இவ்வளவு பிரபலங்களும் இந்த கல்லூரியா? முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் இன்ப அதிர்ச்சி!
திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அமைந்துள்ள, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
ஒரு குழந்தை முதன்முதலில் பள்ளிக்கு செல்லும் போது, அழுதுகொண்டே போகும். மேலும் அது வளர்ந்து தனது பள்ளி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போதும் அழுதுகொண்டே வரும். காரணம் நண்பர்களின் பிரிவு. ஆனால் இந்த அழுகைகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் புன்னகையாக மாறும். ஆம், படித்துமுடித்து ஏதோ ஒரு துறையில் பயணித்துக்கொண்டு, குடும்பம் குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும் போது, திடீரென தனது பள்ளி, கல்லூரி கால நட்பை எதிர்பாராமல் சந்திக்கும் நேரம், முகம் முழுவதும் புன்னகை ததும்பும். ஏய் நீயா அது? எப்படி இருக்க? என்று ஆரம்பிக்கும் பேச்சு, அவரவர்களை தங்கள் பள்ளி கல்லூரி காலத்துக்கு மீண்டும் அழைத்து சென்று, மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும். ஏதோ ஒரு நண்பனை எங்கோ ஒரு இடத்தில் சந்திப்பதே மகிழ்ச்சியை தந்துவிடும்போது, அதுவே பள்ளி கல்லூரிகளின் முன்னாள் மாணவர் சந்திப்பு என்றால், நிச்சயம், விவரிக்க முடியாத பேரானந்தத்தை கொடுக்கும். அந்த வகையில், திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அமைந்துள்ள, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியைதான் தற்போது பார்க்கப்போகிறோம்.
ஆதித்தனார் கல்லூரியின் முகப்பு தோற்றம்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நிறுவிய கல்லூரி
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 1965-ஆம் ஆண்டு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்டது. தான் பிறந்த இடத்திற்கு சேவை செய்யும் நோக்கிலும், அப்பகுதி இளைஞர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கிலும் உயர்ந்த எண்ணத்துடன் கல்லூரியை நிறுவினார். இன்று இந்தக் கல்லூரி 60-ஆம் ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. இதனை ஒட்டி, அதன் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.
சி.பா.ஆதித்தனார் நிறுவிய கல்லூரியின் வைர விழா
கல்லூரியின் நோக்கம்
நேர்மையான அதிகாரிகள், தன்னலமற்ற நிர்வாகிகள், நன்கு கற்றறிந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், அர்ப்பணிப்புள்ள வங்கி அதிகாரிகள், அசாதாரண விளையாட்டு வீரர்கள் என நல்ல குடிமகன்களை உருவாக்குவதையே நோக்கமாக கொண்டுள்ள ஆதித்தனார் கல்லூரி, சொன்னதை செய்துகாட்டும் வகையில் அவ்வாறே தங்கள் மாணாக்கர்களை சமூகத்தில் உலாவவிட்டிருக்கிறது.
இவ்வளவு பிரபலங்களா!
