நடிகர் "ஸ்ரீ"க்கு என்ன ஆச்சு? அவரின் தற்போதைய நிலைக்கு யார் காரணம்?

'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் ஸ்ரீ.;

Update:2025-04-22 00:00 IST
Click the Play button to listen to article

'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் ஸ்ரீ, தற்போது கடும் உடல்நலக் குறைவுடன் டெல்லியில் தனிமையாக வசித்து வருகிறார் என்ற செய்தி தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறமையான நடிகராக இருந்தும், தொடர்ச்சியான ஏமாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மன உளைச்சலுக்குள் சிக்கிய அவர், குடும்பத்திலிருந்தும் வெகு தூரம் விலகி வாழும் நிலைக்குப் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பரிதாபமான நிலையின் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றன? சமீப காலமாக தமிழ் திரையுலகில் இளம் நடிகர்கள் இந்த மாதிரியான மன அழுத்தங்கள் மற்றும் வாழ்வாதார சிக்கல்களால் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன? இப்படியான இக்கட்டான சூழலில் இருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, என்னென்ன மாதிரியான முக்கிய விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஸ்ரீக்கு என்னதான் ஆச்சு?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் ஸ்ரீ, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரில் 'ஸ்ரீராம்' என்ற கதாபாத்திரத்தின் மூலம் முதல் முறையாக கவனம் பெற்றவர். பின்னர், இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' திரைப்படம் அவருடைய திரைத்துறைப் பயணத்திற்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவர் நடித்த வேலுசாமி கதாபாத்திரம், இயல்பான நடிப்பிற்காக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பரவலாக பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்படத்தில் ‘சந்துரு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீ, தனது தனிச்சிறப்பான நடிப்புத் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். தொடர்ந்து 'சோன்பப்டி', 'வில் அம்பு' போன்ற படங்களில் நடித்ததோடு, லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' திரைப்படம் அவருக்குச் சினிமாவில் ஒரு வணிக வெற்றியை பெற்று தந்தது. இந்தப் படங்கள் அனைத்திலும் ஸ்ரீயின் நடிப்பு மிக இயல்பாகவும், கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருந்தியவாறும் இருந்ததால் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசித்தனர். இருப்பினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்கள் ஏற்பட்டதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். காரணம் திரைப்பட வாய்ப்புகள் குறைவாக கிடைத்ததுதான். இதனால் பொருளாதார சிரமங்கள் போன்ற பல விஷயங்களால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே 'பிக் பாஸ் தமிழ்' முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர், உடல்நலக்குறைவு காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார். அதையடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இறுகப்பற்று' திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்த அவர், மீண்டும் கவனம் ஈர்த்தார். ஆனால், அதன்பிறகு எந்த படங்களிலும் அவர் தோன்றவில்லை.


 'மாநகரம்' திரைப்படத்தில் பரணியாக & எலும்பும் தோலுமாக காணப்படும் ஸ்ரீ

இந்நிலையில், சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் ஸ்ரீயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில் அவர் மிகக் குறைந்த உடல் எடையுடன், முடியின் நிறத்தை மாற்றி, முற்றிலும் மாறிய தோற்றத்தில் காணப்படுகிறார். இவரது இவ்வாறான மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது தற்போதுவரை தெரியவில்லை. மேலும், சமீபத்தில் எந்த இயக்குநரும் அவரை தொடர்பு கொள்கின்ற நிலையில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் ஸ்ரீயை கண்ட இணையவாசிகள், “என்ன ஆச்சு? அடையாளமே தெரியவில்லையே!” எனக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், அவர் தினமும் தானாக சமைத்து சாப்பிடும் காணொளிகளை பகிர்ந்து வருவதன் மூலம், ஒரு சின்ன அறையில்தான் அவர் தனியாக இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. இதனால், மனநலப் பிரச்சினைக்குள் சென்றிருக்க கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இதனாலேயே சமூக வலைத்தளங்களில் பலர், “என்ன ப்ரோ இப்படி ஆகிட்டீங்க? மருத்துவரை சந்தியுங்கள்” என ஆழ்ந்த கவலையுடன் ஆலோசனைகள் கூறி வருகின்றனர். அதைவிட முக்கியமாக, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின் உள்ளிட்டோர் பெயர்களை குறிப்பிட்டு, இவருக்கு உதவுமாறு சமூக வலைத்தளங்களில் பலர் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

ஏமாற்றமா? தீர்வு என்ன?

சமீப காலமாக தமிழ் திரையுலகில் கவலையளிக்கும் ஒரு போக்கு நிலவுகிறது. பல இளம் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் போதைப்பொருட்களின் பிடியில் சிக்கி, தங்களது வாழ்க்கையையும், திரையுலக எதிர்காலத்தையும் இழந்து வருவது வேதனையளிக்கிறது. இதற்கு தெளிவான உதாரணங்களாக ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மணிகண்டன், ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் நாயகன் அபிநய் ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் தற்போது நடிகர் ஸ்ரீயும் இணைந்துள்ளார். இவரது உடல்நலக் குறைவுக்கு மதுபோதையே காரணம் என்று உறுதியாகக் கூற முடியாத நிலையில் இருந்தாலும், அவர் தற்போது கடும் மன உளைச்சலும் பொருளாதார நெருக்கடிகளும் அனுபவித்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் திறமையான நடிகராகத் திகழ்ந்து, திரையுலகில் உயர்ந்திட வேண்டும் என்ற கனவோடு வந்தவர், இன்று உடல்நலக் குறைவுடன் தனிமையில் வாழ்கிறார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிலர் ‘இறுக்கப்பற்று’ திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட சம்பள பாக்கி பிரச்சினையே அவரை அதிகம் பாதித்ததாகவும், அதனாலேயே அவர் இந்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் அவரது குடும்பத்தினரின் ஆதரவின்மையே காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். என்னதான் காரணமாக இருந்தாலும், ஒரு கலைஞனின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும்போது திரையுலகம் அதைக் கவனிக்காமல் விட்டு விடுவதும் மிகவும் கவலைக்கிடமான ஒன்றாகும்.


