மகனின் கனவை நிஜமாக்கிய நடிகை ஷாலினி அஜித்! குடும்பத் தலைவியாக அசத்தல்!

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பார்கள். அதற்கேற்ப, அஜித்தின் மகன் ஆத்விக் திறமையான கால்பந்து வீரராக வளர்ந்து வருகின்றார்.;

Update:2025-04-08 00:00 IST
Click the Play button to listen to article

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பார்கள். அதற்கேற்ப, அஜித்தின் மகன் ஆத்விக் திறமையான கால்பந்து வீரராக வளர்ந்து வருகின்றார். அஜித் ஒரு பைக் ரேசர், அவரது மனைவி ஷாலினி ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என கணவன் மனைவி இருவரும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதனால், இவர்களின் மகள் அனோஷ்காவும் பேட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக வளர்ந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் மகன் ஆத்விக் அதனை மிஞ்சும்படியாக கால்பந்து விளையாட்டில் பெரும் ஈடுபாடு காட்டி வருகிறார். தனது மகனின் வளர்ச்சி குறித்து ஷாலினி அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஆத்விக் தனது கனவு நாயகன் ரொனால்டினோவை சந்தித்த சம்பவம் தற்போது அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் விரிவான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

அஜித், ஷாலினி வழியில் மகன்

தமிழ் திரைப்பட உலகில், திரைப்படத்தை தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வம் செலுத்தி, ஈடுபாடு காட்டும் நடிகர் அஜித், சமையல், தோட்டப் பணிகள், துப்பாக்கி சுடுதல், கார் மற்றும் பைக் பந்தயம், புகைப்படக் கலை, பைக் சுற்றுப்பயணம், சைக்கிள் ஓட்டம் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, தனது ரசிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். குறிப்பாக, கார் மற்றும் பைக் பந்தயத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சிறப்பிற்குரியவை. இளமைக் காலத்திலேயே பைக் பந்தயங்களில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 18 வயதில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றினார். மேலும், தனது ஆர்வத்தை நிறைவேற்ற, ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றார். பின்னர், நடிகராக உயர்ந்தபோதிலும், தனது பந்தய ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து பயணித்தார்.அதன் தொடர்ச்சியாக, 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு நான்காவது இடத்தைப் பிடித்தார். அடுத்த ஆண்டே ஆசியாவின் ஃபார்முலா பிஎம்டபிள்யூ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று பன்னிரண்டாவது இடத்தைப் பெற்றார். மேலும், 2004 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பின் தேசிய பிரிவில் அரை பருவத்தில் பங்கேற்று ஏழாவது இடத்தைப் பிடித்தார். 2010 ஆம் ஆண்டிலும் ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று தனது ஆர்வத்தை தொடர்ந்துகொண்டு சென்றார்.


அஜித் மற்றும் மகள் அனோஷ்காவுடன் ஷாலினி

15 ஆண்டுகளுக்கு பின்னர், 2025 ஆம் ஆண்டு, தனது சொந்த ரேசிங் குழுவுடன் FIA 24H சீரிஸ் போட்டிகளில் பங்கேற்றார். துபாய் 24H 2025 போட்டியில், அவரது குழு 991 பிரிவில் மூன்றாவது இடத்தையும், GT4 பிரிவில் 'ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்' விருதையும் வென்றது. இப்படி அஜித் குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவர் என்றால், அவரது மனைவி ஷாலினி பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில், குறிப்பாக பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஷாலினி, திருமணத்திற்குப் பின்னரும் போட்டிகளில் பங்கேற்று மாநில மட்டத்திலும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவரது சாதனையை பாராட்டிய அஜித், அவருக்கு வீட்டிலேயே ஒரு பேட்மிண்டன் கோர்ட்டை பரிசாக வழங்கினார். இதேபோல், இவர்களின் மகள் அனோஷ்காவும் பேட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவராக இருப்பதோடு, மகன் ஆத்விக்கும் சிறுவயதிலிருந்தே தடகளத்தில் ஆர்வம் காட்டி, பள்ளி மட்டத்திலான ஸ்பிரிண்ட் மற்றும் ரிலே ஓட்டங்களில் முதலிடங்களைப் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிய ஆத்விக், தற்போது வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரராக திகழ்கிறார்.

ஆத்விக்கின் கால்பந்து ஆர்வம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் அதிகம் பகிராதவர். ஆனால், அவரின் மகன் ஆத்விக் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரவி வருவது அவரது ரசிகர்களிடத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஷாலினி-அஜித் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையான ஆத்விக், சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது, புகழ்பெற்ற Chennaiyin FC Grassroot Academy-யில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பள்ளிகள் மத்தியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஆத்விக் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்த தகவலை அவரது அம்மா ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போது, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதோடு, அவரை ‘குட்டித் தல’ என அன்போடு அழைத்து அவரது திறமையை பாராட்டவும் செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்தே கால்பந்து பயிற்சி எடுத்து தீவிரம் காட்டி வரும் ஆத்விக், தனது பள்ளிப் படிப்பையும் தொடர்ந்தபடியே கால்பந்து விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்.


