மிஸ்ஸியம்மா படத்தில் சாவித்திரியோடு நடிக்கும்போது என்னுள் சலனம் ஏற்பட்டது - ஜெமினி கணேசன்
நானும் சாவித்திரியும் சேர்ந்து நடித்த முதல் படமான "மனம் போல் மாங்கல்யம்” 1953-ம் ஆண்டு, தீபாவளி அன்று (நவம்பர் 5-ம் தேதி) வெளிவந்தது.;
(28.06.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
நானும் சாவித்திரியும் சேர்ந்து நடித்த முதல் படமான "மனம் போல் மாங்கல்யம்” 1953-ம் ஆண்டு, தீபாவளி அன்று (நவம்பர் 5-ம் தேதி) வெளிவந்தது. அதில் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. "மனம் போல் மாங்கல்யம்” படத்தை தொடர்ந்து “தேவதாஸ்" படம் வெளிவந்தது. சிலருக்கு அந்தப் படத்தை தனியாகப் போட்டுக் காட்டினார்கள். நீங்களும் வாருங்கள் என்று நாகேஸ்வர ராவ் என்னை அழைத்தார். நான் ஐந்து நிமிடம் தாமதமாக சென்றதால், படம் தொடங்கிவிட்டது. இடையில் உள்ளே போய் யாருக்கும் தொந்தரவு தர வேண்டாம் என்று, வாசல் ஓரமாக நின்றுகொண்டு படம் பார்த்தேன். சாவித்திரியின் நடிப்பில் ஒன்றிப்போன எனக்கு, படம் முழுக்க நின்றுகொண்டு பார்த்தது, கடினமாகவே தெரியவில்லை.
மிஸ்ஸியம்மா
'மிஸ்ஸியம்மாவில்' பானுமதிக்கு மாற்றாக நாயகியான சாவித்திரி
அதன் பிறகு "தேவதாஸ்" பார்வதி (சாவித்திரி) மீது எனக்கு இருந்த எண்ணம் மேலும் உயர்ந்தது. சாவித்திரியையும் என்னையும் அடுத்து இணைய வைத்த படம் "மிஸ்ஸியம்மா". விஜயா-வாகினி ஸ்டூடியோ அதிபர்கள் நாகிரெட்டியும், சக்கர பாணியும் சேர்ந்து தயாரித்த படம் இது. படத்தின் கதாநாயகி பானுமதி. சாவித்திரிக்கு, கதாநாயகிக்கு அடுத்த பாத்திரம். நான் (ஜெமினி) நாயகன்! இயக்கம், பெரியவர் எல். வி. பிரசாத்.
ஒரு பெரிய நடிகையோடு (பானுமதியோடு) சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்கி, நான்கைந்து நாள் நடந்த பின்னர், பானுமதி "மிஸ்ஸியம்மா”வில் தொடர்ந்து நடிக்கப் போவதில்லை என்று கூறினார்கள். எனக்கு ஒரே ஏமாற்றம்.
தந்தி பறந்தது
காதல் மயக்கத்தில் ஜெமினி கணேசன் - சாவித்திரி
கண்டிப்புக்குப் பேர் போன சக்கண்ணு (சக்கரபாணி), “ஜெமினி! சாவித்திரிக்கு தந்தி கொடப்பா. உடனே அவளை இங்கே வரச்சொல். இனிமேல் சாவித்திரிதான் "மிஸ்ஸியம்மா". சாவித்திரி நடிக்கும் வேடத்தை ஜமுனாவுக்கு கொடுத்து விடு" என்று கட்டளை போட்டார்.
அப்போது சாவித்திரி சேலத்தில் இருந்தாள். கே. ஆர். ராமசாமிக்கு ஜோடியாக மாடர்ன் தியேட்டர்சாரின் "சுகம் எங்கே?" என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்தாள். “தந்தி" பறந்ததும், சாவித்திரி சென்னைக்கு வந்தாள். "மிஸ்ஸியம்மா" படத்தின் நாயகி ஆனாள். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் தயார் ஆனது. 1954 ஆகஸ்ட் மாதம் எடுக்கத் தொடங்கிய படத்தை டிசம்பர் மாதத்துக்குள் முடித்துவிட்டார்கள். இரண்டு படங்களும் சக்கைபோடு போட்டன. எல்லோரும் "மிஸ்ஸியம்மா" பற்றியும் எங்கள் (ஜெமினி - சாவித்திரி) நடிப்பு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். படம் நூறு நாளைத் தாண்டி ஓடியது.
