ரீல்ஸ் பண்றவங்களால எங்க பொழப்பு கெடுது! எதுக்கு இவங்க நடிக்க வராங்க? - நடிகை வடிவுக்கரசி நச் கேள்வி
ஒருகாலத்தில் நடிகராக அல்லது நடிகையாக வருவது கடினமான ஒன்று. மேடை நாடகங்களில் பங்கேற்று, தங்களின் திறமையை நிரூபித்த பிறகே அவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க முடிந்தது.;
ஒருகாலத்தில் நடிகராக அல்லது நடிகையாக வருவது கடினமான ஒன்று. மேடை நாடகங்களில் பங்கேற்று, தங்களின் திறமையை நிரூபித்த பிறகே அவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க முடிந்தது. இதற்கு மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற பலரும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். பின்னர், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் காலத்தில், முறையான நடிப்பு பயிற்சி அல்லது குருகுலக் கல்வி முறையின் மூலம் திறமையை வளர்த்த பிறகே திரையுலகில் இடம் பிடிக்க முடிந்தது. பின்னர் அவர்களது கடின உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் அவர்களை நட்சத்திரங்களாக்கியது. ஆனால் இன்று சூழல் மாறிவிட்டது. சிறிதளவு நடிப்புத் திறமையும், சமூக ஊடகங்களில் பிரபலமாவது குறித்த புத்திசாலித்தனமும் இருந்தால், எளிதில் நடிகராக முடியும். இன்றைய இளைஞர்கள் உழைப்பில்லாமல், குறுகிய வழிகளில் வெற்றியடைய முயற்சிப்பது போன்று, நடிகராகவும் சீக்கிரம் பரிசீலிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். முன்பு டிக்டாக் இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என பல சமூக ஊடக தளங்கள் இதற்குப் பெரிதும் உதவுகின்றன. இது இப்படி என்றால் சமூக ஊடகங்களில் புகழ் பெற்றவர்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி, அவர்களை நடிகர்களாக மாற்றி வருகின்ற சூழ்நிலையும் இப்போது நிலவி வருகிறது.. இது ஒரு ஆரோக்கியமான போக்கா? அல்லது நடிப்பிற்கான சரியான வழியா? இதைப் பற்றி இங்கு விரிவாக அலசலாம்.
இளைஞர்களும் இன்ஸ்டாகிராமும்
இளைஞர்களின் இதயத் துடிப்பாக மாறியுள்ள இன்ஸ்டாகிராம்
இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாக இன்ஸ்டாகிராம் மாறியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, உலகத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளங்கையில் கொண்டு சேர்க்கும் மாயாஜாலக் கண்ணாடியாக இது உருவெடுத்துள்ளது. டிரெண்டிங் பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை, சினிமா, அரசியல் என அனைத்து தகவல்களும் நொடிப்பொழுதில் விரல் நுனியில் இதன் வாயிலாக குவிகின்றன. அதன்மூலம், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், பிரபலங்களுடன் உரையாடவும் இது ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. மேலும், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்க்கை முறையை பகிர்ந்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இது பெரியளவில் உதவி வருகிறது. அதேசமயம், இதன் மூலம் சில நல்ல கருத்துக்களோடு சில எதிர்மறையான தகவல்களும் பரவுகிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. இந்த சூழலில் சமீபகாலமாக தமிழ் யூடியூப் கிரியேட்டர்கள் பலரும் நடிப்பு, நடனம், நகைச்சுவை, விமர்சனங்கள், தகவல்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக உருவாக்கி, இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றனர். 15 முதல் 60 விநாடிகள் வரையிலான இந்த குறும்படங்கள் மின்னல் வேகத்தில் வைரலாகி, பலரது கைபேசியில் எளிதில் சென்று சேர்கின்றன. இதனால், பல சாதாரண மக்களும் இதனை விரும்பி பயன்படுத்துவதோடு, தங்களையும் பிரபலமாக மாற்ற முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு இளைஞனின் நடனம் வைரலானால், பலரும் அதைப் பின்பற்றி நடனமாடி பிரபலமாவதோடு, அந்த இளைஞனுக்கும் எளிதில் புகழ் வெளிச்சம் கிடைக்கிறது. அதே போல், ஒரு உணவுக்கடையின் வீடியோ வைரலானால், அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த அளவுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் ஏராளமான வாய்ப்புகளை வழங்கினாலும், உண்மையான திறமை கொண்டவர்கள் பலர் இதன் மூலம் மங்கிப்போய்விடுவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இன்றைய திரைப்படத்துறையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் தாக்கம் என்பது பெரிதாக இருப்பதோடு, இன்று பல புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையான திறமைசாலிகள் இங்கு அடையாளம் காணப்படுகிறார்களா என்ற கேள்விக்குறியும் இருக்கிறது.
