைய வாழ்க்கை சூழலில் குழந்தையின்மை பிரச்சினை என்பது தலையாய ஒன்றாக உள்ளது. அது சில தம்பதிகளை மன அழுத்தத்திற்கும் கொண்டு சென்று விடுகிறது.;

Update:2025-04-08 00:00 IST
Click the Play button to listen to article

இன்றைய வாழ்க்கை சூழலில் குழந்தையின்மை பிரச்சினை என்பது தலையாய ஒன்றாக உள்ளது. அது, சில தம்பதிகளை மன அழுத்தத்திற்கும் கொண்டு சென்று விடுகிறது. அந்த பிரச்சினைகளை ஓரளவு சரி செய்ய IVF, IUI போன்ற சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்தாலும் எல்லோருக்கும் அதுபற்றிய முழு புரிதல் கிடைத்துவிடுவதில்லை. தொழிநுட்பம், சோசியல் மீடியா போன்றவை அதிகம் வளர்ந்து இருந்தாலும், இந்த சிகிச்சை முறைகள் குறித்து நிறைய விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தாலும் இன்னும் பலருக்கு ஒருவித அச்சமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில், ஐவிஎஃப் சிகிச்சை முறை குறித்தும், அதனை எளிதாக கடந்து எப்படி குழந்தைப்பேற்றினை பெற முடியும் என்பது குறித்தும், செயற்கை கருத்தரிப்பு நிபுணர் திருமதி. ராஜலட்சுமி நமக்கு அளித்திருந்த நேர்காணலின் இரண்டாம் பகுதியை இங்கே காணலாம்.

IVF, IUI சிகிச்சையை தொடர்ந்து எடுப்பவர்கள் நிறைய ஊசிகள் போட்டுக்கொள்வார்கள். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

IUI சிகிச்சையில் போடப்படும் ஊசிகளில் பெரிதாக பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. அதேபோன்று IVF சிகிச்சையிலும் பக்க விளைவுகள் இருப்பதாக சொல்லிவிட முடியாது. ஆனால் ஹார்மோன் ஊசிகள் போடுவதால், உடல் எடை கூடுதல், வாந்தி, வயிற்று வலி, வயிறு உப்புசம் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். மிகவும் அரிதாக ஹைப்பர் சின்ட்ரோம் என்ற பிரச்சினை வரும். அதிலும் பிசிஓஎஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு செய்யப்படும் ஐவிஎஃப் சிகிச்சையில்தான் அவர்களின் சினைப்பை அதிக ரெஸ்பான்ஸ் கொடுக்கும்பொழுது இந்த ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் ஏற்படுகிறது. அந்த மாதிரியான பிரச்சினைகளை கையாள்வதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் பிரச்சினை வராதபடிதான் இப்போது மருந்துகள் கொடுக்கின்றோம். இது ஒன்று மட்டும்தான் ஐவிஎஃப் சிகிச்சையில் உள்ள பிரச்சினை. மற்றபடி ஹார்மோன் ஊசிகளால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.


IUI சிகிச்சையில் போடப்படும் ஊசிகளில் பக்கவிளைவுகள் இல்லை - மருத்துவர் ராஜலட்சுமி

தைராய்டு, பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் இயற்கையாக கருத்தரிப்பது கடினம் என்று கூறுவார்கள். அப்படியான பிரச்சினையோடு வருபவர்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?

பிசிஓஎஸ், ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு ரிஸ்க் ஃபேக்டர் என்று பார்த்தால், உடல் பருமன்தான். அவர்களை உடல் பருமனை குறைத்து கொண்டு வாருங்கள் என்றுதான் முதலில் அறிவுறுத்துவோம். தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மருந்தின் மூலமாக கண்ட்ரோலாகா இருக்கிறதா என்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற மருந்தை கொடுத்து காத்திருக்க சொல்லுவோம். இந்த பிரச்சினையோடு வருபவர்களுக்கு உடனே ஐவிஎஃப் சிகிச்சையை தொடங்கி விடுவது இல்லை. மூன்று மாதம் வரை அந்த பிரச்சினைகளை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துதான் சிகிச்சையை ஆரம்பிக்கிறோம். ஏனென்றால் அப்போதுதான் தரமுள்ள கருமுட்டைகளை கொண்டு வந்து குழந்தை உண்டாவதற்கான வாய்ப்புகளை உண்டாக்க முடியும்.

