புற்றுநோய்க்கு சித்தர்கள் கூறிய மருந்து! - விளக்குகிறார் சித்த மருத்துவர் திருமதி.வெண்தாமரை செல்வி
புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வலிகளை சித்த மருத்துவத்தின் மூலம் எளிதாக குணப்படுத்த முடியுமா என்பது பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி.
ஒவ்வொரு வாரமும் நமது ராணி ஆன்லைன் ஆரோக்கியப் பகுதியில், உடல்நலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவ அறிஞர்களின் நேர்காணல்களை காண்கிறோம். அந்த வகையில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வலிகளை சித்த மருத்துவத்தின் மூலம் எளிதாக குணப்படுத்த முடியுமா? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எவை? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் நேர்காணலை இக்கட்டுரையில் காணலாம். இதற்காக, அண்ணா சித்த மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு சித்த மருத்துவர் திருமதி. வெண்தாமரை செல்வி, தனது அறிவுப் பகிர்வின் மூலம், புற்றுநோயை எதிர்கொள்ள சித்த மருத்துவம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், அந்நோயின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே போக காரணங்கள் என்ன?
அந்த காலத்தில் எல்லாம் யாரோ ஒருவருக்குத்தான் புற்றுநோய் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய சூழலில் புற்றுநோய் என்பது ஒரு காய்ச்சல், சளி போன்று பொது நோயாக மாறிவிட்டது. காரணம் இன்று மாறியுள்ள உணவு முறைகள் மற்றும் அதில் கலக்கப்படும் ரசாயனப்பொருட்கள். இன்றைய இளைஞர்களும் சரி, பெரியவர்களும் சரி வெளியில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளைதான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஸ்ட்ரீட் புட் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதன் நிமித்தமாக நிறைய வீடுகளில் முதல் நாள் சமைத்த உணவை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்தி அடுத்த நாள் அதனை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறார்கள். ஆனால், நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றால், இப்படி ரீ ப்ராஸஸ் செய்யப்படும் உணவுகள், கார்சினோஜென் (Carcinogen) என்று சொல்லக்கூடிய புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக மாறுகிறதாம்.
உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிட கூடாது - சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி
இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே தேரன் என்கிற சித்தர், பிணி அணுகா விதியில் “முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அதனை அருந்தோம்” என்று கூறியுள்ளார். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றத்தால் சின்ன குழந்தையிலிருந்தே அதிக கலோரி நிறைந்த உணவுகளை கொடுக்கிறோம். உடல் உழைப்பு குறைவாக இருக்கும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால், உணவு செரிக்காமல் வயிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும்.
பெரும்பாலும் புற்றுநோய்க்கு ஆங்கில மருத்துவத்தையே மக்கள் அதிகம் அணுகும் நிலையில், சித்த மருத்துவத்தில் புற்றுநோய்க்கென்று என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?
புற்றுநோய் என்றவுடன் கீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகிய 3 சிகிச்சைகள்தான் உள்ளதாக பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலேயே புற்றுநோய் தொடர்பான பாடத்திட்டத்தினை வைத்து அதில் என்னென்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்று ஆங்கில மருத்துவத்தை பற்றிதான் கூறுகின்றனர். சித்த மருத்துவம் குறித்து 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த நாட்கள் இருக்கின்றன. அது நம் நாட்டு மருத்துவம். ஆனால், இன்றைக்கு அப்படியான பாடத்திட்டங்கள் இல்லாததால் சமுதாயத்திற்கு நமது நாட்டு மருத்துவத்தின் பெருமை தெரியவில்லை. அதனால்தான் இன்று நவீன மருத்துவத்தை நோக்கி பெரும்பாலும் பயணிக்கிறார்கள்.