ஆம், ஒரு கல்லூரி இவ்வளவு பிரபலங்களை, தலை சிறந்த தலைவர்களை உருவாக்கியிருக்கிறதா! என்று வியக்கவைக்கும் வகையில் இருந்தது முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு. நீதிபதி, கல்லூரி முதல்வர், காவல்துறை அதிகாரி, வருமான வரித்துறை அதிகாரி, வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள், கல்வி நிலையங்களின் நிறுவனர்கள், பெரிய வியாபாரிகள், பலருக்கு வேலை கொடுக்கும் பிசினஸ் மேன்கள், நிறுவனத்தின் சிஇஓக்கள் என்று ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பல்வேறு துறைகளிலும் தங்களின் கால் தடங்களை அழுத்தமாக பதித்து, சமூகத்தில் முத்துக்களாய் ஜொலித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் மாணவரான ஆச்சிமசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக்
கண்கொள்ளாக் காட்சி
சமூகத்தில் பெரிய ஆட்களாக இருந்தாலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் அனைவரும், தங்களை மீண்டும் மாணவர்களாகவே உணர்ந்து, ஏற்றத்தாழ்வின்றி, தங்கள் கல்லூரி கால தோழமைகளை சந்தித்து, நட்பை பரிமாறிக்கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த பெரும்பாலானவர்கள், தங்கள் குடும்பத்தையும் அழைத்து வந்திருந்தனர். அதில் சிலர் பேரன், பேத்திகளுடனும் வருகை தந்திருந்தனர். உடல் அளவில் வயதாகியிருந்தாலும், மனதளவில் தாங்கள் இன்னும் மாணவர்கள் போன்றே இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பலர், தங்கள் நட்பை 30 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பதாகக்கூறி மகிழ்ச்சி அடைந்தனர். தோற்றத்தில் தங்கள் நண்பர்கள் மாறியுள்ளதை வியப்புடனும் அவர்கள் பார்த்தனர். பலரும் தங்கள் கல்லூரி கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்கு பின் நண்பர்களை பார்த்து ஆனந்த உரையாடல்...
முன்னாள் மாணவர்கள் விழாவை திரு. கணபதி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். தங்கள் நண்பர்கள், விழாவுக்கு வருகை தருவதை பார்த்து அவரது உள்ளம் பெருமை கொண்டதை காண முடிந்தது.
கையெழுத்திட்டு மகிழ்ச்சி
நிகழ்ச்சி அரங்கிற்கு வருபவர்களுக்கு என வருகை பதிவேடு வைக்கப்பட்டிருந்தது. அதில், முன்னாள் மாணவர்கள், தங்கள் பெயர், தாங்கள் எந்த ஆண்டு படித்தோம் போன்ற தகவல்களை எழுதினர். மேலும், கல்லூரி பெயர்போட்டு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பேனரில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர்.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடனம், பாடல், நகைச்சுவை என விழா கலைக்கட்டியது. தங்கள் வயதை மறந்து முன்னாள் மாணவர்கள் மேடையில் நடனமும் ஆடினர். சிலர் பழைய பாடல்களை பாடி நினைவுகளை அசை போட்டனர்.
கையெழுத்தை பதிவு செய்த முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்களே சிறப்பு விருந்தினர்கள்!
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, நீதிபதி திரு. ஜெகதீஷ் சந்திரா, ஐஏஎஸ் அதிகாரி திரு. சுந்தரேசன், ஆச்சி மசாலா நிறுவனர் திரு. பத்மசிங் ஐசக், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக டீன் திரு. பிரபாகர், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் திரு. ராம. சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவருமே இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தான். விழாவின் சிறப்பம்சமாக விழா மலர் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முன்னாள் மாணவர்கள்
அறுசுவை உணவு
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வெஜ், நான்வெஜ் என சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. பல வருடங்களுக்கு பிறகு தங்கள் தோழமைகளுடன் உணவருந்தி முன்னாள் மாணவர்கள் மகிழ்ந்தனர். இறுதியாக தங்கள் நட்புகளுடன் சேர்ந்து அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நண்பர்களுடன் உணவருந்தி மகிழ்ச்சி
உலகளவில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள்
தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும், ஏன் உலகளவிலும் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். இதெற்கெல்லாம் விதை போட்டவர் ஐயா சி.பா.ஆதித்தனார். அவரது தவப்புதல்வரான பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், கல்லூரி குழுவின் தொடக்கத்திலிருந்தே அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் திரு. எஸ். பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
தற்போது, பா.சிவந்தி ஆதித்தன் அவர்களின் மகன் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள், ஆதித்தனார் கல்வி நிறுவனத்தின் தலைவராகவும், கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து கல்லூரியை செவ்வனே வழி நடத்தி வருகிறார்.