டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவது எப்படி? - பின்னணி குரல் கலைஞர் மீனா
வேலைகள் செய்ய நிறையப்பேருக்கு ஆசை இருந்தாலும் கஷ்டப்பட தயாராக இருக்கமாட்டார்கள். ஒரு வேலை தேடும்போது லிங்க்டு இன் போன்ற தளங்களில் சரியான ப்ரஃபைலை உருவாக்கி, தேடும் வேலைக்கான சேம்பிளை அதில் அப்லோடு செய்துவைத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.;
தனக்கு பிடித்த வேலையை செய்ய ஆசைப்படும் பலர் அந்த வேலையை பெறுவதற்கு முழு வீச்சாக இறங்கி வேலைசெய்ய சோம்பேறித்தனம் படுவார்கள். அதேசமயம் இன்று வீட்டில் இருக்கும் பல பெண்கள் எப்படியாவது ஒரு வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை கிடைத்துவிடாதா? என்று ஏங்குகின்றனர். ஆனால் அதற்கு எப்படி முயற்சிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. பிடித்த வேலையை பெறுவதற்கு எப்படி முயற்சிக்க வேண்டும் என்பது பற்றியும், தனது வேலையில் சவால்கள் இருந்தாலும் எப்படி குடும்பத்தையும் சமாளிப்பது என்பது பற்றியும் நம்முடன் உரையாடுகிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மீனா.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
நான் இந்த வேலைக்குத்தான் வரவேண்டும் என்று நினைக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு யூடியூப் சேனலில் கன்டன்ட் மற்றும் தம்ப்நெயில் உருவாக்கும் வேலை கிடைத்தது. அதை நான் செய்துகொண்டிருந்தபோது ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி வந்தது. அப்போது வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் இல்லாத காரணத்தால் அந்த செய்தியை திடீரென என்னை படித்து தரச் சொன்னார்கள். அந்த குழந்தை குறித்து அடுத்தடுத்த செய்திகள் வெளிவர வர, நான் வாய்ஸ் கொடுத்துக்கொண்டே இருந்தேன். என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று நானே நினைத்துக்கொண்டேன். அப்படி படிப்படியாக முன்னேறித்தான் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆனேன்.
FMஇல் செலக்ட் ஆனது எப்படி?
யூடியூப் சேனலுக்கு வாய்ஸ் கொடுத்தபிறகு ஏவி, ஆடியோ, கமர்ஷியல் புக்ஸ் என நிறைய பண்ணவேண்டுமென ஆசைப்பட்டு ஒரு சேனலுக்கு நான் சில மாதிரிகளை அனுப்பினேன். அவர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். அதே வாய்ஸ் மாதிரிகளை ஒரு ஸ்டூடியோவிற்கு அனுப்பினேன். அவர்கள் அதை செலக்ட் செய்து நான் முதலில் அனுப்பிய சேனலுக்கே அனுப்பி வைத்தார்கள். உடனே அவர்கள் செலக்ட் செய்துவிட்டார்கள். நான் முதலில் அனுப்பியபோது நிராகரித்துவிட்டு, அதையே ஒரு பெயர்சொல்லும் நிறுவனம் அனுப்பியபோது ஏற்றுக்கொண்டது எனக்கு கோபத்தைத் தூண்டியது. அதன்பிறகு வாய்ஸ் எடுக்க தேவையான செட்டப்களை வீட்டிலேயே செய்து, ஸ்டூடியோ இல்லாமலேயே வீட்டில் இருந்தே இப்போது வேலை செய்கிறேன்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக வேண்டுமென நினைப்பவர்கள் அதற்காக உழைக்க வேண்டும் - மீனா ராஜா
உங்களை போன்று வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆக நினைக்கும் பெண்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?
இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய குரல்களுக்கான தேவை இருக்கிறது. அதுபோக, கன்டன்ட் உருவாக்குபவர்கள், கதை எழுதுபவர்கள், சவுண்டு என்ஜினியர்கள் என நிறைய தேவை இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் கூட வாய்ஸ் ஓவர், மொழி பெயர்ப்பு, சப் டைட்டில் என வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த வேலைகள் செய்ய நிறையப்பேருக்கு ஆசை இருந்தாலும் கஷ்டப்பட தயாராக இருக்கமாட்டார்கள். ஒரு வேலை தேடும்போது லிங்க்டு இன் போன்ற தளங்களில் சரியான ப்ரஃபைலை உருவாக்கி, தேடும் வேலைக்கான சேம்பிளை அதில் அப்லோடு செய்துவைத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
ஒரு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
9 - 6 வேலை பார்த்தபோது எந்த சிக்கலும் இல்லை. ஆனால் மீடியா என்றாலே நேரம் பார்க்காமல் வேலை செய்யவேண்டும் என்பதால் அதிக நேரம் வேலை செய்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில்கூட வேலை செய்ததால் என்னால் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போகமுடியாமல் போனது. அதேபோல் இரவு 2 மணிவரைக்கும்கூட வாய்ஸ் எடுத்துக்கொண்டிருப்பேன். அதனால் ஆரம்பத்தில் குடும்பத்துக்குள் பிரச்சனை வந்தது.
மீடியா என்றாலே நேரம் பார்க்காமல் வேலை செய்யவேண்டும் - மீனா ராஜா
உங்களுடைய வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் யார்?
என்னை இந்த ஃபீல்டுக்கு வர ஊக்குவித்தது உற்சாகப்படுத்தியது எல்லாம் அம்மா, அப்பாதான். பெற்றோருக்கு அடுத்து என்னுடைய சகோதரி. இந்த வேலையை நான் தேர்ந்தெடுத்தபோது ஆரம்பத்தில் என் கணவருக்கும் எனக்கும் சண்டை வரும். வேலையை அவர் புரிந்துகொண்ட பிறகு மற்ற எல்லாரையும்விட என் கணவர்தான் இப்போது மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.
சீரியலுக்கு டப்பிங் செய்திருக்கிறீர்களா?
வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் போகவில்லை. ஏனென்றால் ஃப்ரீ லான்சராக என்னால் நிறைய FMகள், வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களுக்கு பண்ண முடியும். ஆனால் சீரியல் என்றால் தினமும் போகவேண்டி இருக்கும். அதனால் அதை நான் எடுத்துக்கொள்ளவில்லை.
குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வேலையை சமாளிக்கிறீர்கள்?
எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் குடும்பத்தையும் வேலையையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். ஆனால் இப்போது காலை 9 மணிக்கு முன்னால் வேலை செய்வதில்லை. போனில் மெசேஜ்கூட பார்க்கமாட்டேன். ஆனால் வேலையை தொடங்கியபிறகு இரவு 2 மணிவரைக்கும்கூட வேலை செய்வேன்.