சித்த மருத்துவத்தில் 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படும் புற்றுநோய் சிகிச்சை
சித்த மருத்துவத்தில் புற்றுநோய் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று கிடையாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அவர்களுடைய பல நூல்களில், அதாவது ‘அகத்தியர் வைத்திய வல்லாதி’, ‘புலிப்பாணி வைத்தியம்’, ‘தேரையர் யமக வெண்பா’, ‘தேரையர் தைல வருக்கச் சுருக்கம்’, ‘போகர் ஏழாயிரம்’ போன்றவற்றில் புற்றுநோய் தொடர்பான குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். இந்த குறிப்புகள் அனைத்துமே அவர்களின் மெய் ஞானத்தினால் உணர்ந்து, வரும் காலங்களில் மக்கள் துன்பப்படும்போது அதற்கான தீர்வையும் சொல்லி வைத்துள்ளனர். புற்றுநோய்க்கு என்று நாங்கள் எந்த வகையான சிகிச்சை முறைகளையும் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே எங்கள் முன்னோர்களான அகத்தியர், தேரன், போகர் போன்றவர்கள் கொடுத்து சென்றுள்ள மருந்துகளைத் தான் சித்தர்கள் கூறிய முறைப்படி தமிழக அரசானது அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் வழங்கி வருகிறது. அந்த மருந்துகள் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் மக்களும் மிகுந்த பயன் அடைகின்றனர்.
சித்த மருத்துவத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதை 5 தூண்களாக பிரிக்கிறோம்.
அதில் முதலாவது என்று பார்த்தால் ஒரு நோயாளி வந்த உடனே அவருக்கு நம்பிக்கையை அளிப்பது. ஏனென்றால் ஒருவருக்கு புற்று என்று வந்தவுடன் மனரீதியான பாதிப்புகள் அதிகமாக வந்துவிடுகிறது. அதனால் அவர்களிடம் இதுவும் வெல்லக்கூடிய நோய்தான் என்ற பாசிட்டிவ்வான எனர்ஜியை கொடுக்கும் பொழுது அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது.
சித்த மருத்துவம் என்பது ஆன்மிகம் சார்ந்தது என்பதால் மருத்துவர்களாகிய நாங்களும் அதை பின்பற்றிதான் சிகிச்சை அளிக்கிறோம். அதனால்தான் இரண்டாவதாக நமக்கு மேலாக ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்ப வேண்டும் என்று பிரேயர் செய்ய சொல்லி அறிவுறுத்துகிறோம்.
சித்த மருத்துவத்தில் முதலில் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்படும் - மருத்துவர்
மூன்றாவது, உணவுமுறை. ஒவ்வொரு புற்றுநோய்க்கும் வெவ்வேறு வகையான உணவு முறைகளை பின்பற்ற சொல்லி பரிந்துரை செய்கிறோம். சித்த மருத்துவத்தில் பஞ்ச முட்டி கஞ்சி என்ற ஒன்று உள்ளது. இதற்கு முன்பாக சித்த மருத்துவ ஆணையராக இருந்த திருமதி.மைதிலி ராஜேந்திரன் அவர்கள் அரசு அனுமதியுடன் அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அனைவருக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்த கஞ்சியை குடிக்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு எடைகுறைவு ஏற்படும். அந்த பிரச்சினையும் இந்த கஞ்சி குடிப்பதன் மூலம் சரியாவது மட்டுமின்றி எடையையும் அதிகரிக்கச் செய்கிறது.
நான்காவது, சித்தர்களின் யோகா முறைகளை பின்பற்றி புற்றுகளுக்கு தகுந்த யோகாசன பயிற்சிகளை வழங்குகிறோம். அதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.