ரீல்ஸ் கொடுத்த வாய்ப்புகள்
இளைஞர்களுக்கிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இன்று ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மட்டுமல்ல, புதிய வாய்ப்புகளுக்கான கதவாகவும் மாறியுள்ளது. மீம்ஸ், நகைச்சுவை வீடியோக்கள், சினிமா வசனங்கள் ஆகியவை குறுந்தொடர் வீடியோக்களாக உருவாகி, பலருக்கு பிரபலத்தை உருவாக்குகிறது. சமீப காலமாக, இது தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய வழியாக வலுவடைந்துள்ளது. ஒருகாலத்தில் கல்வி, உடல்நலம், தொழில்நுட்பம் போன்ற தகவல்கள் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களை சென்றடைந்திருந்தது. ஆனால் இன்று, அது சினிமா வாய்ப்புகளுக்கான தேர்வாக மாறியிருக்கிறது. சிலர் இதை புதிய திறமைகளை கண்டறிய உதவும் ஒரு வாய்ப்பாகக் கருதினாலும், சிலர் வேதனை கலந்த புதுமுக தேடலாக பார்க்கிறார்கள். துவக்கத்தில், டிக்டாக் போன்ற குறுந்தொடர் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்கள் திரைத்துறையில் அடையாளம் காணப்பட்டு வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தனர். மிருணாலினி ரவி, மீரா மிதுன், பிக் பாஸ் ஷிவானி, ஜி.பி. முத்து, பிஜிலி ரமேஷ், திவாகர் ஆகியோர் இதற்கான உதாரணங்கள். தற்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்களும் திரைத்துறையில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ரீல்ஸ்களால் பிரபலமானவர்கள்
இது ஒரு வகையில் புதுமுகங்களை அறிமுகம் செய்யும் நல்ல வாய்ப்பாக இருப்பினும், தயாரிப்பு நிறுவனங்கள், ஃபாலோவர்ஸ் அடிப்படையில் தேர்வு செய்வதால், உண்மையான திறமைக்கு முக்கியத்துவம் குறைவதாக சிலர் கருதுகின்றனர். இதன் விளைவாகதான் டிடிஎஃப் வாசன் போன்ற சர்ச்சைக்குரிய பிரபல யூடியூபரை எல்லாம் முன்னிறுத்தி படம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவில் அரங்கேறின. ஒரு கட்டத்தில் அது கை விடப்பட்டாலும், சமூக ஊடகங்களின் வாயிலாக பிரபலமானவர்களை முன்னிறுத்தி படம் எடுப்பதற்கான அல்லது சீரியல் தயாரிப்பதற்கான முயற்சிகளில் இன்றும் தளர்வு ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு வாய்ப்பு பெறும் பலர் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளாததால், கிடைத்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த முடியாமல் போயிருக்கிறார்கள். காரணம், ரீல்ஸ் என்பது வெறும் 15-60 விநாடிகள் கொண்ட, வேகமான பொழுதுபோக்கு வடிவம். ஆனால், திரைப்படத்துறைக்கு நீண்ட நேரம் கதாபாத்திரத்துடன் ஒருமித்து நடிக்கும் ஆற்றல் அவசியம். மேலும், ரீல்ஸில் பிரபலமானவர்கள் பெரும்பாலும் நடனம், நகைச்சுவை அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் மூலம் மட்டுமே அறியப்படுகிறார்கள். ஆனால், திரைப்படத்துறையில் வெற்றி பெறுவதற்கு நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு, தெளிவாக வசனம் பேசும் திறன் மிக அவசியம். இந்த முக்கிய திறன்களை மேம்படுத்திக் கொள்ளாத காரணத்தால்தான், பலர், கிடைத்த வாய்ப்புகளை இழந்துள்ளனர். அதேசமயம், உண்மையான திறமை உள்ளவர்களுக்கு டெக்னாலஜி பற்றிய அறிவு இல்லாததால், அவர்கள் வாய்ப்புகளைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
மூத்த நடிகர்கள் அறிவுரை
