மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்! அதிர்ச்சியில் கங்கனா! - கோலிவுட் டூ பாலிவுட் டாக்ஸ்!

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் கனிம்மா பாடல் சமூக ஊடகங்களில் மிகவும் டிரெண்டான நிலையில் அந்த படம் 90களின் காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார்.;

Update:2025-04-15 00:00 IST
Click the Play button to listen to article

‘விடாமுயற்சி’யைத் தொடர்ந்து அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதுபோக, கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியிருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகம் குறித்த பல செய்திகள் இந்த வாரம் முழுக்க வெளியாகியுள்ளன. பாலிவுட்டும் அதில் குறைந்தபாடில்லை. இந்த வாரம் வெளியான சினிமா அப்டேட்ஸ்களில் சில உங்களுக்காக...

டபுள் ரோலில் சூர்யா!

‘ரெட்ரோ’ படத்தை அடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார் சூர்யா. ஏற்கனவே இந்த படத்தில் இவர் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு கதாபாத்திரத்திலும் அதாவது 2 வேடங்களில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்காலிகமாக ‘சூர்யா 45’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, சுவாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


‘ரெட்ரோ’ படத்தை அடுத்து இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் சூர்யா

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் கனிம்மா பாடல் சமூக ஊடகங்களில் மிகவும் டிரெண்டான நிலையில் அந்த படம் 90களின் காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருக்கிறார். அடுத்தடுத்து புதிய படங்களால் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சூர்யா.

அஜித்துடன்... - நெகிழும் பிரியா வாரியர்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த வாரம் ரிலீஸாகியது. ஓ.ஜி ஃபேன் பாய் மூமெண்ட்ஸை அஜித் ரசிகர்களுக்கு கொடுத்து தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அஜித்துடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


அஜித்துடன் நடித்த தருணம் குறித்து பிரியா வாரியர் நெகிழ்ச்சிப் பதிவு

அந்த பதிவில், “நீங்கள் ஒரு ஜெம் சார். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்பதை உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். உங்களோடு இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்புக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்றும் உங்களுடைய தீவிர ரசிகை!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 ஸ்லிம் கமல்!

‘இந்தியன் 2’ படத்தின் தோல்வியால் மனமுடைந்த கமல் தனது அடுத்த படமான ‘தக் லைஃப்’ மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். ‘நாயகன்’ என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்திருக்கிறது கமல் - மணிரத்னம் கூட்டணி. இந்த படத்தின் வேலைகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் நிலையில், கமலுடன் சிம்புவும் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் அடுத்து சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்குகிற புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக கமல் தெரிவித்திருந்தார்.


‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு ஆக்‌ஷன் கதையில் கமிட்டாகியிருக்கும் கமல்

அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்காக கமல் எடையை குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இன்ஸ்டாகிராமில் கமல் போஸ்ட் செய்திருந்த புகைப்படத்தில்கூட அவர் மிகவும் எடைகுறைந்து மெலிந்து காணப்பட்டார். அதனால் இந்த படத்தில் கமலின் வயதை குறைத்து இளம்வயது காதல் நாயகனை நம் கண்முன் கொண்டுவருவார் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

விஜய் சேதுபதியுடன் தபு!

தமிழில் 2000ஆம் ஆண்டு வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தபு. அதனைத் தொடர்ந்து ஓரிரு படங்கள் மட்டுமே தமிழில் நடித்த அவர், அதன்பிறகு இங்கு தலைகாட்டாமல் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தற்போது பெண்களை மையப்படுத்திய மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் தபு, 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவிருக்கிறார்.


விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிக்கும் தபு

பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தபு. இந்த படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

கால்ஷீட்தான் பிரச்சினையா?

‘புஷ்பா’ படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் சரசரவென உச்சத்திற்கு சென்றுவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து பான் இந்தியா நடிகையாக வலம்வருகிறார். அதற்கேற்றாற்போல், ‘புஷ்பா 2’ மற்றும் ‘சாவா’ போன்ற படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தன. ஆனால் கடைசியாக சல்மான் கானுடன் இவர் சேர்ந்து நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் எதிர்பாராமல் தோல்வியை சந்தித்தது.


‘சிக்கந்தர்’ படத்தின் தோல்வியால் ராஷ்மிகா தெலுங்கு வாய்ப்பை இழந்ததாக வெளியாகும் தகவல்கள் 

இந்த படத்தின் தோல்வி காரணமாக பிரபாஸுடன் சேர்ந்து நடிக்கவிருந்த படத்திலிருந்து ராஷ்மிகாவின் பெயர் நீக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு பதிலாக வேறொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் வருகிற ஜூன்வரை வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் உடனடியாக இந்த படத்தில் கமிட்டாவது கஷ்டம் என்று ராஷ்மிகா சொல்லிவிட்டதே வேறு கதாநாயகி தேடலுக்கு காரணம் என்கின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

ஷாக்கில் கங்கனா ரனாவத்!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தனது சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகியிருக்கிறார். சினிமா, அரசியல் என ஓடிவரும் இவர், மணாலியில் உள்ள தனது வீட்டிற்கு மாதம் ரூ. 1 லட்சம் மின்சார கட்டணம் செலுத்தியதாக வருத்தப்பட்டுள்ளார்.


இமாச்சலப் பிரதேசத்தை ஆளுகிற காங்கிரஸ் கட்சி குறித்து கங்கனா ரனாவத் விமர்சனம்

அந்த வீட்டில் தான் வசிக்கவில்லை எனவும், வீட்டில் இல்லாதபோதே இந்த அளவிற்கு மின் கட்டணம் வருகிறது என்றால் நம் மாநிலத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது எனவும், இதற்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மண்டி பகுதியில் நடந்த அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டபோது இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்