திரையுலகில் எதிர்காலத்தை இழந்து வரும் பிரபலங்கள் 

இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மற்ற கலைஞர்களின் வாழ்க்கையிலும் நிகழாமல் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, சில முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். அதில் முதலாவதாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்களுடன் ஒரு தெளிவான மற்றும் சட்டபூர்வமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் சம்பளம், படப்பிடிப்பு நாட்கள் மற்றும் பிற நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன், ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தை சரியான நேரத்தில் வழங்க தயாரிப்பாளர் சங்கம் கட்டாயமாக உதவிட வேண்டும். இரண்டாவதாக, திரையுலகில் உள்ள நடிகர் சங்கம் போன்ற அமைப்புகள், நடிகர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் குரலாக இருக்க வேண்டும். சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக தலையிட்டு, தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். மூன்றாவதாக, நடிகர்கள் தங்களது சம்பளம் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, தங்களது உரிமைகளை பாதுகாத்து கொள்ள முனைய வேண்டும். காரணம் கலைஞர்களின் நலன் பாதுகாக்கப்பட்டாலே திரையுலகம் வளர்ச்சி பெறும் என்பதே உண்மை. ஆகவே, இவ்வகையான விஷயங்களில் திரையுலகமே ஒன்றிணைந்து ஒருமித்த சிந்தனையுடன் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

இளம் நடிகர்கள் கவனத்திற்கு!

நடிகர் ஸ்ரீக்கு ஏற்பட்டது போல இத்தகைய துயரமான நிலை இனி எந்தவொரு நடிகருக்கும் ஏற்படாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது அவசியம் ஆகிறது. முதலில், இளம் நடிகர்களுக்கு திரையுலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், புகழ் மற்றும் தோல்வியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முறையான விழிப்புணர்வு இருக்க வேண்டும். குறிப்பாக இளம் நடிகர்கள் இப்படியான சூழ்நிலைக்கு செல்வதற்கு பொருளாதார நெருக்கடி ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது சமீபகாலமாக நிகழ்ந்து வருகிறது. அந்த வாய்ப்பு ஏன் வருகின்றது என்றால் திரையுலகில் நிலையற்ற வருமானம், வாய்ப்புகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது, ஒருமுறை புகழ் பெற்ற பிறகு கிடைக்கும் அதிகப்படியான பணம் மற்றும் சுதந்திரத்தை கையாளத் தெரியாதது போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், தற்காலிக சந்தோஷத்தை அடையவும் சிலர் போதைப் பொருட்களை நாடுகின்றனர். மேலும், சில சமயங்களில் நண்பர்களின் தவறான சகவாசம், பார்டிகளில் அதிகப்படியான ஈடுபாடு போன்றவையும் நடிகர்களை இந்தப் பழக்கத்திற்குள் தள்ளுகின்றன. அது தவிர திரையுலகில் நிலவும் போட்டி, பொறாமை, புறக்கணிப்பு போன்றவையும் சில நடிகர்களை மனதளவில் பாதிக்கலாம்.


முடியை கலரிங் செய்து ஆளே மாறிப்போய் காணப்படும் ஸ்ரீ 

பொதுவாகவே போதைப்பொருள் பழக்கம் ஒரு முறை வந்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அது ஒருவரைச் சிதைத்துவிடும். சரியான நேரத்தில் உதவி கிடைக்காவிட்டால், ஒரு திறமையான கலைஞனின் வாழ்க்கை பாழாகிவிடும். ஆனால் தற்போது ஸ்ரீயை பொறுத்தவரை இந்த மாதிரியான சூழல் இருப்பதுபோல் தெரியவில்லை. திரையுலகில் அவருக்கு நடந்த ஏமாற்றமும், பண நெருக்கடியுமே அவரை இந்த சூழ்நிலைக்கு தள்ளியது போல் தெரிகிறது. இந்தச் சம்பவம், தமிழ் திரையுலகத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. இத்தகைய துயரங்களைத் தவிர்க்க, திரையுலகமே ஒன்று சேர்ந்து ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். இதனை மாற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்களைக் கொண்டு அவ்வப்போது ஆலோசனை பெறுவது நல்ல மாற்றத்தை தரலாம். மேலும் திரையுலகில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், உதவும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும். ஒரு நடிகரின் திறமையை மதித்து, அவருக்குரிய அங்கீகாரத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் வழங்குவது ஒட்டுமொத்த திரையுலகின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், இனிமேலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் திரைத்துறையில் பயணித்து, வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சமூக ஒழுக்கத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Tags:    

மேலும் செய்திகள்