"நடிகை சோனா ஹார்ட் டிஸ்க் சர்ச்சை" - பெப்சி அலுவலகம் முன் கண்ணீருடன் தர்ணா!
பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த சோனா, சினிமா உலகில் வெறும் நடிகையாக மட்டும் இல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற ஒரு பிரபலம் ஆவார்.;
திரை உலகம் என்பது வெறும் ஒளி, காட்சிகள், புகழ் என்று சிலர் நினைத்தாலும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகள், அங்கு நடக்கும் அரசியல், சர்ச்சைகள் அனைத்தும் மிகப் பெரிய பின்னணியை கொண்டவை. அந்த வகையில், 90களின் பிற்பகுதியிலிருந்து 2000களின் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த சோனா, சினிமா உலகில் வெறும் நடிகையாக மட்டும் இல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்ற ஒரு பிரபலம் ஆவார். அப்படிப்பட்ட சோனா சமீபத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்து ‘ஸ்மோக்’ என்ற வெப் தொடரை இயக்கி வந்த நிலையில், ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்து தற்போது மீண்டு வந்துள்ளார். அது என்ன சிக்கல்? பெப்சி அலுவலகத்திற்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட வேண்டிய நிலை எதனால் அவருக்கு வந்தது ? என்பது குறித்து விரிவாக காண்போம்.
சர்ச்சைக்கு பெயர் போன சோனா
புடவையில் எளிமையான தோற்றத்தில் சோனா
நடிகை சோனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்தவர். அவர் முக்கியமாக இம்மொழி படங்களில் கவர்ச்சி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். சோனாவின் திரைப் பயணம் ஆரம்பத்தில் சிறிய துணை கதாபாத்திரங்களில் இருந்துதான் தொடங்கியது. ‘ஷாஜகான்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்ததன் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால், அக்காலகட்டத்தில் நடிகைகளுக்கு இருந்த ஒரு பொதுவான நிலைமை போல், அவரும் பின்னர் முழுமையாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இவரது அழகும், நடிப்புத் திறனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தாலும், அவருக்கென தனி மரியாதை கிடைக்கவில்லை. சோனாவின் பெயர் ஒவ்வொரு முறை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் ஒலித்த போதெல்லாம் அது அவருடைய திரைப்படங்களுக்காக மட்டுமல்ல, அவர் அளித்த பேட்டிகள், அவரது கருத்துக்கள், அவற்றால் எழுந்த சர்ச்சைகள் தான் அதற்குக் காரணமாக இருந்தன. அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு மிகப் பெரிய ஒரு விவாதத்திற்குரிய செய்தியாக, பாடகர் எஸ்.பி.பி. சரணுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடு பரபரப்பாக பேசப்பட்டது. அது என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில் அவரை சந்தித்த போது, சரண் சோனாவிடம் அத்துமீறியதாக அவர் எழுப்பிய குற்றச்சாட்டுதான். இது ஊடகங்களில் மிகப் பெரிய விவாதமாகி, போலீசில் புகாரளிக்கும் நிலைமையையும் எட்டியது. பிறகு, இருவரும் சமரசம் செய்து கொண்டதால், விவகாரம் அங்கேயே அடங்கிவிட்டது.
ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை சோனா
அதேபோல், 2012-ஆம் ஆண்டு அவர் அளித்த ஒரு பேட்டியால் இன்னொரு பரபரப்பு எழுந்தது. ஆண்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. “ஆண்களோடு வாழ்வது முட்டாள்தனம், திருமணம் என்பது தேவையற்றது, ஆண்கள் வெறும் 'டிஷ்யூ' பேப்பர் போல, பயன்பட்ட பிறகு தூக்கி எறியக் கூடியவர்கள்” என்று அவர் கூறியது பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதற்கு எதிராக பல்வேறு ஆண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இவருடைய கருத்துக்களால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இப்படி பல சர்ச்சைகளோடு பயணித்து வந்த சோனா சில வருடங்கள் சினிமா உலகில் இருந்து காணாமல் போனார். இந்நிலையில், சமீப காலங்களில் திரை வெளிச்சத்துக்கு திரும்பி வந்துள்ள அவர், இந்த முறை திரும்பியவிதம் வழக்கமான நடிகையாக அல்ல, மாறாக தயாரிப்பாளர், வெப் தொடர் இயக்குநராக வந்துள்ளார். இருப்பினும் இப்போதும் சர்ச்சைக்கு மட்டும் பஞ்சம் இல்லை. அவர் தயாரித்து இயக்கியுள்ள ‘ஸ்மோக்’ என்ற வெப் தொடர், அவருடைய வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வெப் தொடரை வெளியிட பல்வேறு தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னரே சில இயக்குநர்கள், நடிகர்கள் குறித்து அவர் அண்மையில் கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதமாகி, இதன் விளைவாக, சில பிரபலங்கள் அவருக்கு எதிராக கிளம்பியிருந்த நிலையில், தற்போது அவரது ‘ஸ்மோக்’ வெப் தொடரை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்னதான் பிரச்சினை?
நேர்காணல் ஒன்றில்...
