அழகில் தேவதை! நடிப்பில் ராட்சசி! - விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் "தபு"!
நடிகை தபு, இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து தனக்கென தனித்துவமான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிய மிகச் சிறந்த நடிகையாவார்.;
நடிகை தபு, இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து தனக்கென தனித்துவமான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிய மிகச் சிறந்த நடிகையாவார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர், தன் இயல்பான நடிப்பின் மூலம் தனிச்சிறப்பை பெற்றுள்ளார். ‘மச்சிஸ்’, ‘விராசத்’, ‘அஸ்தித்வா’, ‘ஹைதர்’, ‘அந்தாதுன்’, ‘திரிஷ்யம்’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளை பெற்றுள்ள தபு, உணர்ச்சி மூட்டும் காட்சிகளை நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் பெற்றவர். குறிப்பாக இவரது முகபாவனைகளின் ஆழம் மற்றும் குரல் ஒலியின் தனித்தன்மையால் இந்திய சினிமாவின் வலிமையான நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இரண்டு தேசிய விருதுகள், ஆறு பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் இந்திய அரசின் பத்மஶ்ரீ விருதைப் பெற்றுள்ள தபு, தனது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள், நேர்த்தியான நடிப்பு மற்றும் திரைத்துறையின் மீது கொண்ட மரியாதை ஆகியவற்றால் இன்றுவரை உயர்ந்த இடத்தை நிலைநாட்டியுள்ளார். தமிழ் சினிமாவிலும் ‘காதல் தேசம்’ படம் துவங்கி பல படங்களில் நடித்த தபு, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளார். அதன் விரிவான தகவல்களையும், இதுவரை அவர் தமிழில் நடித்த படங்களின் விவரங்களையும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
இதய தேசத்தை ஆண்ட காதலி
‘காதல் தேசம்’ திரைப்படத்தில் அப்பாஸ் மற்றும் வினீத்துடன்...
1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தபு. கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் வினீத், அப்பாஸ், தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சென்னை பச்சையப்பா மற்றும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இன்றைய மாடர்ன் சென்னைக்கு ப்ளூ பிரிண்ட் காப்பி போல் வெளிவந்த இப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் அன்று பட்டிதொட்டி எல்லாம் ஒரு கலக்கு கலக்கியது. அதிலும் 'கல்லூரிச் சாலை', 'என்னைக் காணவில்லையே நேற்றோடு', 'தென்றலே தென்றலே' ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்ற எவர் கிரீன் ஹிட் பாடல்கள் ஆகும். கார்த்திக் (வினீத்) மற்றும் அருண் (அப்பாஸ்) என்ற இரு நண்பர்கள் திவ்யா (தபு) என்ற ஒரே பெண்ணை காதலிப்பதனால், அவர்களின் நட்பில் ஏற்படும் மாறுதல்களைக் கூறும் இப்படத்தின் கதைக்களம் அந்த சமயம் பலரால் பெரியளவில் ரசிக்கப்பட்டதோடு, தபுவின் அழகிலும் மயங்கி உருகினார்கள். குறிப்பாக திவ்யா கதாபாத்திரத்தில் தபு வெளிப்படுத்திய முதிர்ச்சியான மற்றும் அழகான நடிப்பு பெரியளவில் ரசிக்கப்பட்டது. மேலும் தபுவின் பாங்கான நடிப்பை தாண்டி அவர் அணிந்திருந்த சுடிதார், அணிகலன்கள், ஜிமிக்கி மற்றும் மேக்கப் பொருட்கள் போன்றவையும் அன்றைய பெண்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றன. பொதுவாகவே கண்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறமை கொண்ட தபு, இந்த படத்திலும் சில முக்கியமான காட்சிகளில் வார்த்தைகள் இல்லாமல் பார்வை, முகபாவனைகள் வாயிலாகவே பேசி கலங்க வைத்திருப்பார். இரு நண்பர்களின் காதலுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் போதும், ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய வேதனையின் போதும் தபு வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இதனால் இப்படம் வெளியான போது நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பின்னர், தெலுங்கிலும் ‘பிரேம தேசம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.
கண்களால் சிறையெடுத்த அழகி
‘சிறைச்சாலை’ திரைப்படத்தில் மோகன்லாலுடன்...
