தென்னிந்தியாவின் ‘இசையரசி’ - ஹேப்பி பர்த்டே ஜானகியம்மா!

சிறுவயதிலிருந்தே இந்தியில் லதா மங்கேஸ்கர், கண்டசாலா மற்றும் சுசீலா போன்றோரின் பாடல்களை விரும்பி கேட்டுவந்த ஜானகி, பின்னாளில் அவர்களுக்கே போட்டியாக மாறினார் என்பதையும் தாண்டி, அவர்களுக்கு இணையாக பல ஹிட் பாடல்களை கொடுத்தார்.;

Update:2025-04-22 00:00 IST
Click the Play button to listen to article

இசைக்கு மயங்காத உயிர்கள் எதுவும் இல்லை. நாடு, மொழி, இனம் என மக்கள் வேறுபட்டாலும் அனைவரையும் இசை என்ற ஒன்று இணைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இசையை அனைவருமே ரசித்தாலும் அதை இயற்றும் திறனும், பாடும் திறனும் ஒருசிலருக்குத்தான் வரமாக கிடைக்கும். அப்படி தனது வசீகர குரலால் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் கட்டிப்போட்டவர் பாடகி ஜானகி. ஜானகியம்மா என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படும் இவர், ப்ளாக் & ஒயிட் காலமான 60களிலேயே பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். சிறு குழந்தையின் குரல் முதல் வயதான மூதாட்டியின் குரல்வரை மாற்றி மாற்றி ஸ்ருதி மாறாமல் பாடக்கூடிய திறமை படைத்த பாடகியான இவர், திரைப்படங்களிலும் ஒவ்வொரு நடிகைகள் மற்றும் பாடலின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பாடலில் உணர்ச்சிகளைக் கொட்டி பாடக்கூடியவர். பலமுறை தேசிய விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்த இவர், தனது திறமைக்கு தாமதமாக அறிவிக்கப்பட்டதாகக் கூறி பத்ம பூஷண் விருதைக்கூட நிராகரித்த துணிச்சல் பெண்மணி. இந்திய மொழிகள் பலவற்றில் இதுவரை 48 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் இவர், பல மொழிகளை சரளமாக பேசுவதோடு எழுதக்கூடிய திறனும் படைத்தவர். இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான ஜானகி கடந்த 8 ஆண்டுகளாக திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொண்ட நிலையில், தற்போது தனது குடும்பத்துடன் காலம் செலவழித்து வருகிறார். இவர் தனது 87வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ‘ஜானகி ஹிட்ஸ்’ நினைவலைகளை சற்று திருப்பி பார்க்கலாம்.

பாடகியாக உருவெடுத்த ஜானகி!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் ஸ்ரீ ராம மூர்த்தி - சத்யவதி தம்பதியருக்கு 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தவர் ஜானகி. தெலுங்கு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஜானகிக்கு ஏனோ சிறுவயதிலிருந்தே படிப்பின்மீது நாட்டமில்லை. ஆனால் சினிமா பாடல்களை கேட்டு அதை அப்படியே உள்வாங்கி நன்றாக பாடியதுடன் பலரின் பாராட்டுகளையும் பெற்றார். அதனால் நாதஸ்வர வித்வான் பைடிசாமி என்பவரிடம் இசையை கற்றுக்கொள்ள ஜானகியை அனுப்பி வைத்தார் அப்பா ராமமூர்த்தி. அவருக்கு இயற்கையிலேயே நல்ல குரல்வளம் இருந்ததுடன், பாட்டின்மீதும் ஆர்வம் இருந்தது. வெறும் 7 மாதங்களில் இதை புரிந்துகொண்ட குரு பைடிசாமி, ‘நீ சங்கீதம் கற்றுக்கொண்டது போதும், நீயே ஒரு சங்கீதம்தான். உனக்கு இனிமேல் சங்கீதம் கற்றுக்கொடுக்க தேவையில்லை’ என்று பாராட்டி அனுப்பி வைத்தார். அவரின் அந்த வாழ்த்து கொடுத்த ஊக்கத்தால் தனது வட்டாரத்தில் நடைபெற்ற அனைத்து இசைப்போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றதுடன், அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப்போட்டியிலும் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். இதனிடையே ஜானகியின் தந்தை இறந்துவிட தனது சகோதரர்களுடன் ஹைதராபாத்திற்கு சென்று அங்கு குடும்பத்துடன் வசித்துவந்தார்.


