அஜித்திடம் சண்டை! உதயநிதியிடம் பாராட்டு! - விடாமுயற்சி புகழ் நடிகர் கணேஷ் சரவணன்
இராவணக் கோட்டம்’ தொடங்கி நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ வரை பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து வருபவர்தான் நடிகர் கணேஷ் சரவணன்.;
என்றாவது ஒருநாள் நாமும் சினிமாவில் பெரிய நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கையில் ’இராவணக் கோட்டம்’ தொடங்கி நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ வரை பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து வருபவர்தான் நடிகர் கணேஷ் சரவணன். இவர் தற்போது ஜாபர் என்பவரின் இயக்கத்தில் சோலோ ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் ராணி ஆன்லைன் நேயர்களுக்காக அவர் அளித்திருந்த நேர்காணலின் முதல் பகுதியை தொடர்ந்து, இரண்டாம் பகுதியின் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் காணலாம்.
நீங்கள் திரைத்துறைக்குள் வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் உங்களை புதிய ஆளாகத்தான் பார்க்கிறார்கள்… அப்படி இருக்கும் பொழுது சினிமாவுக்குள் வர நினைப்பவர்கள் எப்படியெல்லாம் தங்கள் மனநிலையை தயார் படுத்திக்கொண்டு வர வேண்டும்?
பொறுமை மிகவும் முக்கியம். அதைத்தாண்டி நம்மை நாம் முதலில் நம்ப வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும். முதலில் என்னை நான் கண்ணாடியில் பார்த்து ஆயிரம் குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் ஜெயிச்சுடுவடா என்று சொல்லிக்கொள்வேன். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். பொறுமையாக இருங்கள். எடுத்த உடனேயே கோடியில் சம்பாதிக்க வேண்டும் என்று வராமல் இதை கலையாக மட்டுமே பார்த்து நேசித்து வாருங்கள். அப்போது அதுவாகவே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அப்படிதான் என் அனுபவத்தில் சென்று கொண்டிருக்கிறேன்.
ஏதாவது ஒரு தருணத்தில் இந்த சினிமாவே வேண்டாம் என்று நினைத்த தருணங்கள் உண்டா?
விடாமுயற்சி காட்சி மற்றும் அஜித்துடன் கணேஷ் சரவணன்
‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகே எனக்கு அந்த மாதிரியான ஒரு குழப்பம் வந்தது. என்னை சார்ந்த நிறைய பேரை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்துகொண்டு இருந்தது. ‘இராவணக் கோட்டம்’ படம் வெளியாக இருந்த தருணம். அப்போது என்னிடம் சொல்லப்பட்டது என்னவென்றால் துபாயில ஆடியோ வெளியீட்டு விழா நடத்தபோறாங்க. படம் உலக அளவில் ரிலீஸ் ஆகப்போகிறது. இதற்கு பிறகு தயாரிப்பாளர்கள் அனைவரும் உன் வீடு தேடி வரப் போகிறார்கள் என்பதுதான். ஆனால், அப்படி ஒருவரும் வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அழைத்துக்கொண்டு இருந்தபோது கிடைத்ததுதான் ‘விடாமுயற்சி’ வாய்ப்பு. இந்த வாய்ப்பும் எனக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. மகிழ் திருமேனியை பலமுறை பார்க்க முயற்சித்து என்னடா நமக்கு தெரிந்த இயக்குநரை சந்தித்து வாய்ப்பு கேட்கவே இவ்வளவு சிரமமாக இருக்கிறது? பேசாமல் வெளிநாடு எங்காவது சென்று விடலாமா என்று என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் திடீரென ஒருநாள் இரவு 9.30 மணிக்கு மகிழ் சார் தம்பியிடம் இருந்து அழைப்பு வந்தது. அஜித்தோடு நடிக்கிறீர்கள். இறுதிக்காட்சியில் அவரது கையால்தான் உங்களுக்கு சாவு. வாங்க என்று கூறினார். அப்போதுதான் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதன் பிறகு அஜித்தோடு பயணிக்கும்போது இன்னும் நிறைய பாசிட்டிவ் வைப் கிடைத்தது.