சலனம்
"மிஸ்ஸியம்மா"வில் சாவித்திரியோடு நடிக்கும் பொழுது, என்னுள் ஏதோ ஒருவித சலனம், அன்பு. சாவித்திரியும் அப்படித்தான் இருந்தாள். என்னோடு நடிக்கும்போது அவளிடம் இருந்த உற்சாகம், தெலுங்கு பதிப்பு "மிஸ்ஸிம்மா"வில், சகோதரர் என். டி. ராமாராவோடு நடிக்கும்பொழுது இல்லை. டைரக்டர், தயாரிப்பாளர்கள் எல்லோரும் இதை கவனித்தார்கள். பேசவும் முனைந்தார்கள். அது முழுக்க உண்மைதான். "மிஸ்ஸியம்மா" படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்து, வீட்டிற்குப் போகும்பொழுது, எதையோ பறிகொடுத்துவிட்டு செல்வது போன்ற உணர்வே எழுந்தது. சாவித்திரியும் சொல்லத் தெரியாத ஓர் உணர்வில் தத்தளிப்பது எனக்குத் தெரிந்தது!
நடிகை வாழ்க்கை!
நடிகைகளின் வாழ்க்கை, வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்றது! மின்னும் போதுதான் அதற்கு மதிப்பு. கீழே விழுந்து விட்டால், அதனால், மீண்டும் பழைய இடத்தை அடைந்து மின்ன முடியாது. இதை வளரும் நட்சத்திரங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேணடும். - நடிகை சாவித்திரி
டெலிபோன் பேச்சு
அதன் பிறகு, நாங்கள் இருவரும் டெலிபோன் மூலம் பேசினோம். அப்போது, வாகினி ஸ்டூடியோ டெலிபோனில் பத்மநாபன் என்ற நண்பர் இருந்தார். நானும் சாவித்திரியும் டெலிபோனில் பேசுவதற்கு மிகவும் உதவி செய்தார். நாங்கள் நெருக்கமாக டெலிபோனில் பேசிக் கொண்டாலும். சாவித்திரியை தனியாக சந்தித்துப் பேசும் தைரியம் எனக்கு வரவில்லை.
'மாய சுந்தரி' திரைப்படத்தில் ஜெமினி - சாவித்திரி
பெரியப்பா
சாவித்திரியின் அப்பா கே.வி. சவுத்திரி (உண்மையில் இவர் சாவித்திரியைப் பெற்ற அப்பா இல்லை. பெரியப்பா.) நல்லவர். முன்கோபம், முரட்டுக் குணம் கொண்டவர். எப்போதும் கைத்துப்பாக்கி வைத்துக்கொண்டு இருப்பார். அதோடு குடிப்பழக்கம் வேறு இருந்தது. அதனால் நான் எச்சரிக்கையாகவே இருந்தேன்.
நள்ளிரவில் வீட்டிற்கு வந்த சாவித்திரி
அந்த நேரத்தில், நான் திருமூர்த்தி நகர் 5-வது தெருவில் குடியிருந்தேன்.
ஒருநாள் நள்ளிரவு, யாரோ என் வீட்டுக் கதவை, படபடவென்று தட்டினார்கள்.
பக்கத்து அறையில் படுத்து இருந்த நான் பதறிப்போய், டார்ச் லைட்டை கையில் எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தேன்.
நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி, சாவித்திரியும் அவள் தோழி தாட்சாயணியும் வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள். சாவித்திரியின் முகம் வாடி இருந்தது! எனக்கு ஒரே குழப்பம்! "என்ன சாவித்திரி. இப்படி நடு இரவில் வந்து இருக்கிறாய்? என்ன விஷயம்? " என்று ஒன்றும் புரியாமல் கேட்டேன்.
(தொடரும்)