கோபத்தில் நயன்தாரா! தயங்கும் சல்மான் கான்! - கோலிவுட் டூ பாலிவுட்
நயனை பொருத்தவரை வேலை விஷயத்தில் மட்டும்தான் கோபப்படுவாராம். மற்றபடி ஜாலியாகத்தான் இருப்பார் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.;
பாலிவுட் முதல் கோலிவுட்வரை நிறைய படங்கள் இந்த வாரம் ரிலீஸாகியிருக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் பல, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இதனிடையே அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இந்த வாரம் என்னென்ன டிரெண்டிங்கில் உள்ளன? பார்க்கலாம்.
வேலைன்னு வந்துட்டா... - நயனின் இன்னொரு முகம்
வெளியே பார்ப்பதற்கு சாஃப்ட்டாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கரமாக கோபப்படுவார்கள் என்று சொல்வதுண்டு. அதில் நயன்தாராவும் ஒருவர். சமீபத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பில் டிரஸ் விஷயத்தில் உதவி இயக்குநர் மீது கோபப்பட்டு திட்டியதாகவும், அதனால் கோபமடைந்த சுந்தர் சி, படப்பிடிப்பையே நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் நயனுக்கு பதிலாக தமன்னாவை வைத்து படத்தை எடுக்கலாம் என்று சுந்தர் சி பேசியதாகவும், அதற்குள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நயனிடம் பேசி சமாதானம் செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஒரு டிரஸுக்காகவா உதவி இயக்குநரை அனைவர் முன்பும் திட்டினார் என்று நெட்டிசன்கள் கேள்விகளை முன்வைத்து வந்தனர்.
நயன்தாராவின் இன்னொரு முகம் - உடை விஷயத்தில் படப்பிடிப்பில் கோபப்பட்டதாக விமர்சனம்
இந்நிலையில் அவர் நடித்த முதல் படமான ‘ஐயா’ படத்திலேயே டிரஸ் விஷயத்தில் கோபப்பட்டதாகவும், அந்த சமயத்தில் தான் நடுநின்று பஞ்சாயத்து செய்து தீர்த்து வைத்ததாகவும் அப்படத்தின் இயக்குநர் ஹரி பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்த வீடியோ தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது. மேலும், முதல் படத்தில் நடிக்கும்போதே இந்த பெண்ணுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே என்று தான் அருகில் நின்றவரிடம் தெரிவித்தாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் நயனை பொருத்தவரை வேலை விஷயத்தில் மட்டும்தான் கோபப்படுவாராம். மற்றபடி ஜாலியாகத்தான் இருப்பார் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
‘ஜனநாயகன்’ முதல் பாடல்
சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியிருக்கும் விஜய்யின் கடைசிப்படம் ‘ஜனநாயகன்’. அரசியல் கூட்டங்கள், கட்சி செயல்பாடுகள் என ஒருபுறம் பிஸியாக இருந்தாலும் மற்றொருபுறம் கமிட்டான கடைசிப்படத்திலும் தீவிரமாக நடித்துவருகிறார் விஜய். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க, மமிதா பைஜு, பிரியாமணி, கௌதம் மேனன் மற்றும் பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘தளபதி 69’ என்ற பெயரில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் ‘ஜனநாயகன்’ என்ற பெயரில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
‘ஜனநாயகன்’ திரைப்பட போஸ்டர்
அதில் 2026ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், விஜய்யின் கடைசிப்படம் என்பதால் பாடல்கள் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இடையே தனது கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தியுள்ளார் விஜய்.
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்
வளர்ந்துவரும் கோலிவுட் இளம் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்துவருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘LIC’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே ஏற்கனவே அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார்.
பிரதீப் ரங்கநாதனின் புதிய லுக்
அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கப்பட்டிருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். ஆல்பம் பாடல்கள்மூலம் புகழ்பெற்ற சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர், அறிமுக இசையமைப்பாளர் என இந்த தலைமுறையினர் இணைந்து பணியாற்றவிருக்கும் இப்படம், ஜென்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸுக்கு திருமணம் ஓகே?
