‘லியோ’ திரைப்படத்திற்கான வசூல் வேட்டை தொடக்கம்!

லியோ படத்திற்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் ஆன்லைனில் வேகமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-25 18:30 GMT
Click the Play button to listen to article

‘லியோ’ திரைப்படத்திற்கான வசூல் வேட்டை தொடக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களுள் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்துக், கொண்டாடக் காத்திருக்கும் ஒரு திரைப்படமாக உள்ளது 'லியோ'. லோகேஷ் மற்றும் நடிகர் விஜய்யின் கூட்டணியில் அமைந்த 'மாஸ்ட'ர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் 'லியோ' படத்தில் இணைந்துள்ளனர். 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து திரைப்பட வெளியீட்டுத் தேதி வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லியோ படத்திற்கான டிக்கெட் ப்ரீ புக்கிங் ஆன்லைனில் வேகமாக நடந்து வருகிறது.இதுவரையில் ரூ. 3.8 கோடி அளவில் ப்ரீ புக்கிங்கிலேயே 'லியோ' வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


'லியோ' படத்தில் விஜய், சஞ்சய் தத் சண்டை காட்சி மற்றும் டிக்கெட் புக்கிங் 

 திரையரங்குகளில் டிக்கெட் வெறும் ரூ.99 - அக்டோபர் 13-இல் அப்படி என்ன ஸ்பெஷல்!

தேசிய சினிமா தினம் கடந்த வருடம் செப்.16 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டும் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், சிட்டிபிரைட், மூவி டைம், போன்ற பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த கட்டண குறைப்பு இருக்குமாம். அக்டோபர் 13 அன்று திரையரங்குகளில் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவலை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. மேலும் இந்த கட்டண குறைப்பு ஐமேக்ஸ், 4டிஎக்ஸ் திரையரங்குகளுக்கு பொருந்தாது என்றும் அசோசியேஷன் சார்பில் கூறப்பட்டுள்ளது. நம்பமுடியாத திரை அனுபவத்தை பெற அக்டோபர் 13 அன்று பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து குறைந்த கட்டணத்தில் உங்களுக்கு விருப்பமான படங்களை பார்த்து மகிழலாம்.


திரையரங்குகளில் சினிமா டிக்கெட்ஸ் 

 தற்காப்பு கலை பயிலும் சாக்‌ஷி அகர்வால்

உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பாகவே விளம்பரப் படங்களில் நடித்து மாடலாக அறிமுகமானவர். தமிழில் ‘ராஜா ராணி’, ‘யோகன், ‘காலா’, ‘விசுவாசம்’, என நடித்திருந்தாலும் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகுதான் பிரபலமானார். இவர் தற்போது தமிழ் படங்கள் மட்டுமின்றி தென்னிந்திய மொழிப்படங்கள் பலவற்றில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கதாநாயகியை முதன்மைப்படுத்தும் ‘சாரா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், தற்காப்பு பயிற்சிகளை கற்று வருகிறார். இவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


‘சாரா’ படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் இளையராஜா, சாக்‌ஷி அகர்வால் 

 தமிழுக்கு வரும் மலையாள இயக்குனர்

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக அறியப்படுபவர் இயக்குனர் அனில். இவர் அங்கு 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ‘சாயாவனம்’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வர உள்ளார். தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கும் இந்த படத்தில் சவுந்தரராஜா, தேவானந்தா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குனர் அனில் பேசுகையில், “மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இயற்கை காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் பெண்களை மையப்படுத்தி வெளிவர உள்ள இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மலையாள இயக்குநர் அனில்

 தயாரிப்பாளரை திருமணம் செய்கிறாரா நடிகை திரிஷா?

தமிழில் மிகவும் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித்தின் ‘விடா முயற்சி’ படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர திரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’ படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக பதிலளித்துள்ளார். “லியோ படத்தின் போஸ்டர் வசனத்தை குறிப்பிட்டு, வதந்திகளை பரப்பாமல் அமைதியாக இருங்கள். இதில் உண்மை இல்லை. அனைத்தும் வதந்தி மட்டும் தான்” என தெரிவித்துள்ளார்.


நடிகை திரிஷா

வில்லன் ஆகிறார் பிரபுதேவா

ஒரு நடன கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பிரபுதேவா தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார். இவர் நடித்து வெளிவரும் அனைத்து படங்களுமே பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படங்களாக உள்ளன. அந்த வகையில் நடிகர் பிரபுதேவா தற்போது ‘வுல்ஃப்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருடைய 60 வது படமாகும். மேலும் பல படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, இந்தி படம் ஒன்றில் வில்லனாக நடிக்க உள்ளார். கமலின் தசாவதாரம் படத்திற்கு இசையமைத்திருந்த இந்தி நடிகரும், இசையமைப்பாளருமான ரேஷ்மையா ‘படாஸ் ரவிகுமார்’ என்ற படத்தினை எடுக்க உள்ளார். இதற்கு அவரே இசையமைக்கவும் உள்ளார். ஆக்‌ஷனுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளன.


‘படாஸ் ரவிகுமார்’ படத்தில் பிரபுதேவா

Tags:    

மேலும் செய்திகள்