எந்த வியாதியை எல்லாம் அக்குபஞ்சரில் குணமாக்க முடியும்? எதையெல்லாம் குணமாக்க முடியாது?
அக்குபஞ்சர் மட்டுமல்லாமல் எந்த மருத்துவத்திலும் தொடர் சிகிச்சை மூலமாக உடலிலிருக்கும் ஈரப்பதம் முழுவதையும் வெளியேற்றி, அதிகரித்திருக்கும் ஹிஸ்டமைனை குறைத்துவிட்டால் ஆஸ்துமா முழுமையாக குணமடையும்.;
ஒவ்வொரு சிகிச்சைமுறைகளிலுமே பெரும்பாலும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு சிகிச்சைக்கு ஆகும் செலவு, அதனால் கிடைக்கும் பலன்கள், சிகிச்சையின் கால அளவு போன்றவை நபருக்கு நபர் மாறுபடும். பெரிய பெரிய வியாதிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்கும்போது மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் சோர்வு ஏற்படுவதுடன், பக்கவிளைவுகளும் கூடவே வருகிறது. இதுபோன்ற பக்கவிளைவுகளை தவிர்க்க, இயற்கை சிகிச்சைமுறைகளுக்கு பலர் போகின்றனர். குறைந்த செலவில் மருந்து மாத்திரைகளின்றி வியாதிகளை குணப்படுத்துகிற அக்குபஞ்சர் சிகிச்சை குறித்தும், நோயின் அடிப்படை எப்படி கண்டறிந்து குணப்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் அக்குபஞ்சர் மருத்துவர் லூர்தர் சேத்.
ஆஸ்துமா எதனால் வருகிறது? இதை அக்குபஞ்சரில் குணப்படுத்த முடியுமா?
ஆஸ்துமா என்பதை உடலில் அதிகப்படியான ஈரப்பதம் என்று குறிப்பிடுகிறோம். இதில் சிறுநீரகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலுமே ஈரமாக இருக்கும். இந்த ஈரத்தை மண்ணீரல் உருவாக்குகிறது. ஏனென்றால் உடலில் நீரின் அளவை அதிகரிப்பதும் குறைப்பதும் இதனுடைய வேலைதான். சிறுநீரகத்தைச் சுற்றி ஈரப்பதம் அதிகமாகும்போது அதனுடைய செயல்பாடு குறைந்துவிடும். இதனால் சரியாக மூச்சுவிட முடியாது. எனவே இதில் சரிசெய்யவேண்டியது மண்ணீரலில் இருக்கும் ஈரப்பதத்தைத்தான். அதை சரிசெய்தாலே ஒட்டுமொத்த உடலும் சரியாகிவிடும். இதற்கு நுரையீரலையோ அல்லது சிறுநீரகத்தையோ சரிசெய்ய வேண்டியது இல்லை. உடலில் ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்களுக்கு ஹிஸ்டமைன் என்ற ரசாயன உற்பத்தி அதிகரித்துவிடும். ஹிஸ்டமைன் என்பது ஒருவித நச்சு. இது செல்களில் அதிகரிக்கும்போது குறிப்பிட்ட உறுப்பை சரியாக இயங்கவிடாமல் தடுத்துவிடும். இப்படித்தான் மூச்சுத்திணறல் உருவாகிறது. ஆஸ்துமாவிற்கு கொடுக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் ஆன்டி ஹிஸ்டமைனாகத்தான் இருக்கும். அது செயற்கையாக உருவாக்கப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்தாக இருக்கும் என்பதால் அதனால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த மருந்துகளை எடுக்கும்போது உடனடியாக ஒரே நிமிடத்தில் மூச்சுத்திணறல் சரியாகும். அக்குபஞ்சர் மட்டுமல்லாமல் எந்த மருத்துவத்திலும் தொடர் சிகிச்சை மூலமாக உடலிலிருக்கும் ஈரப்பதம் முழுவதையும் வெளியேற்றி, அதிகரித்திருக்கும் ஹிஸ்டமைனை குறைத்துவிட்டால் ஆஸ்துமா முழுமையாக குணமடையும்.
