ஹாலிவுட் டூ இந்திய சினிமா! யூ டர்ன் போடும் பிரியங்கா சோப்ரா! என்ன காரணம்?
பாலிவுட்டிலிருந்து முற்றிலும் விலகுவதாக கூறிய அவர் ஹாலிவுட்டில் மட்டும் இனிமேல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் சுமார் 15 ஆங்கிலப் படங்களில் நடித்த பிரியங்கா தற்போது மீண்டும் இந்திய படங்களில் வாய்ப்பு தேடி வருவதாக பேச்சுகள் அடிபட்டன.;
இந்திய நடிகர் நடிகைகள் ஒருசில ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது நடிப்பதுண்டு. ஆனால் பாலிவுட்டிலிருந்து முற்றிலும் விலகி ஹாலிவுட்டில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்த நடிகை என்றால் ஒருவரை குறிப்பிட்டு சொல்லமுடியும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு போன்றவையே தனது வெற்றிக்கான ரகசியம் என்று சொல்லும் பிரியங்கா சோப்ரா உலகளவில் பல பெண்களுக்கு ரோல்மாடலாக திகழ்கிறார். உலக அழகி பட்டம் பெற்றபிறகு நடிகையாகவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த இவருக்கு அந்த வாய்ப்பு தேடிவர, அதனை தனது முதல்படியாக எடுத்து வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த இவர், சிறுவயதில் தான் சந்தித்த அவமானங்களை தகர்த்தெறியும் விதமாக ஹாலிவுட்டில் எப்படியாவது சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொண்டார். அங்கு 10 ஆண்டுகள் கடுமையாக போராடி தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். குறிப்பாக, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு, பாலிவுட்டிலிருந்து விலகி ஹாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த இவர், கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்திய படங்களில் தலைகாட்டவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் இங்கு படங்களில் கமிட்டாக தொடங்கியிருக்கும் பிரியங்கா, பாலிவுட் பக்கம் போகாமல் டோலிவுட்டில் கமிட்டாகி வருகிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன? பார்க்கலாம்.
பாலிவுட் டூ ஹாலிவுட்!
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, தனது ஆரம்பகால வாழ்க்கைபற்றி பலமுறை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே பெற்றோரின் அன்புடனும், அரவணைப்புடனும் வளர்ந்தவர் பிரியங்கா. அம்மா, அப்பா இருவரும் மருத்துவர் என்பதாலும் அவர்கள் இருவருமே முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்ததுமே பிரியங்காவை ஒரு தன்னம்பிக்கைமிக்க பெண்ணாக உருவாக்கி இருக்கிறது. ஆனால் எல்லாருடைய வாழ்க்கையிலும் அடிகளும், அதனால் பாடங்களும் இருக்கத்தானே செய்யும்? அதுபோக, தனது மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக அமெரிக்கா சென்ற பிரியங்கா அங்கு ஒருசிலரால் தனது நிறம் மற்றும் தோற்றத்துக்காக இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதையே தனது உத்வேகமாக எடுத்துக்கொண்டு தனக்குள் முடங்கிக்கிடந்த தன்னம்பிக்கையை தட்டி எழுப்பியுள்ளார். அந்த சமயத்தில் ‘மிஸ் இந்தியா’ போட்டிக்கான மாடல்களுக்கான தேர்வு நடந்திருக்கிறது. அப்போது பிரியங்காவின் அம்மாவும், தம்பியும் சேர்ந்து அவருடைய புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பியுள்ளனர். அப்படி ஆரம்பித்த பயணம் 2000ஆம் ஆண்டு ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் வென்றதற்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் நடிப்பே வேண்டாம் என்றிருந்த பிரியங்காவிற்கு முதலில் தமிழில் விஜய்யுடன் சேர்ந்து ‘தமிழன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர், அங்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை எக்ஸ்பரிமெண்ட் செய்து பார்ப்பது இவருக்கு பிடிக்கும் என்பதால் படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
உலகி அழகி பட்டம் பெற்றபிறகு ‘தமிழன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா
அவற்றில் சில படங்கள் அடிவாங்கினாலும் ‘ஐத்ராஸ்’ படம் பிரியங்காவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. குறிப்பாக, ‘ஐத்ராஸ்’ படத்தில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் அசத்திய இவருக்கு, அந்த படத்திற்காக பல்வேறு விருதுகள் கிடைத்தன. அந்த படம் பிரியங்காவின் கெரியரில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தியது. அதேபோல் ‘ஃபேஷன்’, ‘தோஸ்தானா’, ‘காமினி’ போன்ற படங்களும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றிபெற்றன. குறிப்பாக, ‘வாட்ஸ் யுவர் ராசி?’ என்ற படத்தில் 12 மாறுபட்ட கெட்டப்களில் நடித்து அசத்தி, கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அடுத்தடுத்து ‘டான் 2’, ‘அக்னிபத்’, ‘பர்ஃபி’, ‘மேரி கோம்’ போன்ற படங்கள் பிரியங்காவை உச்சத்திற்கு கொண்டுசென்றன. இப்படி பாலிவுட்டில் உச்சத்தில் இருந்த சமயத்தில் 2015ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். முதலில் ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்ட பிரியங்கா பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அதன்மூலம் ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க திரில்லர் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடர் நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் ஹாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பிரியங்கா கடுமையாக போராடியதாக சொல்லியிருக்கிறார். ஹாலிவுட்டில் ஒருபுறம் பட வாய்ப்பு தேடல், மறுபுறம் நிக் ஜோனஸுடனான காதல் என்றிருந்த பிரியங்காவால் பாலிவுட்டில் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை. 2018ஆம் ஆண்டு நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிலேயே செட்டிலானபிறகு, பாலிவுட்டில் கொடுத்திருந்த கால்ஷீட்களை பிரியங்காவால் சரியாக முடிக்க முடியவில்லை. மேலும் பாலிவுட் படங்களின் தரம் குறித்தும், நெபோட்டிசம் குறித்தும் வெளிப்படையாக விமர்சித்த பிரியங்காவை அங்குள்ள இயக்குநர்கள் ஒதுக்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் பாலிவுட்டிலிருந்து முற்றிலும் விலகி முழுக்க முழுக்க ஆங்கில படங்களில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
பிரியங்கா சோப்ராவின் குழந்தை மல்டி மேரி மற்றும் கணவர் நிக் ஜோனஸ்
மும்பைக்கு டாட்டா!
குடும்பம் மற்றும் குழந்தை என அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரியங்கா முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விசேஷங்களுக்கு மட்டுமே மும்பை பக்கம் வந்துபோய்க்கொண்டிருந்தார். அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததால் மும்பையில் தனக்கு சொந்தமான வீடுகளை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். 2021ஆம் ஆண்டு அந்தேரியில் இருந்த 2 வீடுகளை 7 கோடிக்கு விற்றதுடன், 2023ஆம் ஆண்டு 6 கோடிக்கு இரண்டு அடுக்குமாடி வீடுகளை விற்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மும்பைக்கு வரவேண்டி இருந்ததால் மும்பை மற்றும் புனேவில் அலுவலக வேலைகளுக்காக 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் மும்பையில் இருந்த தனக்கு சொந்தமான 4 அடுக்குமாடி குடியிருப்புகளை சமீபத்தில் விற்றுள்ளார். அவற்றின் மதிப்பு 16.17 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும் பாலிவுட்டிலிருந்து முற்றிலும் விலகுவதாக கூறிய அவர் ஹாலிவுட்டில் மட்டும் இனிமேல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் சுமார் 15 ஆங்கிலப் படங்களில் நடித்த பிரியங்கா தற்போது மீண்டும் இந்திய படங்களில் வாய்ப்பு தேடி வருவதாக பேச்சுகள் அடிபட்டன.
ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் பிரியங்கா
6 வருடங்களுக்கு பிறகு...
பிரியங்கா சோப்ராவின் இந்திய பட வாய்ப்பு தேடல் குறித்து தொடர்ந்து பேசப்பட்ட நிலையில், இப்போது டோலிவுட் பக்கம் சென்றுள்ளார். விஜய்யுடனான ‘தமிழன்’ படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாக்களில் தலைகாட்டாமல் இருந்த பிரியங்கா, தற்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ராஜமௌலி இயக்குகிற புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் இவர். அந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜமௌலி என்றாலே பிரம்மாண்டம்தான். அதுபோன்றதொரு 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் பிரம்மாண்ட படம் இது என்று சொல்லப்படுகிறது. சாகசக்கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிற்கு 30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் எந்த திரையுலகை எடுத்துக்கொண்டாலும் ஒருவருக்கு மார்க்கெட் சரிவில் போனால், சம்பளம் குறைக்கப்படும். அப்படி இருக்கும் சூழலில் 6 வருடங்கள் எந்த படத்திலும் தலைகாட்டாத ஒரு நடிகைக்கு 30 கோடி சம்பளமா என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றன திரை வட்டாரங்கள். இதுவரை இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்த்தில் இருந்த தீபிகா படுகோனையே தற்போது பின்னுக்கு தள்ளியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ‘SSMB 29’ என்ற பெயரில் உருவாகிவரும் இப்படம் ‘பாகுபலி’ போன்றே மாபெரும் வெற்றிபெறும் என்று சொல்லப்படுகிறது.