எங்கு திரும்பினாலும் அஜித் குமார்தான் - கோலிவுட் டாக்ஸ்!

சிம்புவுடன் நடிப்பதற்காக சந்தானத்திற்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கயாடு லோகர், மமிதா பைஜு போன்றோர் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.;

Update:2025-04-29 00:00 IST
Click the Play button to listen to article

கார் ரேஸில் வெற்றி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’, 25வது வருட திருமண நாள் கொண்டாட்டம், பத்ம விருது என்று இப்போது எங்கு திரும்பினாலும் அஜித் குறித்த செய்திகள்தான் வலம்வருகின்றன. அதுபோக, சிம்புவுடன் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கைகோர்க்கும் சந்தானம், ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து திரும்பியிருக்கும் ரஜினி, ரீ-ரிலீஸில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் ‘சச்சின்’ என தமிழ் சினிமாவில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் அதிகம் பகிரப்பட்ட சினிமா செய்திகள் ஒரு க்ளான்ஸ்!

சிம்புவுக்கு எப்போதுமே நோ கிடையாது!

சிம்புவின் ‘வல்லவன்’ படத்தின்மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முடிவெடுத்த பிறகு, மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்துவருகிறார். ஆனால் சிம்புவின் அடுத்த படமான ‘எஸ்.டி.ஆர் 49’ படத்தில் சந்தானம் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்கவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. ஆனால் சந்தானம் கட்டாயம் இந்த ரோலில் நடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.


சிம்புவின் 49வது படத்தில் இணைந்திருக்கும் சந்தானம்

இந்நிலையில் சிம்பு ஒருநாள் தனக்கு ஃபோன் செய்து தனது படத்தில் நடிக்கவேண்டுமென்று கேட்டதாகவும், உடனே எஸ் சொல்லிவிட்டதாகவும், ஆரம்ப காலத்தில் இருந்தே சிம்புவுக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருப்பதாகவும் சந்தானமே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானத்திற்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் கயாடு லோகர், மமிதா பைஜு போன்றோர் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மகள் குறித்து ரஹ்மான்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ரஹ்மான் ரூ. 2 கோடியை டெல்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர் நயந்தீப் ரஷத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரிடம் தனது மகள் கதீஜா புர்கா அணிந்துகொண்டு வெளியே வர கட்டாயப்படுத்துவதாக எழுந்த சர்ச்சை குறித்து கேட்டபோது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.


வீரா ராஜ வீர பாடலுக்கு காப்புரிமையாக ரூ. 2 கோடி செலுத்தியிருக்கும் ரஹ்மான்

அவர் பேசியபோது, தனது மகளுக்கென்று தனி ரசிகர்கள் இருப்பதாகவும், அவரிடம் சண்டை போடுவதற்கான தகுதி தனக்கு இல்லையென்றும் கூறியுள்ளார். ஏனென்றால் கதீஜாவை பொருத்தவரை தனது அப்பாவிடம் மிகவும் தெளிவாக எழுதப்பட்ட 2 பக்க இ-மெயிலை அனுப்புவாராம். அதை பாராட்டத்தான் முடியும், வேண்டுமானால் ‘அப்பாவுக்கு என் கடிதங்கள்’ என்ற தலைப்பில் அவர் புத்தகமாக வெளியிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தான் அணியும் உடைக்கும், வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முடிவுகளுக்கும் தனது பெற்றோருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கதீஜா தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏகே-உடன் இணையும் டி?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்விதான் அதிகம் உலா வருகின்றது. சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் ஆதிக்கின் பெயர்கள் இந்த வரிசையில் அடிபட்ட நிலையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியிடமும் அஜித் கதைகேட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தனுஷ். தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.


ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் எஸ்.கே உடன் ஏ.கே குடும்பம் எடுத்துக்கொண்ட புகைப்படம்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் ஏகேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இந்த பேச்சுக்கு காரணமாக மாறியிருக்கிறது. சமீபத்தில் ஐபிஎல் போட்டிக்கு குடும்பத்துடன் வந்திருந்த அஜித் குமாருடன் இணைந்து சிவகார்த்திகேயனும் போட்டியை கண்டுகளித்தார். அவர்களுடன் ஆகாஷ் பாஸ்கரனும் இணைந்து மேட்சை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்திருக்கின்றனர். இதனால் அடுத்து அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் குறித்து மாளவிகா!

மலையாளம், தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். குறிப்பாக, விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தபிறகு தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டவராக மாறினார். இப்போது கார்த்தியுடன் சேர்ந்து ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், நடிகர்களின் உண்மை முகம் இதுதான் என்று பேசியிருக்கிறார். அவர் பேசியதில், பல நடிகர்கள் கேமராவிற்கு முன் பெண்களை மதிப்பவர்களைப் போன்று தங்களை காட்டிக்கொண்டாலும் கேமராவிற்கு பின் அவர்களை வெறுப்பதை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


நடிகர்கள் குறித்து மாளவிகா மோகனன் ஓபன் டாக்

மேலும் எல்லா நடிகர்களும் முகமூடி அணிந்துகொண்டு பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் வெளிப்படையாகவே கூறியதோடு, ஆண், பெண் வேறுபாடு சினிமாத்துறையில் வேரூன்றி காணப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கு என்றுதான் முடிவு வரப்போகிறது என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். மாளவிகாவின் இந்த பேச்சு திரையுலகின் நிதர்சனத்தை காட்டுவதாக வைரல் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

பஹல்காம் தாக்குதல் - ரஜினி கண்டனம்

நெல்சன் - ரஜினி - அனிருத் கூட்டணியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதியுடன் அந்த பணிகள் நிறைவடைந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். விமானத்தில் சென்னை வந்திறங்கிய அவர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேட்டியளித்தார்.


பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த நடிகர் ரஜினி

அந்த பேட்டியில், காஷ்மீரின் அமைதியான சூழலை கெடுக்கவே இதுபோன்ற செயல்களில் எதிரிகள் ஈடுபடுவதாகவும், இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கனவில்கூட நினைக்கமுடியாத தண்டனையை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் காஷ்மீரில் அமைதி திரும்பியிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹிட்டடித்த ரீ-ரிலீஸ்!

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் - ஜெனிலியா, வடிவேலு நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சச்சின்’. அந்த சமயத்தில் ‘சந்திரமுகி’ திரைப்படமும் வெளியாகி இருந்ததால் அப்போது வசூலில் இந்த படம் பீட் செய்தது. இருந்தாலும் அப்போதே ‘சச்சின்’ திரைப்படம் 200 நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் சாதனையும் படைத்தது. தேவிஸ்ரீ பிரசாத் உருவாக்கிய பாடல்களும் மக்கள் மனதில் இடம்பிடித்தன. 


‘சச்சின்’ பட ரீ ரிலீஸ் வெற்றிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெனிலியா

இப்போது நிறைய படங்கள் தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், ‘சச்சின்’ படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து அறிவித்தபோதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதேபோல் படம் வெளியிடப்பட்டதிலிருந்தே விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இந்த படத்தை கொண்டாடித் தீர்க்கின்றனர். தியேட்டர்களில் விசில் சத்தத்தோடு பாடல்களுக்கு அதே ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடி இணையங்களில் ட்ரெண்டு செய்துவருகின்றனர். ரசிகர்களின் இந்த அன்புக்கு ஜெனிலியா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இப்போது வரை இப்படம் ரூ. 10 கோடி வசூலித்திருக்கும் நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘கில்லி’யின் ரூ.50 கோடி வசூல்சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்