திருமணமாகி குழந்தை பேற்றினை தள்ளிப்போடும் தம்பதிகளுக்கு ஒரு மருத்துவராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும்?

இந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதை ஒரு பெரிய முன்னேற்றமாக நான் பார்க்கிறேன். குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது தனிப்பட்ட விருப்பம் என்றாலும் கூட, வயதையும் மனதில் வைத்து முடிவெடுப்பது என்பது மிகவும் நல்லது. 32 வயதை தாண்டும்போது மருத்துவரை அணுகி தனக்கு என்னென்ன மாதிரியான ரிஸ்க் ஃபாக்டர்ஸ் இருக்கிறது? இப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? கருமுட்டைகள் நன்றாக இருக்கிறதா? போன்ற ஆலோசனைகளை கேட்டு தெரிந்து பெற்றுக்கொள்வது நல்லது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் ஒன்றிரண்டு வருடம் தள்ளிப்போடுவது தவறில்லை. 34, 35 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனையை பெற்று குழந்தைப் பேற்றிற்கு தயாராவது நல்லது என்பது என்னுடைய கருத்து.


32 வயதை தாண்டும் பெண்கள் கருத்தரிப்பு தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது

இந்த துறையில் நீண்ட காலமாக பணியாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். ஃபெர்ட்டிலிட்டி தொடர்பாக நிறைய சிகிச்சைகள் வழங்கி வருகிறீர்கள். இதில் நீங்கள் சந்தித்த சவால்கள் ஏதும் இருக்கிறதா?

ஐவிஎஃப் சிகிச்சையை பொறுத்தவரை கவுன்சிலிங் என்பது மிகவும் முக்கியமானது. நிறைய பேர் ஃபைனான்ஷியல் பயத்தோடும், சிகிச்சை வெற்றி பெறுமா? என்ற பயத்தோடும் வருவார்கள். இது இரண்டிலுமே பேஷண்ட்க்கு நாம் நம்பிக்கையை கொடுக்கணும். மற்றபடி எடுத்துக்கொண்டால் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டியூபில் கரு தங்கினால் அதை எந்த பிரச்சினையும் இல்லாமல் எப்படி சரி செய்வது என்பதை கவனிக்க வேண்டும். சிலருக்கு இரட்டை குழந்தைகள் உருவாகும். அப்படியான நிகழ்வின்போது அந்த இரட்டை குழந்தைகளை எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைமாதம் வரை கொண்டு சென்று எப்படி டெலிவரி செய்வது என்பதெல்லாம் சவால். இப்பொழுது ஆண்களின் விந்து எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருக்கும் பொழுது அதற்கு சிகிச்சை அளித்து சக்ஸஸ் கொடுப்பது என்பது ஒரு சவால். சில ஆண்களுக்கு விந்தணு கவுண்ட் ஜீரோவில் இருக்கும். அவர்களுக்கு ஐவிஎஃப் சிகிச்சை அளித்து வெற்றி கொடுப்பதும் ஒரு சவால்தான். இப்படி நிறைய சவால்களை கடந்து நான் நிறைய வெற்றிகள் கொடுத்து இருக்கிறேன்.


ஐவிஎப் சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்

திருமணம் செய்துகொள்ளாமல் சில பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள். அந்த மாதிரியான கேசஸ் உங்களிடம் வந்து இருக்கிறார்களா?

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? என்று யோசிக்கும் பெண்களை தாண்டி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று குழந்தை மற்றும் திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் இருக்கிறார்கள். அப்படியான பெண்களின் வயது 35-க்கு மேலே இருக்கிறது என்றால் எக் ஃப்ரீசிங் என்ற முறை இருக்கிறது. அதாவது கருமுட்டைகளை வெளியே எடுத்து, உறைய வைத்து சேகரித்து பின்பு விரும்பும் நேரத்தில் கரு முட்டைகளை கருத்தரிக்க உதவ செய்வது. இதை எல்லா பெண்களுக்கும் பரிந்துரை செய்வது கிடையாது. கேன்சர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களின் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பாக அவர்களின் கருமுட்டையை ஐவிஎஃப் மூலமாக ஹார்மோன் ஊசி செலுத்தி எக் ஃப்ரீசிங் செய்து வைத்துக்கொள்ளலாம். அவர்கள் சிகிச்சை முடித்த பிறகு ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

IVF சிகிச்சைக்கு வருபவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்?