40 வயதைத் தாண்டியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் தெலுங்கு நடிகர் பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாக அடிக்கடி கிசுகிசுக்கப்படுவதுண்டு. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், காதல் என்றெல்லாம் எதுவும் இல்லை என்றும் இருவரும் கூறிவந்தனர். சமீபத்தில் பாலய்யா தொகுத்துவழங்கிய டிவி ஷோவில் கலந்துகொண்ட பிரபாஸிடம் திருமணம் குறித்து கேட்டபோது, திருமணம் செய்ய பயமாக இருப்பதாக வெளிப்படையாகவே கூறியிருந்தார் பிரபாஸ்.
திருமணத்திற்கு ரெடியாகிவரும் தெலுங்கு நடிகர் பிரபாஸ்
இந்நிலையில் 45 வயதாகும் பிரபாஸுக்கு பெற்றோரே பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க முடிவெடுத்திருக்கிறார்களாம். இதற்கு பிரபாஸும் ஓகே சொல்லிவிட்டதால் தெலங்கானாவின் பிரபல தொழிலதிபரின் மகளை பெண் பார்த்திருக்கிறாராம் பிரபாஸின் அத்தையும் மறைந்த அரசியல்வாதி கிருஷ்ணம் ராஜுவின் மனைவியுமான சியாமளா தேவி. எனவே விரைவில் பிரபாஸின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கின்றனர் தெலுங்கு ரசிகர்கள்.
கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த வாய்ப்பு
நிதின் - ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராபின்ஹுட்’. இந்த படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கியுள்ளார். இதில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஹைதரபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரி-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வார்னர் ‘புஷ்பா’ படத்தின் ஹூக் ஸ்டெப் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
தெலுங்கு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்
இந்த படத்தில் நடிக்க ரூ.2.5 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் வார்னர், 2 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக சம்பளம் வாங்கிய நபர் என்ற பெருமையை பெறுகிறார் டேவிட் வார்னர். ஏற்கனவே நிறைய இந்திய பாடல்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து டிக் டாக் மற்றும் ரீல்ஸ் போட்டுவந்த வார்னரை யாராவது திரையில் நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என்ற நெட்டிசன்களின் கோரிக்கை இந்த படத்தின்மூலம் நிறைவேறி இருக்கிறது.
சல்மான் கானுக்கு தயக்கமா?
அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் சூப்பர் ஸ்டார்களுடன் இளம் நடிகைகள் நடிக்க தயங்கமாட்டார்கள் என்பது அனைத்து திரையுலகிலும் விதிவிலக்கல்ல. தமிழில் ரஜினி, கமல், மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், தெலுங்கில் பாலய்யா போன்றோருடன் மிக இளம்வயதிலேயே டூயட் பாடியுள்ளனர் இப்போதுள்ள முன்னணி ஹீரோயின்கள் பலர். இப்படியிருக்கையில் சல்மான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். தன்னைவிட 31 வயது குறைவான ராஷ்மிகாவுடன் சல்மான் கான் சேர்ந்து நடித்திருப்பது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், ராஷ்மிகா அதுபற்றியெல்லாம் தனக்கு கவலையில்லை என்று கூறியிருந்தார்.
இளம் நடிகைகளுடன் ஜோடி சேர தயக்கம் காட்டும் சல்மான் கான்
ஆனால் அடுத்து ஜான்வி கபூருடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்று சல்மான் கானிடம் கேட்டபோது, ‘அனன்யா பாண்டே அல்லது ஜான்வி கபூருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ஒன்றுக்கு 10 முறை யோசிப்பேன். அதன்பிறகுதான் நடிக்கலாமா என்ற முடிவை எடுப்பேன்’ என்று கூறியிருந்தார். இதனால் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ் அவரை மனதளவில் பாதித்திருப்பதாக கூறிவருகின்றன பாலிவுட் வட்டாரங்கள்.