ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டது ஏன்? என்ன சண்டை? - மனம் திறந்த ரஜினிகாந்த்
ஜினி - சரத் நட்பு உருவாக இந்த பிரச்சினை ஒரு காரணமாக அமைந்தாலும் ரஜினி - ஜெ இடையே பெரும் விரிசலை உண்டாக்கியது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டுதான் ரஜினி அவ்வாறு நடுரோட்டில் நடந்துகொண்டதாக கூறப்பட்டாலும், அடுத்தடுத்து ரஜினி தொடர்ந்து ஜெ.வை எதிர்க்கத் தொடங்கினார்.;
திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு இடையே சுமுகமான போக்கு நிலவினாலும் பல நேரங்களில் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளாகவே அரசியல் தலைவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களாக இருக்கும்போக்கு இன்றுவரை நீடித்துவருகிறது. இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக விஜய், தற்போதைய ஆளும்கட்சியான திமுகவை எதிர்ப்பது போன்று, 90களில் கொடிகட்டி பறந்த ரஜினிகாந்த், அரசியலின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவை பலமுறை பகிரங்கமாகவே எதிர்த்து வந்தார். இந்த மோதல் போக்குக்கு பல சம்பவங்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் அது எங்கிருந்து தொடங்கியது? என்ற கேள்வியானது பல ஆண்டுகளாகவே ரஜினி ரசிகர்களுக்கு இருந்துவருகிறது. பொதுவாகவே அரசியல் தலைவர்களிடம் சுமுகமாக நடந்துகொள்ளும் ரஜினி ஏன் ஜெயலலிதாவை மட்டும் தனது எதிரியாக பார்த்தார்? என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம்திறந்திருக்கிறார். ஆர்.எம்.வி என்று எல்லாரலும் அன்பாக அழைக்கப்பட்ட அரசியல் தலைவரான ஆர். எம். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த ஆவணப்படத்தின் ப்ரீ-வியூ வீடியோவில் அவருடன் தனக்கு இருந்த நெருக்கம் மற்றும் அதனால் ஜெயலலிதாவின் வெறுப்பு போக்கு போன்றவை குறித்து மனம்திறந்திருக்கிறார் ரஜினி.
ஜெயலலிதா vs ரஜினிகாந்த் - மோதல்போக்குக்கு காரணம்!
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சரானார். அந்த சமயத்தில்தான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்குமான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. 1993 மற்றும் 1994இல் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் ‘உழைப்பாளி’ மற்றும் ‘வீரா’. அந்த இரண்டு படங்களில் ஏதோ ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு ரஜினி வீடு திரும்பியபோது தனது வீட்டிற்கு அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரஜினிக்கு சோர்வு ஒருபுறம் பசி மறுபுறம் என்று இருக்க, 20 நிமிடங்கள் ஆகியும் வண்டி நகர்ந்த பாடில்லை. அப்போதெல்லாம் ரஜினிக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது டென்ஷனை போக்க புகைபிடித்துள்ளார். ஆனால் அதை காருக்குள் அமர்ந்து செய்யாமல் பொதுமக்கள் பார்க்கும்படியாக காரின்மீது ஏறி அமர்ந்து ஸ்டைலாக பிடித்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் கத்தி ஆரவாரம் செய்ததுடன், போக்குவரத்து போலீசார் உட்பட அங்கிருந்த அனைவரும் டிராபிக்கை மறந்து ரஜினியை ரசிக்கத் தொடங்கினர். அந்த சமயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அங்கு வர, நடப்பதை பார்த்து மிகுந்த கோபமடைந்துள்ளார். முதலமைச்சர் கோபமடைந்தது தெரிந்தும் ரஜினி அதை கண்டுகொள்ளாமல் தனது ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அப்போதே ரஜினிக்கு ஜெயலலிதாமீது ஏதோ கோபம் இருப்பதாக பத்திரிகைகளில் எழுதப்பட்டன.