உங்கள் நடிப்பை, டெடிகேஷனை பார்த்து பாராட்டியவர்கள் இருக்கிறார்களா? அப்படி உங்களால் மறக்க முடியாத பாராட்டு என்றால் எதை சொல்லுவீர்கள்?
கணேஷ் சரவணனின் நடிப்பை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
கலகத் தலைவனில் பணியாற்றும்போது உதயநிதி பாராட்டியது, ‘பூலோகம்’ திரைப்படத்தில் பணியாற்றிய போது ஜெயம் ரவி பாராட்டியது, விடாமுயற்சியில் அஜித் பாராட்டியது என்று நிறைய இருக்கிறது. இதில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் ஒரு சண்டை காட்சியில் ஒரே ஷாட்டில் நடித்து முடித்ததை பார்த்து சூப்பரா பண்ண… சூப்பரா பண்ண என்று பாராட்டினார். அதேபோன்றுதான் கலகத் தலைவன் படத்திலும் ஒரு காட்சியில் 12 முதல் 15 அடி உயரத்தில் இருந்து விழ வேண்டும். டூப் வைத்து காட்சியை எடுக்கிறார்கள். ஆனால் சரியாக வரவில்லை. பிறகு நான் சிறப்பாக செய்வேன் என்று என்னுடன் மடை திறந்து படத்தில் பணியாற்றிய சண்டைப்பயிற்சியாளரான ரமேஷ் சொல்லவும் மகிழ் என்னிடம் வந்து நீயே செய்துவிடுவாயா என்று கேட்டு நடிக்க சொன்னார். ஒரே ஷாட்டில் அதை செய்து முடித்தேன். அப்போது உதயநிதி சார் வந்து நீங்க ஸ்டண்டில் இருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை நான் ஹை ஜம்பர். எப்படி தந்திரமாக விழ வேண்டும் என்பது தெரியும் என்று நான் சொன்னதும், சிங்கில் டேக்கில் பண்ணிவிட்டீர்கள் சூப்பர் போங்கள் என பாராட்டினார்.
விளையாட்டில் நீங்கள் எந்த அளவுக்கு ஆர்வம் மிக்க நபர்?
ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப், ட்ரிபிள் ஜம்ப், டெக்கத்தலான், பென்டத்தலான் போன்றவை நன்றாக செய்வேன். விளையாட்டில் எந்த அளவுக்கு ஆர்வம் என்றால் ஒருமுறை விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் பொழுது முதல் முதலாக ஒரு காலினுடைய முட்டி தேய்கிறது. அது சரியாகி ஆறு மாதத்தில் அடுத்த கால் முட்டி தேய்ந்து கிழியும் வரை பயிற்சி எடுத்து பிறகு அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுதான் விளையாட்டை விட்டு வந்தேன். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நான் எந்த அளவுக்கு ஸ்போர்ட்ஸை நேசித்திருப்பேன் என்று. படிப்பை தாண்டி ஸ்போர்ட்ஸ் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் இருந்து நமக்கு மூளை தொடர்பான வில் பவர் கிடைக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்மை தயார்படுத்தும். அதுதான் இன்று எனக்கு சினிமாவிலும் நிறைய இடங்களில் கை கொடுக்கிறது.
ஜிம் பயிற்சின்போது மற்றும் மதுப்பிரியர் குறும்படத்தின் போஸ்டர்
திருநங்கைகள் தொடர்பாக நீங்கள் எடுத்த குறும்படத்திற்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைத்திருக்கிறது.. ஏன் தொடர்ந்து இயக்குநராகவே நீங்கள் பயணிக்க கூடாது?
நான் ஏற்கனவே மூன்று குறும்படங்கள் எடுத்து இருக்கிறேன். அதில் இரண்டு வெளியிட்டுவிட்டேன். ஒன்று இன்னும் வெளியிடப்படவில்லை. மதுப்பிரியர் என்று சமூகம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படம் இந்தியா க்ளிட்ஸ் என்ற யூடியூப் தளத்தில் சாதாரணமாக வெளியிட்டேன். திருநங்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு லோக்கல் தொடங்கி கொல்கத்தா வரை நிறைய விருதுகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 24 விருதுகள் அந்த குறும்படத்திற்கு கிடைத்தது. சமூகம் சார்ந்து ஒருவரின் வாழ்வியலை நான் சொல்ல நினைக்கும் விதத்தில் சரியாக சொன்னதால்தான் இந்த விருதுகள் கிடைத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
உங்களை பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் பெருமை பட்ட தருணம் என்று ஏதும் இருக்கிறதா?