ஆஸ்துமாவிற்கு அக்குபஞ்சர் சிகிச்சைமூலம் சிறந்த தீர்வு
எந்த வியாதியையும் அக்குபஞ்சரில் குணப்படுத்தமுடியும் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?
கேன்சர் நோயாளிகள் மற்றும் கிட்னி டயாலிசிஸ் நோயாளிகளை சிகிச்சைக்கு எடுப்பதில்லை. ஏனென்றால் அக்குபஞ்சரில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பதில்லை. மற்றபடி ஆஸ்துமா, வெரிக்கோஸ் வெயின், முதுகுத்தண்டு போன்ற பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும். அப்படி தீர்வு கிடைக்காவிட்டால் அதுவரை செலவுசெய்த மொத்த பணமும் திருப்பி கொடுத்துவிடுவோம்.
பெரிய வியாதிகளுக்கு மட்டும்தான் சிகிச்சையளிப்பீர்களா? அல்லது முடி உதிர்வு, கால் ஆணி, சரும ஒவ்வாமை போன்ற சிறிய பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் இருக்கிறதா?
முடி உதிர்வு சூடு சம்பந்தப்பட்டது. சரும பிரச்சினைகளும் சூடு சம்பந்தப்பட்டதுதான். இவை இரண்டையும் சுலபமாக சரிசெய்துவிடலாம். கால் ஆணி என்பது கொஞ்சம் வித்தியாசமான வியாதி. அதையும் 2,3 பேருக்கு சரிசெய்திருக்கிறோம். ஆணி இருந்த தடயமே இல்லாமல் குணமாகிவிட்டது. கால் ஆணி என்பது 10, 20 வருடங்கள்கூட சரியாகாமல் இருக்கும். இதை 100% குணப்படுத்த முடியும்.
மூல வியாதிக்கு அறுவைசிகிச்சைதான் தீர்வு என்கிறார்கள். அதை அக்குபஞ்சரில் எப்படி குணப்படுத்துகிறீர்கள்?
மூலமும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இதற்கு உணவுமுறைகளை மாற்றவேண்டும். உடலில் ஒவ்வொரு செல்லும் எந்த இடத்தில் இருக்கவேண்டும் என தீர்மானிப்பது மண்ணீரல்தான். மண்ணீரல் குறைபாட்டால்தான் மூல வியாதி, குடலிறக்கம் போன்ற வியாதிகள் வருகின்றன. இதற்கு தொடர் சிகிச்சை அவசியம். அதுவே ரத்த மூலமாக இருந்தால் தொடர்ந்து சிகிச்சையெடுத்து வந்தால் முழுமையாக குணமடைந்துவிடும்.
பொறாமை குணத்தால் கூட சிறுநீரக பிரச்சினைகள் வரும்
எந்தெந்த வயதினருக்கு அக்குபஞ்சரில் சிகிச்சையளிக்க முடியும்?
வயதிற்கும் எனர்ஜிக்கும் சம்பந்தம் கிடையாது. பஞ்சபூத சக்திகளும் எல்லா உயிர்களிலும் ஒரே மாதிரித்தான் ஓடும். உயிர்சக்தி என்பது வயதாக ஆக குறையும். இதற்கும் சிகிச்சைக்கும் சம்பந்தம் கிடையாது. அதேசமயம் சிறியவர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் சிகிச்சையின் கால அளவு மாறுபடும்.
குழந்தையின்மை பிரச்சினையை சரிசெய்ய அக்குபஞ்சரில் சிகிச்சை இருக்கிறதா?