பாடகியாக வேண்டும் என்ற கனவோடு ஏவிஎம் ஸ்டூடியோவில் கோரஸ் பாட சேர்ந்த ஜானகி

ஜானகியின் திறமை வெளியே வராமல் அப்படியே இருப்பதை பார்த்த அம்மா சத்யவதியின் சகோதரர் சந்திரசேகரன், எப்படியாவது அவரை பாடகியாக்க வேண்டுமென எண்ணினார். மேலும் ஜானகியின் குடும்பத்துக்கும் அவருடைய பாட்டுத்திறமையின்மீது நம்பிக்கை வர, மாமாவின் வழிகாட்டுதலின்பேரில் ஜானகியின் 20வது வயதில் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தனர். இங்குவந்து தொடர்ந்து வாய்ப்பு தேட ஆரம்பித்தார். அப்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைக்க, அந்த வேலையை செய்ய ஆரம்பித்தார். ஓரிரு ஆண்டுகள் கோரஸ் மட்டுமே பாடிவந்த ஜானகிக்கு முதன்முதலாக 1957ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படமான ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடலில் உணர்ச்சிகளைக் கொட்டி உருகி பாடிய ஜானகிக்கு அடுத்தடுத்து பல மொழிகளில் பாடும் வாய்ப்பு தேடிவந்தது. குறிப்பாக, அந்த படம் வெளியான அடுத்த நாளே தெலுங்கில் ‘எம்எல்ஏ’ என்ற படத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலா என்ற பாடகருடன் இணைந்து பாடினார். இப்படி பாடகியாக அறிமுகமான ஒரே ஆண்டில் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தென்னிந்தியாவின் முன்னணி பின்னணி பாடகிகளுக்கு போட்டியாக உருவெடுத்தார் ஜானகி. சிறுவயதிலிருந்தே இந்தியில் லதா மங்கேஷ்கர், கண்டசாலா மற்றும் சுசீலா போன்றோரின் பாடல்களை விரும்பி கேட்டுவந்த ஜானகி, பின்னாளில் அவர்களுக்கே போட்டியாக மாறினார் என்பதையும் தாண்டி, அவர்களுக்கு இணையாக பல ஹிட் பாடல்களை கொடுத்தார்.


சிங்காரவேலனே தேவா பாடல் மூலம் ஜானகிக்கு கிடைத்த புகழ்

பட்டிதொட்டியெங்கும் புகழ் சேர்த்த ‘சிங்காரவேலனே தேவா’

பாடகியாக அறிமுகமான புதிதில் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவந்தபோதிலும் ஜானகியின் குரலை பட்டிதொட்டியெங்கும் கொண்டுசென்ற பாடல் என்றால் அது எஸ்.எம். சுப்பையா நாயுடு இயக்கத்தில் 1962ஆம் ஆண்டு வெளியான ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா என்ற பாடல்தான். 1950, 60 காலகட்டங்களில் திரைப்படங்களின் வளர்ச்சி ஒருபுறமிருந்தாலும் கான சபா மற்றும் இசை வித்வான்களின் ஆதிக்கம் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் அதிகமாகவே இருந்தது. அப்போதைய காலகட்டங்களில் திரைப்படங்களை காட்டிலும் மேடை நாடகங்கள் மற்றும் இசை கச்சேரிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாலேயே திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டனர். மேலும் திரைப்படங்களில் தாங்களே ஆடி, பாடி நடிக்கவேண்டும் என்ற நிலையானது அதற்கும் கொஞ்சம் முன்னர்தான் எம்.எஸ் விஸ்வநாதன், டி.எம். சௌந்திர ராஜன், எம்.எஸ். சுப்புலட்சுமி, பி.சுசீலா, நாகேஸ்வர ராவ், லீலா போன்ற பாடகர்களின் வரவால் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த சமயத்தில் ‘கொஞ்சும் சலங்கை’ படத்திற்கு நாதஸ்வரம் வாசித்த காரைக்குறிச்சி அருணாச்சலம் தனக்கு போட்டியாக பாட யாராவது இருக்கிறார்களா? என சவால்விட, படக்குழு அப்போதே இந்தியில் பிரபலமாக இருந்த லதா மங்கேஷ்கரை அணுகியிருக்கிறது. ஆனால் அவரால் பாடமுடியாத சூழலில் அந்த வாய்ப்பை பெற்றார் ஜானகி. அதுவே அவருடைய திறமையை உலகுக்கு காட்ட சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. அந்த பாடலில் ஜானகியின் குரலும் நாதஸ்வரத்தின் நாதமும் ஒன்றுடன் ஒன்று கலந்து பிரித்து பார்க்கமுடியாத அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டப்பட்டார். இந்த பாடல் அதன்பிறகு தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் ஜானகியே பாடினார்.


