என் மகள் நடித்தால்தான் எங்களுக்கு சாப்பாடு! - "ஒய். விஜயா" அம்மா
என் மகள் நடித்தால்தான் எங்களுக்குச் சோறு" என்கிறார், "ராங் நம்பர்" விஜயாவின் அம்மா பாலம்மா.;
(31.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
என் மகள் நடித்தால்தான் எங்களுக்குச் சோறு என்கிறார், "ராங் நம்பர்" விஜயாவின் அம்மா பாலம்மா.
பாலம்மாவுக்கு பத்து குழந்தைகள். 6 பெண்கள், 4 ஆண்கள். விஜயா 5-வது குழந்தை!
பாலம்மா சொன்னார்...
நடனப் பயிற்சி
"ஒய். விஜயா குழந்தைப் பருவத்தில் அழகாகவும் சுட்டியாகவும் இருந்தாள். அதனால் 3 வயதில் அவளை நடனம் பயில வைத்தோம். விஜயாவுக்கு 12 வயது நடக்கும்பொழுது நாங்கள் சென்னைக்கு வந்தோம். (விஜயாவின் சொந்த ஊர் கடப்பா-ஆந்திரா) சென்னையில் நடன ஆசிரியர் சைவா, சத்தியம் ஆகியோரிடம் விஜயா நடனப் பயிற்சி பெற்றாள்.
அப்பொழுது எல்லாம் நாங்கள் சினிமா பார்த்தது இல்லை. அதனால், விஜயாவை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் எழவில்லை. அதோடு, விஜயாவின் அப்பா (பெயர் ஞானிய்யா) நல்ல வேலையில் இருந்தார். அதனால், பணப் பிரச்சினை இருக்கவில்லை. ஒரு கவுரவத்துக்காகவே விஜயாவுக்கு நடனப் பயிற்சி அளித்தோம்.
கையில் மது, சிகரெட்டுடன் நெகடிவ் ரோலில் ஒய். விஜயா
வாய்ப்பு
அந்த நேரத்தில் தெலுங்குப் படத்தில் நடிக்கப் புதுமுகம் தேவை என்று, பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்து இருந்தது. நடன ஆசிரியர் சைவா, எங்களிடம் வந்து, "விஜயாவை சினிமாவில் நடிக்க வைக்கலாமா?" என்று கேட்டார்.
விரும்பி கேட்கிறாரே என்பதற்காக, "உங்கள் விருப்பம்" என்றேன், நான்.
சைவாவின் முயற்சியால், "பெற்றோர்கள்" என்ற தெலுங்குப் படத்தில், சோபன்பாபுக்கு ஜோடியாக நடிக்க விஜயா ஒப்பந்தமானாள். அதைத் தொடர்ந்து, மளமளவென்று தெலுங்குப் படங்கள் வந்தன. நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்கு பெட்டிக் கட்டத் தொடங்கினோம்.
புன்னகையுடன் கிறங்க வைக்கும் தோற்றத்தில் ஒய். விஜயா
அ. ஒ. தொ. சு.
அந்த நேரத்தில், சென்னையில் நடந்த "அவள் ஒரு தொடர் கதை" படத்தின் 100-வது நாள் விழாவுக்கு விஜயா போயிருந்தார். விழாவில் விஜயாவைப் பார்த்த டைரக்டர் பாலசந்தர், தனது "மன்மத லீலை” படத்தில், விஜயாவுக்கு வாய்ப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து விஜயாவுக்கு தமிழிலும் படங்கள் வந்தன. அதனால், சொந்த ஊருக்குப் போவதை நிறுத்தி வைத்தோம். விஜயாவுக்கு வேகமாக வந்த வாய்ப்புகள், பிறகு படிப்படியாகக் குறையத் தொடங்கின. அதற்குக் காரணம், நாங்கள் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டு கெஞ்சுவது இல்லை.
இந்தப் பாத்திரத்தை விஜயாதான் செய்ய வேண்டும் என்று, அவளைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள் படங்களில் மட்டுமே அவள் நடித்தாள். அப்போது நாங்கள் சினிமா வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அவள் அப்பாவின் உழைப்பு இருந்தது. அதனால், வாய்ப்பு குறைந்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அழகிய கிராமத்து பெண் லுக்கில் விஜயா
பொறுப்பு
ஆனால், இப்பொழுது அப்படி அல்ல. விஜயாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால், குடும்பப் பொறுப்பு என் மீதும், விஜயா மீதும் விழுந்து விட்டது. எங்களது பெரிய குடும்பத்துக்கு, இப்பொழுது உள்ள ஒரே வருமானம், விஜயாவின் உழைப்புதான்! குடும்பமே அவளைத்தான் நம்பியிருக்கிறது!
கவனிப்பு
உழைக்கிற பிள்ளைக்கு எப்பொழுதுமே ஒரு தனி கவனிப்பு உண்டு. அந்த மரியாதையை விஜயாவுக்கும் நாங்கள் கொடுக்கிறோம். விஜயா படித்தவள். விவரம் தெரிந்தவள். அதனால், கால்ஷீட்டு விவரங்களை அவளே கவனித்துக்கொள்கிறாள். படக் கம்பெனிக்கு போன் செய்து, பணத்துக்கு ஏற்பாடு செய்வது மட்டும் என் பொறுப்பு. என் மகளின் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவள் சிறந்த நட்சத்திரமாகத் திகழுவாள் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை என்று சொன்னார், பாலம்மா.