சிம்ரன் குறிப்பிட்ட டப்பா நடிகை யார்? ஜோதிகாவா? லைலாவா? வன்மம் ஏன்?

ஜோதிகா அவர்மீது கோபத்தில் இருக்கலாம் என்று கூறுகின்றனர் இணையவாசிகள். ஆனால் சிம்ரன் யாருடைய பெயரையுமே குறிப்பிடாதபோது ஏன் எல்லாரும் நேரடியாக ஜோதிகாவை தாக்குகின்றனர் என்பதும் பதில் கிடைக்காத கேள்விதான்.;

Update:2025-04-29 00:00 IST
Click the Play button to listen to article

எப்போதும் சமகால நடிகர்களின் ரசிகர்கள்தான் யார் பெரியவர்? என போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என இன்றுவரை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதும், சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் இப்போது ஆன்லைனில் சண்டையிட்டு கொள்வதுமாக இருக்கின்றனர். எப்போதும் நடிகர்களின் ரசிகர்கள்தான் அடித்துக்கொள்வார்கள் என்றால், இப்போது நடிகைகளின் ரசிகர்களும் சொற்போரில் இறங்கியுள்ளனர். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் நடிகை சிம்ரனுக்கு அவருடைய 30 ஆண்டுகால திரையுலக அனுபவத்தை பாராட்டி விருது வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் சிம்ரன் பகிர்ந்துகொண்ட விஷயம்தான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. அவர் மேடையில் பேசியபோது சக நடிகை ஒருவர் தன்னை ‘ஆன்ட்டி’ ரோலில் நடிப்பதாக விமர்சித்ததாகக் கூறி ஆதங்கப்பட்டார். சிம்ரன் கூறிய நடிகை யாராக இருக்கும் என்பதில் தொடங்கி அது ஜோதிகாதான் என்று பலரும் நேரடியாகவே பேசத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, அவருடைய சமூக ஊடக பக்கங்களில் போடும் பதிவுகளிலேயே மோசமாக கமெண்ட் செய்துவருகின்றனர். ஜோதிகாவை ஒரு பக்கம் சாடினாலும் மற்றொரு பக்கம் லைலாவையும் இதில் சேர்த்துள்ளனர். உண்மையிலேயே சிம்ரன் யாரை குறிப்பிட்டார் என்று தெரியாதபோது ரசிகர்கள் இவ்வாறு பேசுவது சரியல்ல என்று ஒருதரப்பினர் ஜோதிகாவுக்கு ஆதரவாக பேசிவருகின்றனர். விருது விழாவில் சிம்ரன் என்ன பேசினார்? ஜோதிகா மீது இவ்வளவு வன்மம் காட்டப்படுவது ஏன்? என்பதுதான் இப்போது நிறையப்பேரின் கேள்வியாக இருக்கிறது.

சிம்ரன் vs ஜோதிகா!

90களில் பலரின் கனவு கன்னியாக வலம்வந்தவர் சிம்ரன். இவருடைய நடனத்தாலேயே பலரின் மனதையும் கொள்ளையடித்தார். அப்போதைய முன்னணி ஹீரோக்களின் கதாநாயகியான இவர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவராக இருந்தபோது அறிமுகமானவர் ஜோதிகா. சொல்லப்போனால் அஜித் - சிம்ரன் நடித்த ‘வாலி’ படத்தில்தான் ஜோதிகா அறிமுகமானார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியில் முக்கியப்பங்கு சிம்ரனுக்கு உண்டு. அதன்மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று, ஓரிரு ஆண்டுகளில் சிம்ரனுக்கு போட்டியாக உருவெடுத்தார் ஜோதிகா. ஆனால் சிம்ரனின் உடல்வாகு, டயட், நளினம் போன்றவற்றை அப்போதிருந்த மற்ற எந்த நடிகைகளாலும் பீட் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் அப்போதிருந்தே சிம்ரன் மற்றும் ஜோதிகாவை ஒப்பிட்டு விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ரசிகர்கள். ஆனால் சிம்ரனும் ஜோதிகாவும் உண்மையில் நல்ல தோழிகள் என்றும், இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல மரியாதை இருப்பதாகவும் பழைய பேட்டிகளில் சிம்ரன், ஜோதிகா இருவருமே பகிர்ந்திருக்கின்றனர்.


‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் சிம்ரனின் நடிப்பால் ஜோதிகா வன்மம் காட்டுவதாக பரவும் செய்தி

பலமுறை ஜோதிகாவே தனது அம்மா, சிம்ரனின் பெரிய ரசிகை என்று கூறியிருக்கிறார். குறிப்பாக, இருவரும் பீக்கில் இருந்த காலகட்டத்தில் ஜோதிகாவின் அம்மா சிம்ரனை காண்பித்து, ‘பார், அவள் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறாள். நீ ஏன் இப்படி சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாய்? உடலின்மீது கவனம் செலுத்து’ என்று சொல்வார்களாம். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜோதிகா மாலைநேரம் வந்துவிட்டாலே போண்டா ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாராம். உடல் மற்றும் டயட் விஷயத்தில் சிம்ரனுடன் போட்டிபோட முடியாது என்று சொல்லிவிடுவாராம். அதேபோல் பல மேடைகளில் சிம்ரனின் நடிப்பை ஜோதிகா பாராட்டி இருக்கிறார். சிம்ரனும் ஜோதிகாவை பாராட்டி இருக்கிறார். அப்படியிருக்கையில் ஜோதிகா தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என தனது செகண்ட் இன்னிங்ஸை நடத்திவருகிறார். சிம்ரனும் படங்களில் நடித்தாலும் ஜோதிகாவைவிட குறைவான படங்களில்தான் நடிக்கிறார். ஆனால் சமீபத்தில் அஜித்தின் படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் நடித்ததற்காக பலரின் கவனமும் 90களின் சிம்ரன் மீதும், அவருடைய நடனம்மீதும் திரும்பியிருக்கிறது. அதனால் கூட ஜோதிகா அவர்மீது கோபத்தில் இருக்கலாம் என்று கூறுகின்றனர் இணையவாசிகள். ஆனால் சிம்ரன் யாருடைய பெயரையுமே குறிப்பிடாதபோது ஏன் எல்லாரும் நேரடியாக ஜோதிகாவை தாக்குகின்றனர் என்பதும் பதில் கிடைக்காத கேள்விதான்.

