திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ் - இவ்வளவு நாள் எங்கே போயிருந்தார்?
இயல்பான நடிப்பு மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரங்கள் மூலம் 90-களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ்.;
ஒரு காலத்தில் இளைய தலைமுறையினரின் இதயங்களை கொள்ளை கொண்டு, தன் மென்மையான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரங்கள் மூலம் 90-களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். குறிப்பாக, 1996-ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழையும் ரசிகர் கூட்டத்தையும் பெற்று தந்தது. அதனை தொடர்ந்து, 'விஐபி', 'பூவேலி', 'படையப்பா', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'மின்னலே' போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார். இருப்பினும், ஒரு கட்டத்தில் திரையுலகிலிருந்து விலகிய அப்பாஸ், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சவால்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருக்கிறார். இது குறித்த முழுமையான தகவலை இந்த தொகுப்பில் காண்போம்.
ஆரம்பகால வாழ்க்கை
மேற்கு வங்காளத்தின் ஹவுராவில், 1975 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஒரு பாரம்பரிய தமிழ் பேசும் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் மிர்சா அப்பாஸ் அலி. சுருக்கமாக அப்பாஸ் என அழைக்கப்பட்ட இவர், ஓரளவு கலைத்துறை தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர். காரணம் புகழ்பெற்ற இந்தித் திரைப்பட நடிகர் ஃபெரோஸ் கான் இவரது நெருங்கிய உறவினர் ஆவார். சிறுவயது முதலே இந்தித் திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டிருந்த அப்பாஸ், இந்திய விமானப்படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார். இதற்காக தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) நுழைவுத் தேர்வில் தீவிரமாக முயற்சி செய்தும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஏமாற்றம் அவரை வேறு துறைகளில் கவனம் செலுத்தத் தூண்டியது. வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (எம்பிஏ) பெற திட்டமிட்டிருந்த அப்பாஸுக்கு, எதிர்பாராத விதமாக மாடலிங் துறையின் மீது ஆர்வம் பிறந்தது. கல்லூரி நாட்களில் தனது திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்திய அவர், பெங்களூரில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற "ஃபேஸ் ஆஃப் 94" என்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். இந்த வெற்றி, மாடலிங் துறையில் அவருக்கான கதவுகளைத் திறந்து விட்டது.
தமிழ் சினிமாவில் அப்பாஸின் ஆரம்பகால புகைப்படங்கள்
இப்படி மாடலிங் துறையில் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான கதிர் தனது புதிய திரைப்படத்திற்காக திறமையான நடிகர்களைத் தேடிக் கொண்டிருப்பதை அப்பாஸ் கேள்விப்பட்டார். தமிழ் மொழி சரளமாகத் தெரிந்த தனது நண்பர்களை அந்த ஆடிஷனுக்குச் செல்லுமாறு அவர் பரிந்துரைத்தார். நண்பர்களின் தொடர்ச்சியான வற்புறுத்தலின் காரணமாக, ஒருமுறை தானும் அந்த ஆடிஷனில் கலந்துகொண்டார். யாரும் எதிர்பாராத விதமாக, அந்தத் ஆடிஷனில் அப்பாஸ் தேர்வானார். இதன் விளைவாக, அவர் உடனடியாக அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளத் தொடங்கினார். தமிழ் மொழி அவருக்குப் பரிச்சயமில்லாததால், படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு வசனத்தையும் மிகுந்த சிரத்தையுடன் மனப்பாடம் செய்து நடித்தார். இயக்குநரான கதிர், அப்பாஸ் கதாபாத்திரத்திற்குள் எளிதாக ஒன்றிணைந்து நடிக்க உதவும் வகையில், படத்தின் மிகவும் எளிமையான காட்சிகளை முதலில் படமாக்கினார். இப்படி பல்வேறு சவால்களுக்கும், அறிமுகமில்லாத மொழி கொடுத்த சிரமங்களுக்கும் மத்தியில், அப்பாஸ் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம்தான் ‘காதல் தேசம்’.
முதல் படமே சூப்பர் ஹிட்
1996 ஆம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படம் நடிகர் அப்பாஸுக்கு திரையுலகில் நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது. வினீத் மற்றும் தபு ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த இப்படம் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன், இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கி கவனத்தை தந்தது. சென்னை நகரின் புகழ்பெற்ற பச்சையப்பா கல்லூரி மற்றும் லயோலா கல்லூரி மாணவர்களிடையே நிலவும் நட்பு மற்றும் போட்டியின் பின்னணியில் அமைந்திருந்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் கதை மற்றும் ஏ.ஆர். ரகுமானின் அபாரமான இசை அன்றைய இளைஞர்களை பெரியளவில் ஈர்த்தது. குறிப்பாக, 'முஸ்தப்பா முஸ்தப்பா', 'கல்லூரிச் சாலை', 'என்னைக் காணவில்லையே நேற்றோடு', மற்றும் 'தென்றலே தென்றலே' போன்ற பாடல்கள் நகரம் முதல் கிராமம்வரை எங்கும் ஒலித்து பெரும் வரவேற்பைப் பெற்றன. அதிலும் 'முஸ்தப்பா முஸ்தப்பா' பாடல் இளைஞர்கள் மத்தியில் அப்பாஸை மிகவும் பிரபலமாக்கி பல பெண் ரசிகைகளை உருவாக்கியது.
