நடிகைகளின் கணவர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பார்களா? - நடிகை சுஜாதா கணவர் பேட்டி
நடிகைகளின் கணவர்கள் என்ன செய்கிறார்கள்? நடிகைகளுடன் ஒத்துழைக்கிறார்களா? அல்லது சண்டையா? சுஜாதாவின் கணவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்!;
(07.06.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
நடிகைகளின் கணவர்கள் என்ன செய்கிறார்கள்? நடிகைகளுடன் ஒத்துழைக்கிறார்களா? அல்லது சண்டை போடுகிறார்களா? சுஜாதாவின் கணவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்!
“என் மனைவிக்கு நான் எந்தவித கட்டுப்பாடும் விதிப்பது இல்லை. ஒரு சுதந்திரப் பறவையாகவே, அவள் எதையும் முடிவு எடுக்கிறாள்'' என்று சொன்னார், நடிகை சுஜாதாவின் கணவர் ஜெயகர்.
"நாங்கள் இரண்டு பேருமே உழைப்பில் நம்பிக்கை உள்ளவர்கள். கஷ்டப்பட்டு உழைப்பவர்கள். அதனால் எங்களிடம் வேறு பிரச்சினைகள் எழுவது இல்லை" என்றும் அவர் கூறினார்.
ஜெயகர் மேலும் சொன்னது :
மன அமைதி
“நடிப்புத் தொழிலுக்கு மன அமைதி வேண்டும். உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால்தான், நடிப்பில் கவனம் செலுத்த முடியும். அதனால், கூடிய மட்டும் என் மனைவிக்கு (சுஜாதாவுக்கு) மன வருத்தம் தரும் நிகழ்ச்சிகள் நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். காலையில் எழுந்ததும், சுஜாதாவின் மேக்கப்மேன், சிகை அலங்காரம் செய்பவர்கள் போன்ற ஒப்பனைக்காரர்கள் வந்துவிட்டார்களா என்று கவனிப்பேன். அன்றைய படப்பிடிப்புக்கான அலங்காரப் பொருட்கள் தயாராக இருக்கின்றனவா“ என்றும் பார்த்துக்கொள்வேன்.
அழகு பதுமையாக சுஜாதா...
கால்ஷீட்
பொதுவாக கால்ஷீட் விவகாரங்கள் எல்லாம் சுஜாதாவுக்கு அத்துபடி. ஒரே நாளில், இரண்டு படத்துக்கு கால்ஷீட் இருந்தால் மட்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சுஜாதாவிடம் சொல்லுவேன். என் மனைவியால், எந்த தயாரிப்பாளர்களுக்கும் தொல்லை ஏற்படக்கூடாது என்று நினைப்பவன், நான். அதேநேரம், தயாரிப்பாளர்கள் சுஜாதாவுக்கு தொல்லைக் கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். புதிய படத்துக்கு சுஜாதாவை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் கதை கேட்பேன். அப்படி கேட்பதுகூட, அதுபோன்ற கதையை வேறு தயாரிப்பாளர்கள் யாரும் எடுத்துக்கொண்டு இருக்கக்கூடாதே என்பதற்காகத்தான்!. பண விவகாரம், வருமான வரி கணக்கு, வீட்டு செலவு எல்லாம் என் பொறுப்பில் வைத்து இருக்கிறேன். இதுபோன்ற விவகாரங்களில் சுஜாதா தலையிடத் தொடங்கினால், அவளது மன அமைதி கெடும். குழப்பம் ஏற்படும். நடிப்பில் கவனம் செலுத்த முடியாது.
கோபமான முகத்துடன் நடிகை சுஜாதா
தொழில்
காலையில் சுஜாதா படப்பிடிப்புக்குப் புறப்பட்டுப் போனதும், நான் எனது ஊறுகாய் கம்பெனிக்குச் சென்றுவிடுவேன். (ஜெயகர், "அம்பீஸ் ஊறுகாய்" என்ற ஊறுகாய் தயாரிப்பு கம்பெனியை சொந்தமாக நடத்தி வருகிறார்.) பிறகு, இரவு 9 மணிக்குத்தான் இருவரும் சந்திப்போம். எங்கள் ஒரே மகன் சதீஷ், பகல் முழுவதும் ஆயாவிடமே வளருகிறான். நாங்கள் இருவருமே காலையில் வேலைக்குப் போய்விட்டு இரவு திரும்புவதால், எங்கள் சொந்தக்காரர்கள் யாரும் எங்கள் வீட்டில் தங்க விரும்புவது இல்லை.
அழகிய புன்னகையுடன்....
நண்பர்கள்
நாங்கள் நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் உண்டு; எங்கள் வேலை உண்டு என்று, நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம். சுஜாதாவுக்கு வெளியூர் படப்பிடிப்பு என்றால் மட்டும் நான் துணைக்குச் செல்வது உண்டு. விழாக்கள் என்றாலும் சேர்ந்து போவோம். சுஜாதா ஆடம்பரமாக உடுத்த வேண்டும் என்று ஒருபோதும் ஆசைப்படமாட்டாள். ரொம்ப சிம்பிள்! அதனால், எப்பொழுதாவதுதான் நாங்கள் சேர்ந்து கடைக்குப் போவோம். படப்பிடிப்பு இல்லாத போது, சுஜாதா சினிமாவுக்குப் போக விரும்புவாள். அப்போதும் நான்தான் அழைத்துப்போக வேண்டும். தனியாக செல்ல மாட்டாள்.
புன்னகை ததும்பும் முகத்துடன்...
இந்த உலகத்தில் வாழப்போவது கொஞ்சநாள். அந்த கொஞ்ச நாளிலும் அமைதி குலைந்து வாழ நாங்கள் ஆசைப்படவில்லை. என் மனைவி என்னிடம் எவ்வளவு மேன்மையாக நடந்துகொள்கிறாளோ, அதைவிட ஒரு படி மேலாக நான் அவளிடம் அன்பு செலுத்தி வருகிறேன். எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படுவது இல்லை. ஏதாவது இருந்தால், மனம்விட்டுப் பேசி தீர்த்துக்கொள்வோம். எனவே, எங்கள் இல்லறம் தடையில்லாமல் இனிமையாக நடக்கிறது. நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன். சுஜாதா, இந்து. அவளை என் பக்கம் இழுக்கவோ, அல்லது என்னை அவள் தன் பக்கம் இழுக்கவோ ஒருபோதும் முயன்றது இல்லை. அதிலும் நாங்கள் முழு சுதந்திரமாக இருக்கிறோம் என்று கூறினார், ஜெயகர்.