நடுரோட்டில் கார் மீது அமர்ந்து புகைபிடித்து ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான ரஜினி
அந்த நேரத்தில்தான் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் ரஜினி - ஜெயலலிதா இடையேயான பகை என்பது பல ஆண்டுகளாக நீடித்துவருவதாக எழுதினர். அதாவது ரஜினி சினிமாவில் அறிமுகமான காலகட்டம் அது. அப்போது ஜெயலலிதா தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். அதேசமயம் எம்ஜிஆருடன் சேர்ந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்தார். ஆனால் பிரபல இந்திய திரைப்பட இயக்குநரான பீம்சிங் 1978ஆம் ஆண்டு மறைந்தபிறகு அவருடைய மகன் பி.லெனின் தனது படத்தில் நடிக்க ஜெயலலிதாவை அணுகினார். அப்பாமீது வைத்திருந்த மரியாதையால் ஜெயலலிதா உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்போது மிக வேகமாக வளர்ந்துவந்த ரஜினியின் ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்கள் மெகா ஹிட்டடித்து ரஜினிக்கு இளம் ரசிகர்களை உருவாக்கியிருந்தன. அதனால் தனது படத்தில் ஜெயலலிதாவுடன் ரஜினியை நடிக்கவைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் லெனின். படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினியை சந்திக்க விரும்புவதாக ஜெயலலிதா சொல்ல அதற்கு லெனின் ஏற்பாடு செய்வதாக சொல்லிச் சென்றார். இதற்கிடையே ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரும், தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையுமான வலம்வந்த ரமா பிரபா தனது கணவர் சரத் பாபுவை அந்த படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்க, ஜெயலலிதா அதுகுறித்து லெனினிடம் பேசியதுடன், ரஜினியிடம் அவரே சொல்லிவிடுவார் என்றும் நினைத்துவிட்டார். ஆனால் லெனினோ ரஜினியிடம் சொல்லாமல் விட்டுவிட்டார். நடந்த விஷயம் எதுவும் தெரியாத ரஜினி ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்ததுடன், ஜெயலலிதாவின் வாட்ச்மேன் அவரை மோசமாக நடத்தியதால் அவமானத்துடன் திரும்பினார் ரஜினி. ஜெ சொன்னபடியே 1980ஆம் ஆண்டு சரத் பாபு - ஜெ நடித்த ‘நதியை தேடிவந்த கடல்’ திரைப்படம் வெளியானது. இதுகுறித்து பின்னர் கேள்விப்பட்ட லெனின் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க, விவரம் அறிந்த சரத் பாபுவும் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டார். இப்படி ரஜினி - சரத் நட்பு உருவாக இந்த பிரச்சினை ஒரு காரணமாக அமைந்தாலும் ரஜினி - ஜெ இடையே, அந்த சம்பவம் பெரும் விரிசலை உண்டாக்கியது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டுதான் ரஜினி அவ்வாறு நடுரோட்டில் நடந்துகொண்டதாக கூறப்பட்டாலும், அடுத்தடுத்து ரஜினி தொடர்ந்து ஜெ.வை எதிர்க்கத் தொடங்கினார்.
ரஜினியுடன் நடிக்க ஜெயலலிதா மறுத்ததால் சரத் பாபுவுடன் ஏற்பட்ட நட்பு
1995ஆம் ஆண்டு ரஜினியின் பெயர் பட்டிதொட்டியெங்கும் பரவ, அவருக்கு மேலும் புகழை சேர்க்கும்விதமாக வெளியானது ‘பாட்ஷா’. அந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த பெரிய தாதாவாக நடித்து அசத்தியிருந்தார் ரஜினி. இந்த படத்திற்கு பிறகுதான் இருவருக்கும் இடையேயான பகை மேலும் வலுத்தது. அதற்கான வெளிப்படையான காரணம் தெரியாமல் மர்மம் காத்துவந்த நிலையில், அதே 1995ஆம் ஆண்டு இறுதியில் ரஜினி அளித்த பேட்டி மேலும் சர்ச்சையை கிளப்பியது. 1996ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், “ஜெயலலிதாவுக்கு மீண்டும் வாக்களித்தால் கடவுளால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என்று பகிரங்கமாகவே பேட்டியளித்தார் ரஜினி. இதனால் அடுத்த தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை இழந்தார் ஜெயலலிதா. ரஜினியின் இந்த செயல் ஜெ.வின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
இதனால் ரஜினியை சீண்ட ஆரம்பித்தார் ஜெ. 1996ஆம் ஆண்டு ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா இல்லையா என்று பொதுவெளியில் ஜெயலலிதா பேச, உடனே பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தி, தான் கருப்பு பணம் வாங்கவில்லை என்று சொன்னால் அது பொய் எனவும், ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் வாங்கியதாகவும், அது தவறு என்று உணர்ந்தபின்னர் நிறுத்திக்கொண்டதாகவும் கூறியதுடன், திரைத்துறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு இது பற்றியெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் இப்படி ஒரு கேள்வி எழுப்பியதை என்னவென்று சொல்வது என துணிச்சலாக பதிலளித்தார் ரஜினி.