ஐந்தாவதாகதான் சித்தர்கள் கூறிய மருந்துகளை சிகிச்சைக்குள் கொண்டு வருகிறோம். சித்தர்கள் ஏற்கனவே வாய்ப்புற்று, மார்பகப்புற்று, குடல் புற்று, ஆசனவாய் புற்று என ஒவ்வொரு புற்றுக்கும் என்னென்ன மருந்துகளை கொடுக்க வேண்டும் என்று ஓலைச்சுவடிகளை எழுதி வைத்து இருக்கிறார்கள். அதை பின்பற்றி நோயாளிகளுக்கு நாங்கள் மருந்துகளை வழங்கும்பொழுது நல்ல பலன் கிடைக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் பஞ்ச முட்டி கஞ்சி
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை இவ்வளவு காலம்தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். இதற்கு மேல் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்றெல்லாம் நாங்கள் கூறுவது இல்லை. ஏனென்றால் மரணம் என்பது நம்மால் தீர்மானிக்கப்படுவது கிடையாது. நீ நான்கு நாள்தான் உயிரோடு இருப்பாய் என்று கூறிக்கொண்டே இருந்தால் அந்த நோயாளி நம்பிக்கையிழந்து சீக்கிரமாகவே இறந்து விடுவார். அதை சித்த மருத்துவர்களாகிய நாங்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு நாங்கள் தன்னம்பிக்கையை கொடுத்து, இருக்கும்வரை புற்றுநோயை எதிர்த்து போராட சொல்லிக் கொடுக்கிறோம். சித்த மருந்துகளை உட்கொள்ளும் புற்றுநோயாளிகளிடம் நாங்கள் பார்த்த நன்மை என்னவென்றால் அவர்கள் படுத்த படுக்கையாக இல்லாமல், இறக்கும் தருவாயில் எந்தவித சிரமும் படாமல் அந்த மரணம் கூட அவர்களுக்கு சுகமாக இருப்பதுதான்.
புற்றுநோயால் பாதிக்கப்படுவோருக்கு, முடி உதிர்வு, அழகு குறித்த பயம் இருக்கிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் என்ன மாதிரியான சிகிச்சையை நீங்கள் வழங்குகிறீர்கள்?
ஆங்கில மருத்துவத்தில் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும்பொழுது முடி உதிர்வு என்பது அதிகமாக இருக்கும். இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகவும் நிறைய பேருக்கு உள்ளது. இருப்பினும் இன்று மக்கள் புற்றுநோய் சிகிச்சை குறித்து நல்ல விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அதனால்தான் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பிக்கும்போதே இணைப்பு மருந்தாக சித்த மருத்துவத்தையும் இணைத்துக் கொள்கிறார்கள். சித்த மருத்துவத்தில் உடம்பை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளக்கூடிய காயகல்ப மருந்துகள் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்தவர்கள் கீமோதெரபி சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பாக அந்த மருந்துகளை கேட்டு மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும்போது முடி உதிர்வது, அழகு பாதிப்பு போன்ற எந்த பிரச்சினைகளும் இருக்காது. நான் ஒரு புற்றுநோயாளி என்று சம்மந்தப்பட்டவரே கூறினால் தவிர கண்டுபிடிக்க வாய்ப்பே இருக்காது.
கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது
புற்றுநோய் சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியுமா?
புற்றுநோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் அட்வான்ஸ் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எந்த மருத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பதை நோயாளிதான் முடிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயந்து சித்த மருத்துவத்திற்கு வருவார்கள். அப்பொழுது நாங்கள் இரண்டு மாதம் வரை அவர்களுக்கு சித்த மருந்துகளை கொடுப்போம். பிறகு அரசு மருத்துவமனையிலோ அல்லது அடையார் புற்றுநோய் மருத்துவமனையிலோ அந்த புற்று எந்த அளவில் இருக்கிறது என்பதை நோயாளிக்கு விளக்கி அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாருங்கள். பயப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தி அனுப்புவோம். அதேபோன்று கீமோதெரபி சிகிச்சை எடுத்துகொள்ளுபவர்கள் வயிறு, வாய் எல்லாம் புண்ணாகி சிரமப்படும் பொழுது அவர்களுக்கும் காயகல்ப மருந்துகள் கொடுக்கிறோம். அப்படி ஆங்கில மருத்துவ சிகிச்சை, சித்த மருத்துவ சிகிச்சை இரண்டையும் இணைத்து செய்யும்போது ஓரளவுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கின்றன.