விந்தணு உற்பத்தியே இல்லை என்பதை குணப்படுத்த முடியாது. ஆனால் உற்பத்தி குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க சிகிச்சைகள் இருக்கின்றன. பெண்களுக்கு பிசிஓடி, கருமுட்டை வளர்ச்சியின்மை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதுபோன்ற கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் சரியாக வேண்டுமானால் அதில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டும். அக்குபஞ்சர் மருத்துவத்தை பொருத்தவரை சிறுநீரகம் நினைத்தால்தான் குழந்தையை உண்டாக்க முடியும். சிறுநீரகத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தால் குழந்தை பிறக்கும்.
மனநோய்க்கு அக்குபஞ்சரில் சிகிச்சை அளிக்கமுடியாது
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள் பற்றி சொல்லுங்கள்!
எப்போதும் மருத்துவரிடம் செல்லக்கூடாது. இரண்டு விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும். முதலில் ஒவ்வொருவரின் உடலும் என்ன சொல்கிறதோ அதை கேட்கவேண்டும். காலை தூங்கி எழவேண்டும் என்பதிலிருந்து பசி, வேலை, தூக்கம் என அனைத்தையும் உடலே சொல்லும். அதை கேட்காதபோது உடலில் பிரச்சினைகள் வரும். அடுத்து உணவுமுறையில் கவனம் செலுத்தவேண்டும். நெருப்பு தீண்டாத உணவுகளை சாப்பிடவேண்டும் என்று சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர். ஆனால் நாம் சோறு, குழம்பு என்று சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுகிறோம். எனவே முடிந்தவரை சமைக்காத பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். மேலும் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும். அடுத்து தசைகளை ஃப்ரியாக்க யோகா அல்லது ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். இதிலும் முக்கியமானது எண்ண ஓட்டங்கள். பயம், கோபம், துக்கம், கவலை, கோபம், பொறாமை போன்ற உணர்வுகளில் இரண்டை கட் செய்துவிட்டாலே வியாதி வராது. ஒன்று கவலை. மற்றொன்று பொறாமை. நன்றாக பசிக்கிறதே என்று சாப்பிட போகும்போது ஏதேனும் துக்கமான ஒரு செய்தியை கேட்டாலே ஜீரண மண்டலத்தின் இயக்கம் நின்றுவிடும். திரும்ப சாப்பிட்டாலும் செரிக்காது. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் கவலையோடு இருந்துகொண்டு எதையாவது சாப்பிட்டால்கூட அஜீரணத்தை கொடுத்துவிடும். உடலில் பல வியாதிகளுக்கு காரணம் அஜீரணக் கோளாறுதான். இப்படி சிந்தனைகள்மூலம் உருவாகிற வியாதிகள் மண்ணீரலை பாதிக்கும். இதை குணப்படுத்த முடியும். இன்னொன்று பொறாமைப்படுவதால் வரக்கூடிய வியாதிகளை குணப்படுத்த முடியாது. இந்த வியாதிகள் சிறுநீரகங்களை பாதிக்கும். கவலை வெளியே இருந்து வருவது. ஆனால் பொறாமை பிறப்பிலேயே இருக்கக்கூடியது. அது ஈகோ போன்றவற்றின்மூலம் வெளிப்படும். பொறாமைப்படுவதால் நம்மால் யாரையும் வாழவைக்கவோ, மட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் பொறாமையை நிறுத்திக்கொண்டால் நம்மால் நன்றாக இருக்கமுடியும்.
மனநோயை அக்குபஞ்சரில் குணப்படுத்தலாமா?
மனநோயை ‘insane’ பிரச்சினை என்று சொல்வர். இவர்களிடம் கவலையோ, பொறாமையோ இருக்காது என்பதால் இவர்களுக்கு வியாதி இருக்காது. மனநிலையில்தான் இவர்களுக்கு பிரச்சினை இருக்கும். அதனால் அவர்களுக்கு மருந்துகள் மட்டும் கொடுத்து மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டுப்பாட்டில் வைத்து இதுவரை சிகிச்சை அளித்ததில்லை.