இளையராஜாவின் இசையில் ஜானகி பாடியபோது

40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்

ஒரே பாடலால் பிரபலமடைந்த ஜானகிக்கு பிளாக் & ஒயிட் காலத்திலேயே பூஜைக்கு வந்த மலரே வா, இந்த மன்றத்தில் ஓடிவரும், அழகுக்கும் மலருக்கும், பொதிகை மலை உச்சியிலே போன்ற பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்த நிலையில், ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் முதல் படத்திலும் ‘மச்சான பாத்தீங்களா’ பாடல் அவருக்கு சிறந்த அறிமுகமாக அமைய காரணமானது ஜானகியின் குரல். இந்திய சினிமாவின் சிறந்த குரலாக பார்க்கப்படுகிற எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் ஜானகிதான். இதுகுறித்து அவரே பலமுறை பகிர்ந்திருக்கிறார். மேலும் எஸ்.பி.பியை சுப்பிரமணியம் என்றுதான் அழைப்பாராம் ஜானகி. மேலும் அவருடைய பிழைகளை நேரடியாக சுட்டிக்காட்டுவதுடன் அவரை திட்டுவது, அடிப்பது என அம்மா உரிமையை ஜானகியே எடுத்துக்கொள்வார் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் 16 கட்டைகளை ஒரேயடியாக பாடக்கூடிய திறமை படைத்தவர் மட்டுமல்லாமல் உலகிலேயே மூச்சு கட்டுப்பாட்டுடன் பாடலை பாடக்கூடிய சிறந்த பாடகி என்றால் அது ஜானகி அம்மாதான் என்று கூறியிருக்கிறார். 70கள் மற்றும் 80களில் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - ஜானகி காம்போவில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. மேலும் பி.பி. சீனிவாஸ், ஜே. யேசுதாஸ் போன்றோருடனான காதல் பாடல்களும் இன்றும் பலரின் விருப்பப் பாடல்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன. குறிப்பாக, ஜானகி பாடிய சின்ன தாயவள், ஆயிரம் தாமரை மொட்டுகளே, காற்றில் எந்தன் கீதம், ஊருசனம் தூங்கிடுச்சு, புத்தம் புது காலை, நிலவு தூங்கும் நேரம், ஒருநாளும் உனை மறவாத போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் நிற்கின்றன.


வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா பாடலுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ஜானகி

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி, துளு, உருது, கொங்கனி, அசாமி, ஆங்கிலம், சிங்களம் என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார் ஜானகி. இவருக்கு 4 முறை தேசிய விருதும், 33 முறை வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளும் கிடைத்திருக்கின்றன. அதுபோக, முனைவர் பட்டம், கலைமாமணி பட்டம், கர்நாடக ராஜயுத்சவா விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். திரைத்துறையில் பாடகியாக அறிமுகமான 55 ஆண்டுக்கு பிறகு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதால் தனது திறமைக்கு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்ட அந்த விருது தனக்கு தேவையில்லை என்று கூறி நிராகரித்துவிட்டார். ஜானகி பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல் தாமே எழுதி இசையமைத்தும் இருக்கிறார்.

திரைத்துறையிலிருந்து விலகல்!

கடைசியாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் அம்மா சென்ட்டிமென்ட் பாடலை பாடிய ஜானகி அதன்பிறகு பாடல்கள் பாடுவதை நிறுத்திக்கொண்டார். ராம் பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு முரளி கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். கணவரின் இறப்புக்கு பிறகும் தொடர்ந்து பாடிவந்த ஜானகி, 2016ஆம் ஆண்டு இனிமேல் திரைத்துறையிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு ஹைதராபாத்தில் தனது மகன் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றுவந்த இவர் தற்போது அதையும் நிறுத்திவிட்டார். காலம் கடந்தாலும் அழியாத பல உணர்ச்சிப்பூர்வமான பாடல்களால் நம் நெஞ்சை வருடிவரும் இசைக்குயில் ஜானகி அம்மாவிற்கு ஏப்ரல் 23 அன்று பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது ராணி ஆன்லைன். 

Tags:    

மேலும் செய்திகள்