ஜெமினி கணேசன் - சாவித்திரியின் முதல் சந்திப்பு!
இது சினிமா கதை அல்ல. புராண காலத்து சத்தியவான் சாவித்திரியின் கதையும் அல்ல. விதியினால் சதி செய்யப்பட்ட என் மனைவி நடிகையர் திலகம் சாவித்திரியின் கதை, இது.;
(21.06.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
நடிகை சாவித்திரியின் காதல் கணவர் ஜெமினி கணேசன், சாவித்திரி எப்படி வாழ்ந்தார்? எப்படி வீழ்ச்சி அடைந்தார்? என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் விரிவாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்.
முதல் சந்திப்பு
இது சினிமா கதை அல்ல. புராண காலத்து சத்தியவான் சாவித்திரியின் கதையும் அல்ல. விதியினால் சதி செய்யப்பட்ட என் மனைவி நடிகையர் திலகம் சாவித்திரியின் கதை, இது. எங்கள் சந்திப்பு காதல் எல்லாமே இனிமையானவை!
முப்பது ஆண்டுக்கு முன்னால், எங்கள் (ஜெமினி கணேசன் சாவித்திரி) முதல் சந்திப்பு நடந்தது. அப்போது நான், ஜெமினி ஸ்டூடியோவில் கேமரா மேதை அமரர் ராம்னாத்திடம் உதவியாளராகவும், நடிகர்-நடிகைகளைத் தேர்ந்து எடுப்பவராகவும் இருந்தேன்.
12 வயது சிறுமியாக இரட்டை ஜடையுடன் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசன்
ஒருநாள், ஆந்திராவைச் சேர்ந்த கே. வி. சவுத்திரி என்பவர், பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை என்னிடம் அழைத்து வந்தார். குறுகுறுப்பான பார்வை, சுறுசுறுப்பான நடை, மாநிறம்! அவள்தான் சாவித்திரி.
அந்த சிறுமி என்னிடம் பாடிக்காட்டினாள், ஆடிக் காட்டினாள், தெலுங்கில் ஒன்றிரண்டு வசனமும் பேசினாள். அவள் பேசிய தமிழ்கூட பரவாயில்லாமல் இருந்தது. ஒரு தெலுங்குப் பெண், சென்னைக்கு வந்த ஒரு மாதத்தில் இந்த அளவு தமிழ் பேசுகிறாளே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
அந்த நேரத்தில், "மூன்று பிள்ளைகள் என்றபடம், ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் தமிழிலும், தெலுங்கிலும் தயாராகிக்கொண்டு இருந்தது. எம்.கே. ராதா, நான் (ஜெமினி), ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரும் மூன்று மகன்களாக நடித்தோம். அம்மாவாக, கண்ணம்மா.
திறமை
தாய் உள்ளம் திரைப்படத்தில் ஜெமினிகணேசன்
"இந்தப் படத்தில், என் மகளுக்கு (சாவித்திரிக்கு) ஒரு வாய்ப்புக் கொடுக்கக் கூடாதா? கொடுத்துப் பாருங்கள். நன்றாக நடிப்பாள்" என்று சவுத்திரி தெலுங்கில் சொன்னார்.
சாவித்திரியிடம் திறமை இருப்பது தெரிந்தும், அப்போது வாய்ப்புக் கொடுக்க முடியவில்லை. சாவித்திரியின் புகைப்படம் ஒன்றை வாங்கிக் கொண்டேன்.
"இந்தப் பெண்ணிடம் சிறந்த நடிகை ஆகும் திறமை இருக்கிறது. வாய்ப்புக் கொடுத்தால் பிச்சு உதறுவாள்" என்று புகைப்படத்தில் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு, அவளை அனுப்பி வைத்தேன்.
"தாய் உள்ளம்" என்ற படத்தில் நான் நடித்துக் கொண்டு இருந்தபோது, வி.மெய்யப்ப செட்டியார் "பெண்" என்ற படத்துக்கு என்னை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.