நடிகை சோனா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு திரைப்படமாக எடுக்க விரும்பினார். இதற்காக ஒரு குழுவை அமைத்து, திரைக்கதை எழுத தொடங்கினார். ஆனால் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. பல தடைகளும், திட்டமிட்டது போல் சரியாக அமையாத சூழ்நிலைகளும் உருவாகின. இவ்வாறான சவால்களை எதிர்கொண்ட பிறகு, சோனா ஒரு முடிவுக்கு வந்தார். இது ஒரு வெப் தொடராக இருக்க வேண்டும். இப்படியொரு தொடராக இருந்தால்தான், அவரது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும், ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக கூற முடியும் என எண்ணி "ஸ்மோக்" என்ற வெப் தொடரை எடுக்க முடிவு செய்தார். உண்மையில் சோனா, தன் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டவர். குறிப்பாக, மலையாள திரையுலகில் இருந்தபோது, ஒரு நடிகர் அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் முதல், ஒரு இயக்குநர் அவரை மிரட்டிய சம்பவம்வரை பல அனுபவங்களை சந்தித்துள்ளார். இவை அனைத்தும், அவருடைய வாழ்க்கையை சுவாரஸ்யமான, அதேசமயம் கடுமையானதாக மாற்றியது. அதனால் அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வந்த "ஸ்மோக்" வெப் தொடர் மீதான எதிர்பார்ப்பும் எகிறி இருந்தது. இருப்பினும் இந்த தொடர் பூஜைபோட்டு துவங்கியதிலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வந்தது. எப்படியோ சிரமப்பட்டு முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூலுக்காக சங்கர் என்ற ஒருவரை மேலாளராக நியமித்தார் சோனா. ஆனால் இதுவே பெரிய பிரச்சினையாக அவருக்கு மாறியது. இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது, பெப்சி தொழிலாளர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், மேலாளராக இருந்த சங்கர், சோனாவிடம் இருந்து, படப்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்ட 8 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் , படப்பிடிப்பின் முக்கிய காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்று, திருப்பிக் கொடுக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நேரம் சோனா, தனது கடுமையான உழைப்பின் பலனை இழக்க முடியாது என்பதற்காக, இந்த விவகாரத்தை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் (பெப்சி) புகார் அளித்தார். அவர் இழந்த பணமும், மிக முக்கியமான ஹார்ட் டிஸ்க்கும் திரும்ப கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்கள் போராடி வந்தார். இருப்பினும் எந்த பலனும் அவருக்கு கிடைக்கவில்லை.
தர்ணாவில் குதித்த சோனா
பெப்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சோனா
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் (பெப்சி) தன்னிடம் மேலாளராக இருந்த சங்கருக்கு எதிராக புகார் கொடுத்து தனது படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை மீட்டுத்தர கோரி பல நாட்கள் ஆன நிலையில், பெப்சி அலுவலகத்திற்கு வந்த சோனா கடந்த மார்ச் 25 அன்று தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது ஊடகங்களை சந்தித்து பேசிய அவர், “சினிமா துறையில் 25 ஆண்டுகளாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓர் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்து ‘ஸ்மோக்’ என்ற வெப் தொடர் இயக்கத் திட்டமிட்டபோது, பூஜை நிகழ்ச்சியிலிருந்தே பல தடைகள் ஏற்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கான ஐந்து நாட்கள் சம்பளம் என் மூலம் பெறப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படாமல் திருடப்பட்டது. வெப் தொடரின் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் கொண்ட இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் கேமரா குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இவை அனைத்திற்கும் காரணமானவர், என்னிடம் மேலாளராக இருந்த சங்கரே. இதுகுறித்து பெப்சி மற்றும் மேலாளர் யூனியனில் புகார் அளித்தேன். ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்ற அதிகாரிகள், பின்னர், ஆமாம், அவர் ஏமாற்றிவிட்டார், ஆனால் திருப்பிக் கொடுக்கமாட்டார் என்று கூறியதாக” தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது...
தன் ஹார்ட் டிஸ்க்குகளை திருப்பிக் கேட்கும் போது, அவற்றை வழங்க மறுத்ததோடு, அவதூறாக விமர்சித்ததையும் சோனா குற்றம் சாட்டினார். சங்கருக்கு ஆதரவாக பலர் பேசுவதன் காரணம் புரியவில்லை என்பதாலும், தனது உரிமைக்காக போராட வேறு வழியின்றி பெப்சி அலுவலகத்தின் முன்பாக தர்ணா நடத்த முடிவு செய்ததாகவும் கூறினார். “இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்காவிட்டால், தினமும் போராட்டம் நடத்துவேன்,” என்றும் அவர் எச்சரித்தார். இந்தச் சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து அழைப்பு வந்து, “இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுகிறோம்” என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அன்றே தனது தர்ணாவை முடித்து விட்டு கிளம்பிய சோனா, அடுத்த நாளே நடிகர் சங்கம் தலையிட்டு தனது ஹார்ட் டிஸ்க்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்தச் சம்பவங்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சிலர், “தன்னுடைய படத்திற்கு விளம்பரத்தை ஏற்படுத்தவே தர்ணாவில் சோனா ஈடுபட்டார்” என்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். எவ்வாறு இருந்தாலும், தனது பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுள்ள சோனா, விரைவில் ‘ஸ்மோக்’ வெப் தொடரை முடித்து வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.