அப்பா, அம்மா இருவரும் வெளியில் எல்லோரிடமும் பெருமையாக பேசுவார்கள். தங்கள் மனத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுவார்களே தவிர என்னிடம் வெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள். விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்துக்கொண்டிருந்த போது கூட அப்பா எல்லோரிடமும் என்னை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். ஆனால், என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை. அப்பா என்றாலே அப்படித்தானே.
உங்கள் வாழ்க்கையில் ரோல் மாடல்னா யாரை சொல்லுவீர்கள்? நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?
என்னுடைய ரோல் மாடல் எனது தந்தைதான். அவரின் 17 வயதிலேயே அப்பா, அம்மாவை தவறவிட்டுவிட்டார். நான்கு தங்கை மற்றும் ஒரு தம்பியை தனியொரு ஆளாக இந்த சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்து, அவர்களால் எல்லாவற்றையும் இழந்து இப்போதுதான் மேலே வந்து இருக்கிறார். இந்த காலத்தில் உறவுகளுக்கு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் என் அப்பா உறவுகளுக்கான முக்கியத்துவத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் எனும்போது அவரின் பிள்ளைகளான எங்களுக்கு பெருமைதான்.
இருவேறுவிதமான ஸ்டைலிஷ் போஸ்களில் கணேஷ் சரவணன்
சீரியல்களில் நடித்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
விஜய் தொலைக்காட்சியில் அவளும் நானும் என்று ஒரு சீரியலில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்தேன். அனுபவம் என்று பார்த்தால் எல்லோருக்கும் இருப்பதை போல ஒரு தவறான புரிதல் எனக்கும் இருந்தது. சினிமாவில் இருப்பவர்கள் சீரியலுக்கு வந்தால் மேலே செல்ல முடியாது என்ற பேச்சு இருந்தது. நான் சினிமாவை நோக்கி வாய்ப்பு தேடி பயணப்பட்டு கொண்டு இருக்கும் போது, எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையே பேசாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? இல்லை வேறு வேலை தேடலாமா? என்று ஒருவிதமான மனநிலையில் இருந்த போதுதான் எனக்கு சீரியலில் நடிக்க வருகிறீர்களா என்று கேட்டு அழைப்பு வந்தது. நான் கொஞ்சம்கூட யோசிக்காமல் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று முதலில் மறுத்துவிட்டேன். பிறகுதான் யோசித்தேன். நாம் சும்மாதானே இருக்கிறோம். ஏன் அந்த வாய்ப்பை ஏற்று நடிக்கக் கூடாது? அதுவும் நடிப்புதானே என்று ஓகே சொல்லி நடிக்க போனேன். அங்கு நான் கற்றுக்கொண்டவை ஏராளம். ஒருநாள் முழுவதும் கேமரா முன் நின்று நடிக்கும்போது நடிப்பு என்றால் என்ன? கேமராவில் மிட்னா என்ன? வைடுனா என்ன? குளோஸ்னா என்ன? என்று ஒரு இயக்குநருக்கான மொத்த அனுபவ பாடமே எனக்கு அங்குதான் கிடைத்தது.
ஆக்ரோஷமான காட்சிகளில் கணேஷ் சரவணன்
சீரியலுக்கும், சினிமாவுக்குமான வித்தியாசம் என்ன?
பெரிய வித்தியாசம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நான் கேமரா சைஸ், லென்ஸ் மட்டும்தான் வித்தியாசமாக பார்க்கிறேன். நடிப்பை பொறுத்தவரை எல்லாம் உள்வாங்கி செய்யும் விஷயங்கள்தான். சீரியலில் ஐந்து சீன்களை ஒரே நாளில் எடுப்பார்கள். அந்த ஐந்து சீன்களுக்கும் கண்டினியூட்டி வேறு வேறாக இருக்கும். அதேபோன்று சினிமாவில் ஒரு சீன்தான் எடுப்பார்கள். சீரியலில் பிராம்டிங், சினிமாவில் டயலாக், இரண்டிலும் நடிப்புதான் முக்கியம்.