மலையாளத்தில் வெளியான ‘காலாபானி’ திரைப்படம், 1996ஆம் ஆண்டு தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த இந்த படம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்தமான் சிறையில் நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தபு, கோவர்த்தன் கதாபாத்திரத்தில் வரும் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார். ஒரு கேரளக் கிராமத்து பெண்ணாக எளிமையான, ஒழுக்கமான, ஆழ்ந்த உணர்வுகள் கொண்ட அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருந்திய தபு, மிக நுட்பமான மற்றும் இயற்கையான நடிப்பை வழங்கி, பலரது பாராட்டுகளை பெற்றார். அதிலும் கணவர் சுதந்திரப் போராட்டக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், எதிர்கொள்ளும் மனதளவிலான போராட்டங்கள், பாசம், காத்திருப்பு ஆகிய அனைத்தையும் தபு சிறப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் வெளிப்படுத்தி, மிகுந்த கவனத்தை பெற்றார். இதன் மூலம் தானும் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்தார். குறிப்பாக கணவரை மீண்டும் சந்திக்கும் காத்திருப்பு மற்றும் அதன் வலிகள், சத்தமில்லாத கண்ணீர் மற்றும் மன அழுத்தத்தை பிரதிபலிக்கும் காட்சிகளில், நம்மையும் சேர்த்தே கலங்க வைத்திருப்பார் தபு. படத்தின் துவக்கத்தில் செம்பூவாக மலர்ந்து அடி பாடும் தபு, கிளைமாக்ஸில் வெள்ளை சேலை அணிந்து, கூந்தல் அலங்காரம் இல்லாமல் கணவருக்காக காத்திருக்கும் தருணத்தில், அன்பு பாசத்தால் ஒளிரும் இயற்கை அழகாகவே திரையில் தோன்றி, மனதிற்குள் பதியும் படியாக வாழ்ந்திருப்பார்.
முதிர் கன்னியாக நடிப்பில் முதிர்ச்சி
‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் அஜித்துடன் தபு
ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. ஜேன் ஆஸ்டின் எழுதிய 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இப்படத்தில் அஜித் குமார், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு மற்றும் அபாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமானின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகளும் இந்த படத்தில் முக்கிய அம்சம் பெற்றவையாக இருந்தபோதும் படம் அப்போது சுமாரான வெற்றியையே பெற்றது. இருப்பினும் படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி விமர்சகர்களால் பாராட்டு பெற்றிருந்தனர். குறிப்பாக பள்ளி முதல்வராக சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த தபு அமைதியான மற்றும் நிதானமான நடிப்பால் பலரையும் கவர்ந்திருந்தார். ஒரு முதிர் கன்னியாக அதிலும் ராசி இல்லாத பெண்ணாக பலரால் ஒதுக்கப்படும் கதாபாத்திரத்தில் உணர்ச்சி வெளிப்பாடுகள் மற்றும் நுணுக்கமான நடிப்பின் மூலம் காதல் மற்றும் கண்ணீர் ஆகியவற்றை அழகாக வெளிப்படுத்தி நடித்திருந்தார் தபு. சௌமியாவின் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் காதல் தொடர்பான நெருக்கடிகளை தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிக்க வைத்திருந்த தபு , உண்மையான நாவலில் வரும் வரிகளுக்கு பெண் வடிவமாக உயிர் கொடுத்து சிறப்பித்திருந்தார். இது தவிர இருவர் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜின் மனைவியாக ‘செந்தாமரை' என்ற கதாபாத்திரத்திலும், 1998ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த ‘தாயின் மணிக்கொடி’ படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்திலும், ப்ரியதர்ஷன் இயக்கிய ‘சிநேகிதியே’ திரைப்படத்தில் ACP காயத்ரி வர்மா என்கிற நெகடிவ் கதாபாத்திரத்திலும் நடித்து தனி முத்திரை பதித்திருந்தார்.
மக்கள் செல்வனுடன் தபு
பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதி கூட்டணியில் நடிக்கவுள்ள தபு
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்துக்கு பொருத்தமாக, எளிமை, நம்ம ஊர் பையன் தோற்றம், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் மிகுந்த நடிப்பு திறமை ஆகியவற்றின் வழியாக ரசிகர்களின் மனங்களில் உறுதியாக பதிந்துவரும் இவர், தற்போது பான் இந்தியா ஸ்டாராகவும் வளர்ந்துள்ளார். ஒரு பக்கம் நாயகனாக வெற்றிகரமாக நடித்து வருவதுடன், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாகவும் திரையை பகிர்ந்து கலக்கி வரும் விஜய்சேதுபதி, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து வருகிறார். அதேபோன்று, இவரை போலவேதான் இந்திய சினிமாவின் பல பரிமாணங்களை தொட்ட நடிகை தபு, பாலிவுட், தென்னிந்திய திரைப்படங்கள் என பன்முகத் திறமையுடன் பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர். எளிய கிராம பெண் முதல், சிக்கலான உளவியல் தோற்றமுள்ள கதாநாயகி வரை, ஒவ்வொரு வேடத்திலும் தன்னிலை மறந்து, தனித்துவமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளவர் இவர். இப்படிப்பட்ட இந்த இரண்டு திறமையாளர்கள் தற்போது ஒரு பான் இந்தியா படத்தில் இணையவுள்ளனர் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி இத்தனை நாள் சினிமா பயணத்தில் நடிக்காத ஒரு முற்றிலும் புதிய மற்றும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இன்னொரு முக்கிய அம்சமாக நடிகை தபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் தமிழ் திரையுலகில் இந்த படத்தின் மூலம் களமிறங்க உள்ளார். இது அவரது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தபுவின் இந்த ரீஎன்ட்ரி, தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகான வரவாகவும், மறக்க முடியாத தருணமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.