மீண்டும் வந்தாள்
நடிகர் நாகேஸ்வர ராவுடன் தெலுங்கு படம் ஒன்றில் சாவித்திரி
ஒருநாள், நான் ஏ. வி. எம். ஸ்டூடியோவுக்குச் சென்றபோது, சவுத்திரி மீண்டும் (மூன்று ஆண்டுக்குப் பிறகு) என்னை சந்தித்தார். "என் மகளுக்கு (சாவித்திரிக்கு) நீங்கள்தான் வாய்ப்புக் கொடுக்கவில்லை. "தேவதாஸ்" படத்தில் கதாநாயகன் நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக சாவித்திரியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். ஏவி மெய்யப்ப செட்டியார் கூட ஒரு படத்துக்கு சாவித்திரியை அழைத்து இருக்கிறார்" என்று அடுக்கிக்கொண்டு போனார். சற்று தள்ளி நின்ற சாவித்திரி, புன்னகையோடு எனக்கு வணக்கம் தெரிவித்தாள். மூன்று ஆண்டுக்குள் அவளிடம்தான் எவ்வளவு வளர்ச்சி; எவ்வளவு பொலிவு!
"தாய் உள்ளம்" படத்தைத் தயாரித்த நாராயணன் கம்பெனி, அதை அடுத்து, "மனம்போல மாங்கல்யம்" என்ற சிரிப்புக் கதையை டைரக்டு செய்ய பெரியவர் பி.புல்லையாவைக் கேட்டுக்கொண்டார்கள். நடிகர் நடிகையர் தேர்வு நடந்தது. கதாநாயகனாக நாகேஸ்வர ராவைப் போட புல்லையா விரும்பினார். "யோவ்! நான் சம்பளம் கொடுத்து ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்து வைத்து இருக்கிறேன். கணேசனைத் தவிர வேறு யாரையும் கதாநாயகனாகப் போடக் கூடாது. கணேசனுக்கு சிரிப்பு நடிப்பு வரவில்லை என்றால் அப்புறம் பார்க்கலாம்" என்று அடித்துக் கூறிவிட்டார்.
நாராயணன் கம்பெனி முதலாளி புட்டண்ணா கதாநாயகிக்கு பல பேரை பார்த்தார்கள். ஒன்றும் முடிவாகவில்லை. அந்த நேரத்தில், பாதி எடுக்கப்பட்டு இருந்த "தேவதாஸ்" படத்தை புட்டண்ணாவும், புல்லையாவும் பார்த்தார்கள். சாவித்திரியின் நடிப்பு, அவர்களைக் கவர்ந்துவிட்டது.
சாவித்திரி கதாநாயகி
ஜெமினி கணேசனுடன் சாவித்திரி
அடித்தது யோகம், சாவித்திரிக்கு! "மனம் போல மாங்கல்யம்" படத்தின் கதாநாயகியாக சாவித்திரியை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். அதில் எனக்கு இரட்டை வேடம்!
தமிழில், முதல் படத்திலேயே, சாவித்திரியின் திறமை எல்லோரையும் பிரமிக்க வைத்தது. நான் வியந்து போனேன். பாத்திரத்தை புரிந்து கொண்டு நடிப்பது என்று ஒன்று இருக்கிறது அல்லவா? ஆனால் சாவித்திரியைப் பொறுத்தமட்டில், பாத்திரம்தான் சாவித்திரியை புரிந்துகொள்ள வேண்டும். வசனம், அவள் நாவுக்கு மரியாதை அளித்தது. சாவித்திரியோடு நடிப்பவர்கள் ஒழுங்காக நடிக்காவிட்டாலும், அவளது நடிப்பால், அவர்களுடைய நடிப்பு மெருகேறியது.
குறும்பு
பாசமலர் திரைப்படத்தில் கணவர் ஜெமினி கணேசனுடன் சாவித்திரி
ஒருநாள் படப்பிடிப்பின்போது, அரங்கில் போடப்பட்டு இருந்த சாய்வு நாற்காலியில் நான் அமர்ந்தேன். அடுத்த வினாடி "தொப்" என்று மல்லாந்து விழுந்து விட்டேன்.
சாய்வு நாற்காலியில் துணியை தாங்கி இருக்கும் உருளையை சாவித்திரி விளையாட்டுக்காக உருவிவிட்டு இருந்து இருக்கிறாள்! எனக்கு முதுகில் நல்ல அடி!
உடனே டைரக்டர் புல்லையா, "குறும்புக்காரி! இப்படி செய்துவிட்டாயே! கணேசன் மண்டை உடைந்து போயிருந்தால் என்ன செய்வாய்?" என்று சாவித்திரியைக் கடிந்து கொண்டார்.
ஒரு வினாடிக்குள் சாவித்திரியின் கண்கள் குளமாயின. அவளை சமாதானப்படுத்துவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது!.
பிறகு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு என் அருகே வந்தாள், சாவித்திரி. "நான் வேடிக்கையாக அப்படி செய்தேன். பலமாக அடிபட்டுவிட்டதா?" என்று என் தலையைத் தடவிவிட்டாள்.