தேர்வுக்கு பிள்ளைகளைவிட அதிகம் பயப்படும் பெற்றோர்! அச்சத்தை தவிர்ப்பது எப்படி?

முதலில் பெற்றோர்தான் குழந்தைகளுக்கு ஹீரோ என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலே போதும். தேர்வுகளில் ஃபெயில் ஆனால்கூட அவர்களை திட்டாமல் அறிவுரை கூறவேண்டும். பெற்றோருக்கு படிக்க தெரிகிறதோ இல்லையோ பிள்ளைகளின் புத்தகங்களை வாங்கி பார்க்கவேண்டும். பிள்ளைகள் படுக்கும் பெட் மற்றும் தலையணையின் கவரை 2 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

தேர்வு என்றாலே பிள்ளைகள் எந்த அளவிற்கு பயப்படுகிறார்களோ அதைவிட இப்போது பெற்றோரும் பயப்படுகின்றனர். அதற்கு காரணம் நல்ல மார்க் வராவிட்டால் அக்கம்பக்கத்தினரிடம் பதில் சொல்லமுடியாது என்ற கவலைதான். ஆனால் இப்படி பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் பெற்றோர் தங்களை சரியாக வைத்துக்கொள்கிறார்களா என்று பார்த்தால், நிறைய வீடுகளில் இல்லை என்பதுதான் உண்மை. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர் - பிள்ளைகள் உறவில் இருக்கும் முரண்பாடுகள்தான். பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும், தேர்வு சமயங்களில் பயமில்லாமல் இருக்கவேண்டுமானால் பெற்றோர் அதற்கு முறையான உணவு கட்டுப்பாடு, பிள்ளைகளுடன் மனம்விட்டு பேசி அவர்களுடைய குறைநிறைகளை தெரிந்துகொண்டாலே போதும் என்கிறார் பல்துறை வல்லுநர் தாமரை செல்வி. மேலும் என்னென்ன உணவுகளை, படிக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும்? எப்படி அவர்களை கையாளவேண்டும்? என்பது போன்ற அறிவுரைகளை வழங்குகிறார்.

பிள்ளைகளை தேர்வுக்கு எப்படி தயார்படுத்துவது?

முன்பெல்லாம் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுடைய தேர்வின்போது பெற்றோர் பயப்பட்ட காலம் மாறி, இப்போது ப்ரீ கே.ஜி பிள்ளைகளின் பெற்றோர்கூட தேர்வு குறித்து பயப்படுகிறார்கள். இதனால் 2 வயதிலிருந்தே குழந்தைக்கு நிறைய சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்போது ஆரம்பித்த அழுத்தம் ப்ளஸ்2 முடிக்கும்வரைக்குமே பிள்ளைகளுக்கு இருக்கிறது. இதனால் உடல் மற்றும் மனதளவில் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் படிப்பின்மீதே வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர் அவர்களை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்கு உணவின்மீது கவனம் தேவை. என்ன மாதிரியான உணவு கொடுத்தால் கவனம் படிப்பின்மீது இருக்கும்? மலச்சிக்கலை தவிர்க்க என்ன செய்வது? என்பது போன்றவற்றை கவனிக்கவேண்டும். இதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம். தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய லைட்டான உணவுகளைத்தான் கொடுக்கவேண்டும்.

பிள்ளைகளுக்கு காலை, மதியம், மாலை ஸ்நாக்ஸை எப்படி தேர்ந்தெடுத்து கொடுப்பது?

பிள்ளைகள் விளையாட்டு, நண்பர்களுடன் அரட்டை என ஜாலியாக இருப்பார்கள். இதற்கிடையே தண்ணீர் குடிப்பது, கொடுத்துவிடும் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிடாமல் மறந்துவிடுவார்கள். முளைகட்டிய தானியங்களை ஸ்நாக்ஸாக கொடுக்கவேண்டும். குறிப்பாக, பச்சை பயறு, கருப்பு கொண்டைக்கடலை மற்றும் காராமணி போன்றவை குழந்தைகளின் மூளையை தூண்டும். பயறாக சாப்பிடமாட்டார்கள் என்றால் அதையே குட்டி குட்டி தோசைகளாகவும் கொடுத்துவிடலாம். அதுவே ஸ்வீட் விரும்பும் குழந்தை என்றால் பயிறை அரைத்து அல்வாவாக கிண்டி கொடுக்கலாம்.


குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஸ்நாக்ஸ் மற்றும் அவர்களிடம் மனம்விட்டு பேசுதல்

மதியத்துக்கு பருப்பு சாதத்துடன் ஆம்லெட்டோ, சைவம் என்றால் கேரட், பீன்ஸ் பொரியலோ கொடுத்துவிடலாம். தினசரி உணவில் நிறைய பச்சை பட்டாணி சேர்த்துக்கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் ஜூஸ் கொடுக்கலாம் அல்லது தண்ணீர் குடித்தாலே போதுமானது. குழந்தைகள் மாலை வீட்டிற்கு வந்ததும் முதலில் அவர்களை குளிக்கவைத்துவிட்டு உளுந்து கஞ்சி கொடுக்கவேண்டும். உளுந்தை வறுத்து ஏலக்காய் சேர்த்து அரைத்து, அந்த பொடியில் தினமும் 2 ஸ்பூன் போட்டு காய்ச்சி, வெல்லம் அல்லது நெய் சேர்த்து கொடுக்கலாம். இதை குடிப்பதால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதேபோல் குழந்தைகள் காலை 5 மணிக்கு எழுந்து படிக்கவேண்டுமென்றால் பெற்றோரும் இரவு 8, 9 மணிக்குள் தூங்க செல்லவேண்டும். நாள்முழுவதும் என்ன நடந்தது? என்பது குறித்து பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் தூங்கும்போது ஆழ்நிலை தூக்கத்திற்கு சென்றபிறகு, ‘நீ நன்றாக படிக்கிறாய், நன்றாக வருவாய், உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்பது போன்ற வார்த்தைகளை அவர்களுடைய வலது காதில் மெல்லமாக சொல்லவேண்டும். இதனால் நாம் யார் என்பதை அவர்கள் உணர்வார்கள். குழந்தைகள் பேசுவதை பெற்றோர் கேட்காதபோது அவர்கள் நண்பர்களிடம் பகிர ஆரம்பித்துவிடுவார்கள் அல்லது அமைதியாகிவிடுவார்கள். இதனாலேயே உளவியல் நிபுணர்களிடம் அவர்களை அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

நிறைய குழந்தைகள் பெற்றோரிடம் எதையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். இதை பெற்றோரே வீட்டில் எப்படி சரிசெய்வது?

உணவு கட்டுப்பாட்டின்மூலம் மனதை கட்டுப்படுத்தமுடியும். உதாரணத்திற்கு, தேர்வு நேரங்களில் வாரத்தில் குறைந்தது 3 முறை மஞ்சள் பூசணிக்காயை கொடுக்கவேண்டும். கடும் மன உளைச்சலில் இருப்பவர்கள் மஞ்சள் பூசணியை அப்படியே பச்சையாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மனம் அப்படியே சமநிலைப்படுவதாக நிரூபணமாகியிருக்கிறது. ஹெல்தி டிரிங்க்ஸ் கொடுக்கலாம். புரதம், கால்சியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து கொஞ்சமாக கொடுத்தாலும் ஆரோக்கியமாக கொடுக்கலாம். அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழங்களை கொடுக்கலாம். தினமும் ஒரு வாழைப்பழம் கொடுக்கவேண்டும் என்பதை பழக்கமாக்க வேண்டும். எந்தவகை ரத்தம் என்பதை பொறுத்து அதற்கேற்ப உணவுகளை கொடுக்கலாம். உதாரணத்திற்கு, பி பாசிட்டிவ் ரத்தம் கொண்டவர்களுக்கு வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.


ஹாட் ஆயில் மசாஜ் மற்றும் சாப்பிடும்போது செல்போனை தவிர்த்தல் அவசியம்

ஞாபகசக்தியை அதிகரிக்க கீரை வகைகளை தினம் ஒன்றை வித்தியாசமாக செய்து கொடுக்கலாம். இவை அனைத்திற்கும் மேல் குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். இதனால் மூன்றாம் நபரிடம் பிள்ளைகள் செல்லமாட்டார்கள். முதலில் பெற்றோர்தான் குழந்தைகளுக்கு ஹீரோ என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலே போதும். தேர்வுகளில் ஃபெயில் ஆனால்கூட அவர்களை திட்டாமல் அறிவுரை கூறவேண்டும். பெற்றோருக்கு படிக்க தெரிகிறதோ இல்லையோ, பிள்ளைகளின் புத்தகங்களை வாங்கி பார்க்கவேண்டும். பிள்ளைகள் படுக்கும் பெட் மற்றும் தலையணையின் கவரை 2 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். வாரத்திற்கு ஒருமுறை ஹாட் ஆயில் மசாஜ் கொடுத்து குளிக்கவைக்க வேண்டும். ஹோட்டல்களில் உணவை வாங்கி தருவதைவிட அவற்றை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். குறிப்பாக, தேர்வு நேரங்களில் எண்ணெய் உணவுகள் கொடுக்கக்கூடாது. ஃபுட் பாய்சன் ஆகிவிட்டால் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே உணவில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலே குழந்தைகள் தன்னாலேயே நன்றாக படிப்பார்கள். கைக்குழந்தைகளுக்குக்கூட இப்போதெல்லாம் மொபைல் காட்டித்தான் சாப்பாடு ஊட்டுகிறார்கள். அதற்கு அடிமையாகும்போது அதிலிருந்து வெளிவர கவுன்சிலிங் கூட்டிப்போகிறார்கள். எனவே நிறைய தவறுகள் பெற்றோர்மீதுதான் இருக்கிறது.