ஐவிஎஃப் சிகிச்சை எல்லோருக்கும் தேவைப்படுவது இல்லை. எடுத்தவுடன் எந்த மருத்துவரும் இந்த சிகிச்சையை பரிந்துரை செய்ய மாட்டார்கள். சில பேஷண்ட்ஸ் நேரடியாக ஐவிஎஃப் சிகிச்சைக்கு போவது மாதிரியாக இருக்கும். இரண்டு கருக்குழாயிலும் அடைப்பு இருப்பவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆண்களின் விந்தணு ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருந்தால் தாமதிக்காமல் இந்த சிகிச்சைக்குள் செல்வது நல்லது. ஆறு முறை ஐவிஎப் சிகிச்சை செய்தவர்கள் இன்னும் செய்வீர்களா என்றெல்லாம் கேட்பார்கள். அவர்களும் அவர்களின் வயது, ஃபேக்டர், எக் கவுண்ட் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஐவிஎஃப் சிகிச்சைக்குள் போவது நல்லது.


கருமுட்டையை எக் ஃப்ரீசிங் செய்து பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளுதல்

நீங்கள் இந்த துறையில் எத்தனை ஆண்டுகளாக பயணித்து வருகிறீர்கள்? உங்களை பற்றி சொல்ல முடியுமா?

நான் இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 18 முதல் 20 ஆண்டுகள் ஆகிறது. சில நிகழ்வுகளை குறிப்பாக குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டு வருபவர்களை மருத்துவராக பார்ப்பதை விட பெண்ணாக இருந்து பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கும். குழந்தை எல்லோராலும் பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு அந்த பாக்கியம் தள்ளி போகிறது. அதனால் குழந்தையே பெற்றுக்கொள்ள முடியாது என்று நினைப்பதை மாற்றிக்கொள்ள சொல்லி முதலில் அறிவுறுத்துவேன். அப்படி வருத்தத்தோடு வந்து சிகிச்சை முடிந்து கையில் இரட்டை குழந்தைகளோடு அவர்கள் குடும்பமாக சேர்ந்து மகிழ்ச்சியோடு செல்லும் பொழுது நாம் ஏதோ இமாலய சாதனையே செய்துவிட்டதுபோல் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இதுபோன்ற நிகழ்வுகளால் இரண்டு குடும்பங்களை சந்தோசப்படுத்தினோம் என்ற ஆத்ம திருப்தி எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற IVF சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அனைவருக்குமே இருக்கும்.

உங்கள் மருத்துவமனையில் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சினைகளுக்கு என்னென்ன மாதிரியான தீர்வுகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?


கருப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை 

இன்றைய காலத்தில் லேப்ரோஸ்கோப்பி, அதிநவீன சிகிச்சை முறையில் மருத்துவத்துறைக்கு கிடைத்திருக்கிற ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதிலும் கருப்பை தொடர்பான சிகிச்சைகளை diagnosis செய்வது மட்டுமின்றி கருக்குழாய் அடைப்பு பிரச்சினைகளை எளிதாக சரி செய்யவும் இந்த லேப்ரோஸ்கோப்பி பெரிதும் உதவுகிறது. அதேபோன்று கருமுட்டையில் சிஸ்ட் அல்லது கட்டி வந்தால் அதை ஆராய்ந்து அகற்றவும் இந்த லேப்ரோஸ்கோப்பி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பிசிஓஎஸ் என்று சொல்லக்கூடிய நீர்கட்டிகள் மற்றும் கருப்பையின் சுவரில் வரக்கூடிய நார்த்திசுக்கட்டிகளை அகற்றவும் உதவுகிறது. இப்படி நிறைய பயனுள்ள சிகிச்சை முறைகள் இதில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்