சிம்ரன் யாரை குறிப்பிட்டார்?

இப்படி அனைவரும் கொதித்தெழும் அளவிற்கு சிம்ரன் அன்று மேடையில் பேசியது என்ன? 2025ஆம் ஆண்டிற்கான JFW திரைப்பட விருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டன. அதில் சிம்ரனின் 30 ஆண்டுகள் திரையுலக அனுபவத்தை பாராட்டி பல இளம் நடிகைகளை வைத்து இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய சிம்ரன், “நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னுடைய சக நடிகை ஒருவருக்கு, உங்களை இந்த ரோலில் பார்த்தது சர்ப்ரைஸாக இருந்தது என்று மெசேஜ் செய்தேன். உடனே அந்த நடிகையிடம் இருந்து, ‘ஆன்ட்டி ரோலில் நடிப்பதைவிடவும் இதுபோன்ற ரோலில் நடிக்கலாம்’ என்ற ஒரு உணர்ச்சியற்ற ரிப்ளை எனக்கு வந்தது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். ஆனால் அதற்கு நான் ஒரு நல்ல ரிப்ளையை பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை விட, முக்கியமான ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். 25 வயதிலேயே‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் முக்கியமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். நாம் என்ன செய்கிறோமோ அதில் நாம் தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும். நான் எனது கடின உழைப்பால் மட்டுமே இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.


‘டப்பா ரோல்’ என்று சிம்ரன் குறிப்பிட்டது ஜோதிகாவையா? லைலாவையா? 

இந்த பேச்சுதான் இப்போது ஜோதிகாவை இங்கு இழுத்து வைத்திருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில்தான் ஜோதிகா இந்தியில் நடித்திருந்த டப்பா கார்ட்டெல் என்ற வெப் தொடர் வெளியாகி அங்கு நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனால் டப்பா என்ற வார்த்தையை சிம்ரன் பயன்படுத்தியது ஜோதிகாவைத்தான் என்று இணையவாசிகளே புரிந்துகொண்டு அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அதேநேரத்தில் சிம்ரனின் சக நடிகையான லைலாவும் இப்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் ‘சப்தம்’ திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் ஒருவேளை சிம்ரனுக்கு அப்படி பதில் அனுப்பிய நடிகை லைலாவாகக்கூட இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் லைலாவை பொருத்தவரை நல்ல வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுவார். மேலும் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்க விரும்ப மாட்டார். ஆனால் ஜோதிகாவோ அப்படி இல்லை. பிரேக்கிற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க துவங்கியதுமே பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று கூறிவருகிறார்.

தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் ஜோதிகா!

இதற்கு முன்பே கோவில் உண்டியல்களில் போடுகிற பணத்தை அரசு பள்ளிகளுக்கு கொடுக்கலாம் என்று ஜோதிகா சொன்ன கருத்தே அவரை பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தது. அதனால்கூட இப்போது சிம்ரனின் இந்த பேச்சை வைத்து, ஜோதிகாவின் அந்த கருத்துக்கு பழிவாங்கும் விதமாக பலர் பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் சூர்யாவின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு பிள்ளைகளின் படிப்பை ஒரு காரணமாக சொன்னதும் தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக விமர்சிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட திரையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும், நடிகர்களுக்கு ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரப்பட்டாலும் நடிகைகளுக்கு அந்த அளவிற்கு சம்பளம் கிடைப்பதில்லை என்றும் ஆதங்கப்பட்டிருந்தார்.


சிம்ரனின் மேடை பேச்சை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் சூர்யா - ஜோதிகா

ஆண்களுக்கு நிகராக பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்று ஜோதிகா கூறியதை சிம்ரன் அதே மேடையில் மறைமுகமாக தாக்கி பேசியதாகவும் கூறிவருகின்றனர் நெட்டிசன்கள். அதே விருது மேடையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் கருதுவதாகவும், தன்னுடைய அப்பா, சகோதரர், நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் தன்னை எப்போதும் மரியாதையாக நடத்தியதாகவும், தனக்கு சிறப்பான வாழ்க்கையை அவர்கள் கொடுத்திருப்பதாகவும், எனவே ஆண்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துமாறும் கூறியிருந்தார். ஜோதிகாவின் அந்த கருத்துக்கு பதில் அளிக்கும்விதமாகத்தான் சிம்ரன் இப்படி கூறியுள்ளார். அதனால் சிம்ரன், பெயரை குறிப்பிடாவிட்டாலும் ஜோதிகாதான் அப்படி ரிப்ளை செய்திருக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சிம்ரனும் பெயரை குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்ட அந்த நடிகையும் இதுவரை வாய் திறக்கவில்லை என்பதுதான் இந்த சர்ச்சையில் பெரிய டிவிஸ்ட்டாக இருக்கிறது. எனவே இந்த இடத்தில் ரசிகர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், சிம்ரன் வெளிப்படையாக யார் பெயரையும் சொல்லாத நிலையில், தாங்களாகவே ஒருவரை அனுமானித்துக்கொண்டு, தரக்குறைவான விமர்சனங்கள் வீசுவதை தவிர்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்