அம்மா ஷாலினியுடன் ஆத்விக் 

பொதுவாக அஜித், தனது குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெற்றோராக விளங்குபவர். அந்த வகையில் ஆத்விக் கால்பந்து மீது ஆர்வம் காட்டும்போது, அவரும் மகனை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இதனால்தான் சில சமயங்களில் குடும்பத்துடன் வெளியே செல்லும் போதும், ஆத்விக் கால்பந்து ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. அப்படி ஒருமுறை, அஜித் தனது மகனுடன் நேரம் செலவிடும் அழகிய தருணங்களில், ஆத்விக்கின் நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. அதேபோல் உலகப்புகழ் பெற்ற பல கால்பந்து வீரர்களை தொடர்ந்து பின்பற்றி வரும் ஆத்விக், ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகர் எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் கடந்த ஆண்டில் ஸ்பெயினில் நடைபெற்ற ரியல் மாட்ரிட் vs வில்லாரியல் போட்டியை நேரில் காண, பெற்றோருடன் சென்றிருந்தார் ஆத்விக். அந்த புகைப்படங்களையும் ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த வரிசையில் ஆத்விக்கின் வாழ்வில் மறக்க முடியாத மற்றொரு முக்கிய நிகழ்வு தற்போது நடந்துள்ளது. அதுதான் உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டினோவை ஆத்விக் கடந்த வாரம் நேரில் சந்தித்த சம்பவம். இது அவரது கால்பந்து பயணத்தில் மறக்க முடியாத ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்திருக்கலாம்.

மகனின் கனவை நிஜமாக்கிய ஷாலினி

சிறு வயதிலேயே தன்னுடைய பயணத்தை தனக்கு விருப்பமான கால்பந்து விளையாட்டை நோக்கி நகர்த்தி செல்லும் ஆத்விக், சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் கனவை நிஜமாகியுள்ளார். அதுதான் உலக புகழ் பெற்ற பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோவை நேரில் சந்தித்த தருணம். சென்னையில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 தேதிகளில் சர்வதேச அளவிலான கால்பந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கம் கால்பந்து விளையாட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதுதான். இதில் உலகக் கோப்பையை வென்ற பிரேசில் வீரர்கள் கலந்து கொண்டு, கால்பந்து வளர்ச்சி குறித்து கலந்துரையாடியதோடு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி மற்றும் இந்தியன் ஆல்-ஸ்டார்ஸ் அணி இடையே நட்சத்திர கால்பந்து போட்டியும் நடைபெற்றது. 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய பிரேசில் லெஜண்ட்ஸ் அணியில் ரொனால்டினோ, ரிவால்டோ, லூசியோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினர். அதேபோல் இந்திய அணியில் முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.


 மகனுக்கு உறுதுணையாக இருக்கும் அஜித், ஷாலினி மற்றும் கால்பந்து வீரர் ரொனால்டினோவை சந்தித்த ஆத்விக் 

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடினாலும், எந்த அணியும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் இறுதியில், 2-1 என்ற கணக்கில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த பிரம்மாண்ட போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்திருந்தார். இந்த போட்டியை காண பல ரசிகர்கள் பெரும் ஆர்வமுடன் வந்ததோடு, அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினியும், அவர்களின் மகன் ஆத்விக்கும் மைதானத்திற்கு வந்திருந்தனர். ரொனால்டினோவின் தீவிர ரசிகராக இருக்கும் மகன் ஆத்விக்குக்காகவே ஷாலினி அவரை அழைத்து வந்திருந்தார். போட்டிக்குப் பிறகு, ரசிகர்கள், சிறுவர்கள் என பலரும் ரொனால்டினோவை சந்திக்க ஆர்வம் காட்டியபோது, அத்விக்கும் முண்டியடித்து சென்று ரொனால்டினோவை சந்தித்தார். அப்போது ஆத்விக்கின் தலையில் தடவி அவரை ஊக்கப்படுத்தினார் ரொனால்டினோ. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில், அஜித் மகன் ஆத்விக்கிற்கு இது ஒரு மறக்கமுடியாத தருணமாக மாறியுள்ளது. மகனுக்கு இன்பகரமான மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தி தந்த நடிகை ஷாலினியை, சூப்பர் குடும்பத் தலைவி என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 


Tags:    

மேலும் செய்திகள்