இன்று யூடியூப், பேஸ்புக் ஆகியவற்றைத் தாண்டி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சியால், நகரம் முதல் கிராமம் வரை எந்த மூலையில் இருந்தாலும், ஒருவர் எளிதாக பிரபலமடையக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்த பிரபலத்தை பயன்படுத்தி, இன்றைய காலக்கட்டத்தில் பலர் சினிமாவிலும் எளிதாக நுழைய முடிகிறது. இது ஒருபுறம் வரவேற்கத்தக்க மாற்றமாக இருந்தாலும், உண்மையாகவே வாய்ப்புக்காக போராடி தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள மூத்த நடிகர், நடிகைகளுக்கும், கனவோடு கலைத்துறையை நோக்கி பயணித்து, பயிற்சி பெற்ற பின்னரே சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்தவர்களுக்கும், சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தவர்களால் வாய்ப்புகள் குறைவதாக சிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வடிவுக்கரசியிடம், ரீல்ஸ் பிரபலங்கள் குறித்துப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர், "இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படி ரீல்ஸ் செய்பவர்களுக்கு பின்தொடர்பவர்கள் (followers) அதிகமாக இருந்தால், பெரும்பாலான இயக்குநர்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றனர். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் வசனம் சொல்லி நடிக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். காரணம், ரீல்ஸில் யாரோ பேசிய வசனத்தை அப்படியே மீண்டும் பேசி நடிக்கத் தெரிந்திருந்தாலும், படப்பிடிப்பின் போது வசனங்களை மனப்பாடம் செய்து சொல்ல முடியாமல் போய்விடுகிறது.
ரீல்ஸ் குறித்து மூத்த நடிகை வடிவுக்கரசி கருத்து
இயக்குநரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டால், 'சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டு ஆயிரக்கணக்கில் பின்தொடர்பவர்கள் உள்ளவர்கள். அதனால்தான் வாய்ப்பு கொடுத்தோம்' என்று பதிலளிக்கின்றனர். ஆனால், வெறும் அந்த ஆயிரம் பேரின் ஆதரவை மட்டும் வைத்து ஒரு நடிகருக்குத் திறமை நிரூபிக்கப்பட்டுவிட முடியாது. இதனால், நேரமும் பணமும் வீணாகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஒருகாலத்தில் சினிமா வாய்ப்பு பெற, மேடை நாடகங்களில் நடித்து தங்களை நிரூபித்த பின்னரே வாய்ப்பு கிடைத்தது. பின்னர், சீரியல்களில் நடிப்பதன் மூலம் வாய்ப்புகளைப் பெற்றனர். இப்போது, ரீல்ஸ் மூலம் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதில் தவறு எதுவுமில்லை. ஆனால், ரீல்ஸ் செய்யும் ஒவ்வொருவரும் இதை வெறும் பொழுதுபோக்காக மட்டும் நினைக்காமல், வேறு ஒரு தொழிலையும் கையில் வைத்துக் கொண்டு சினிமா பயணத்தை தொடர வேண்டும். இது மட்டுமே வாழ்க்கை என்று எண்ணி ஏமாந்துவிட வேண்டாம் எனக் கூறினார். இது வடிவுக்கரசி மட்டும் கூறும் கருத்தல்ல. பல மூத்த நடிகர்களும் இதைத்தான் கூறி வருகின்றனர். இன்றைய AI யுகத்தில் எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக செய்து முடிக்கலாம் என்றாலும், கையில் வரையும் ஓவியத்திற்கும் AI உருவாக்கும் பிம்பத்திற்கும் உணர்வுப் பூர்வமான பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அதைப் போலவே, நடிப்பும் ஒரு உணர்வுப் பூர்வமான கலையாகும். எனவே, சினிமா என்ற கலை பயணத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் கற்று, தகுதிப்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.