தேர்வு நேரம் என்றால் பிள்ளைகளைவிட பெற்றோருக்குத்தான் பயம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூலாக இருக்க என்ன செய்வது?

நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும். அவர்களுக்கு நம்முடைய ப்ளஸ், மைனஸ் தெரியும், பலவீனங்கள் தெரியும். நம்முடைய ப்ளஸ் அனைத்தையும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அதைவிட, பல மடங்காக அவர்கள் திருப்பி கொடுப்பார்கள். உதாரணத்திற்கு, குழந்தைகள் காலையில் சீக்கிரம் எழவேண்டுமானால், அவர்களுக்கு பிடித்த பாடலை போட்டு, சிரித்த முகத்துடன் எழுப்பினால் ஹேப்பியாக எழுவார்கள். நிறைய பெற்றோர் ஒன்பதாம் வகுப்புவரை ஃப்ரீயாக விட்டுவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது பிள்ளைகளைவிட அதிகமாக பயப்படுவார்கள். சில பெற்றோர் குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று கூடவே உட்காருவது, டியூஷனுக்கு கூட்டி சென்று அங்கேயே இருப்பது என எப்போதும் கூடவே இருந்தாலும் அந்த குழந்தையும் கெட்டுப்போய்விடும். ஒரு பெற்றோராக எது எதை எந்த அளவில் கொடுக்கவேண்டுமென பெற்றோருக்கு தெரிந்திருந்தால் போதும்.


தேர்ச்சி பெறாத குழந்தைகளை கையாளும் முறை

தேர்வில் தேர்ச்சி பெறாத குழந்தைகளையும், குறைந்த மதிப்பெண் வாங்கும் குழந்தைகளையும் பெற்றோர் மற்றவர்களுடன் ஒப்பிட்டு திட்டுவதை தவிர்க்க என்ன செய்வது?

மற்றவர்களிடம் மார்க்கை சொல்லவேண்டும் என்பதற்காகவே ரிசல்ட் பயம் என்பது நிறைய பெற்றோருக்கு வருகிறது. நிறைய மார்க் வாங்கிய பலபேர் தேர்ச்சிபெற்ற துறையில் வேலைசெய்யாமல் வேறு ஏதாவது துறையில் வேலை செய்துகொண்டிருப்பார்கள். எனவே பிறக்கும்போதே எல்லா குழந்தைகளுக்குள்ளும் இருக்கும் திறமை என்ன என்பதை கண்டுபிடித்து அதை ஊக்குவிக்க வேண்டும். அடுத்து உணவு கட்டுப்பாடு, தூக்கம் மற்றும் பெற்றோர் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பது போன்றவை சரியாக இருந்தாலே குழந்தைகள் அவர்களுடைய எதிர்காலம் குறித்து யோசிப்பார்கள். பிள்ளைகளுக்கு பிடிக்காத குரூப்பை எடுக்கவைத்துவிட்டு நல்ல ரிசல்ட்டை எதிர்பார்ப்பதே தவறு. பெற்றோர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குழந்தைகளிடமும், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லவேண்டும். ஒருவேளை குழந்தை சரியாக மார்க் எடுக்கவில்லை என்றால் நிறைய வீட்டில் கணவர்கள், உடனே மனைவியை பார்த்து, ‘உன்னுடைய வளர்ப்பு சரியில்லை’ என்று சொல்லிவிடுவார்கள். அந்த பயமே பெண்களுக்கு நிறைய இருக்கும். எனவே பெற்றோர் தங்களுடைய குணங்களை மாற்றிக்கொண்டு குழந்தைகளிடம் நல்லவிதமாக நடந்துகொண்டாலே நல்ல ரிசல்ட் அவர்களிடமிருந்து வரும்.

Tags:    

மேலும் செய்திகள்