பாட்ஷா பட வெற்றிவிழாவிற்கு பிறகு ஜெயலலிதாமீது கோபம் கொண்ட ரஜினி
மேலும் தனது பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டாம் எனவும், தனது ரசிகர்களுக்கும் தனக்குமிடையே இதுபோன்ற அரசியல் ஆயுதங்களை வைத்து பிரிவினையை உண்டாக்கவேண்டாம் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், திரைத்துறையில் அதிகமாக வருமான வரி கட்டும் ஒரே நடிகர் நான்தான் என்றும், அதற்கான உரிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியதோடு, முன்பு ஜெயலலிதாவுக்கு பணவெறி இருந்தது, இப்போது பதவி வெறி இருக்கிறது என்று பகிரங்கமாக பேட்டியளித்தார்.
1996ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோல்வியுற ரஜினியுடனான மோதல் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. 1997ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொள்ள ரஜினி முற்பட்டார். அவர் தனது மனைவி லதாவுடன் மந்திராலய பூஜை பிரசாதத்தை ஜெ.வுக்கு கொண்டுசென்று கொடுக்க, அவரும் அதை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்திலும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் ஜெ. அதன்பிறகு இருவரும் நல்ல நட்புறவை பாராட்டிவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஜெ.வின் மறைவின்போதும் பூதவுடலுக்கு தனது மகளுடன் சென்று அஞ்சலி செலுத்தினார் ரஜினி.
ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கிய காரணத்தை பகிர்ந்த ரஜினி
ஆர்.எம்.வீரப்பனுடன் நெருக்கம் - 30 ஆண்டுகளுக்கு பின் மனம்திறந்த ரஜினி!
ரஜினி - ஜெயலலிதா இடையேயான பகை, கோபம் மாறி நட்புறவு உருவாகிய அனைத்து கதைகளையும் மக்கள் மறந்துவிட்ட நேரத்தில் எதற்காக ஜெயலலிதாவின்மேல் ரஜினி நீண்டகாலம் கோபமாக இருந்தார் என்பதற்கான முக்கிய காரணத்தை 30 ஆண்டுகளுக்கு பிறகு மனம்திறந்து தெரிவித்திருக்கிறார் ரஜினி. அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி போன்ற மிக முக்கிய அரசியல் தலைவர்களின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற காரணமாகவும் இருந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆர்.எம். வீரப்பன். இவர் திரைப்பட தயாரிப்பாளரும்கூட என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. எம்ஜிஆரின் ‘இதயக்கனி’, ரஜினியின் ‘பாட்ஷா’ போன்ற பெரிய ஜாம்பவான்களின் சினிமா கெரியரில் முக்கிய படங்களை தயாரித்த இவர், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கங்களாக பார்க்கப்படுகிற ஆழ்வார் ஆராய்ச்சி மையம், கம்பன் கழக சேவை போன்றவற்றை நிறுவ காரணமாக திகழ்ந்தவர் ஆவர். இவருடன் ரஜினி மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆர்.எம்.வி-இன் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் வெளியானது. அதன் பிரி-வியூவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் பேசியிருந்தனர். அதில் ரஜினி பேசியதுதான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் , “என்னுடன் நெருக்கம்காட்டி என்மீது மிகவும் அன்பாக இருந்த ஒருசிலரில் ஆர்.எம்.வியும் ஒருவர். பாட்ஷா 100வது நாள் வெற்றி விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வி சார் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது நான் வெடிகுண்டு கலாசாரத்தைப் பற்றி பேசினேன். ஒரு அமைச்சரை உட்கார வைத்துக்கொண்டு அதைபற்றி பேசக்கூடாது என்று அப்போது எனக்கு தெளிவு இல்லை. நான் பேசியது தெரிந்தபிறகு, அதிமுகவில் அமைச்சராக இருந்த அவரை புரட்சி தலைவி ஜெயலலிதா பதவியில் இருந்தே தூக்கிவிட்டார். அது தெரிந்தவுடன் என்னால்தான் இப்படி ஆகிவிட்டதே என்று ஜெயலலிதாவிடம் பேசட்டுமா என ஆர்.எம்.வியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஜெயலலிதா ஒரு முறை முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றமாட்டார். அவரிடம் பேசி உங்களுடைய மரியாதையை இழக்கவேண்டாம். அப்படியே எனக்கு பதவி கிடைத்தாலும் அது எனக்கு தேவையில்லை என்று பெருந்தன்மையாக கூறிவிட்டார். இதுவும் ஜெயலலிதாவை நான் எதிர்த்ததற்கு முக்கியமான ஒரு காரணம்” என்று கூறியிருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த விஷயம் குறித்து பேசியிருப்பது அரசியல்வாதிகளிடையேயும் பேசுபொருளாகியிருக்கிறது.