‘காதல் தேசம்’ மற்றும் 'படையப்பா' படத்தில் நடிகர் அப்பாஸ்
‘காதல் தேசம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு பிரபுதேவாவுடன் இணைந்து 'வி.ஐ.பி' என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்த அப்பாஸ், தொடர்ந்து சிம்ரனுடன் இணைந்து ‘பூச்சூடவா’, 1998 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் தயாரிப்பில் வெளியான 'பூவேலி' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். பிறகு 1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற ‘படையப்பா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அப்பாஸ் அதன் மூலம் மேலும் புகழ் பெற்றார். பிறகு அதே ஆண்டில், மாதவன் கதாநாயகனாக அறிமுகமான ‘சாந்தி சாந்தி சாந்தி’ என்ற கன்னடப் படத்திலும் நடித்த அவர், தமிழிலும் 14 முன்னணி இயக்குநர்கள் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து பணியாற்றிய ‘சுயம்வரம்’ படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்து கவனம் பெற்றார்.
உச்சமும் திடீர் வீழ்ச்சியும்
2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாம் நிலை கதாநாயகனாகவே நடிக்க துவங்கிய அப்பாஸுக்கு அதிலும் ஓரளவு கவனம் கிடைத்தது. குறிப்பாக அந்தசமயம் அஜித் குமார் மற்றும் மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறாத போதிலும், இப்படத்தில் அப்பாஸ் ஏற்று நடித்திருந்த ஆனந்த் என்கிற நெகடிவ் கதாபாத்திரம் மிகுந்த கவனத்தை பெற்றது. அதேபோல் 2001 ஆம் ஆண்டு, பிரபல இயக்குநரான கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து அப்பாஸ் நடித்த ‘மின்னலே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் காதலை அழகாகவும், யதார்த்தமாகவும் சொன்ன விதத்தால் இளைஞர்கள் மத்தியில் ஒரு கல்ட் கிளாசிக்காக ஆக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இப்படத்தில் மாதவன்தான் கதாநாயகன் என்ற போதிலும் அப்பாஸின் கதாபாத்திரமும் இளைஞர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. பிறகு அதே ஆண்டில் வெளியான இயக்குநர் லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ திரைப்படமும் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அப்பாஸ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். அதில் 2002 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடன் இணைந்து ‘பம்மல் கே. சம்பந்தம்’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்த அவர், பின்னர் இயக்குநர் கதிர் இயக்கத்தில் ‘காதல் வைரஸ்’ திரைப்படத்திலும், முரளியுடன் இணைந்து ‘காதலுடன்’ திரைப்படத்திலும், பிரபுவுடன் இணைந்து ‘பந்தா பரமசிவம்’ திரைப்படத்திலும் நடித்தார். இருப்பினும், 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகளோ, வெற்றியோ கிடைக்கவில்லை.
நடிகர் மாதவனுடன் அப்பாஸ்
ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிப்பதற்காக இந்தியாவில் இருந்த தனது சொத்துக்களை விற்றுவிட்டு நியூசிலாந்தில் குடியேறினார் அப்பாஸ். இருப்பினும் அங்கும் அவருக்கு பெரிய வருமானம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் அவர் பல்வேறு வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு வாகனங்கள் பராமரிப்பது துவங்கி டாக்ஸி ஓட்டுவதுவரை பல வேலைகளைச் செய்ததாக அவர் ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியிருந்தார். இந்த காலகட்டம் அவரது வாழ்க்கையில் மிகவும் கடினமானதாகவும், சவாலானதாகவும் இருந்தது என தெரிவித்திருந்த அவர், குடும்பத்திற்காக எத்தகைய கஷ்டங்களையும் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த மாற்றங்கள் அப்பாஸின் வாழ்க்கையில் ஒரு பெரிய பின்னடைவாக இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்காக எடுத்த முடிவு பலராலும் அப்போது பாராட்டப்பட்டது.
திரையுலகில் மீண்டும் அப்பாஸ்
நடிகர் அப்பாஸின் சமீபத்திய புகைப்படங்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கிய ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் நடிகர் அப்பாஸ் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கணித மேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டி வந்தாலும், அவர் முழுநேர நடிகராகத் திரையுலகில் தீவிரமாக ஈடுபடவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் , சுமார் 10 ஆண்டுகள் கழித்து அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான சற்குணம் தற்போது ஒரு புதிய வெப் தொடரை இயக்கி வருகிறார். ‘களவாணி’, ‘வாகை சூட வா’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர், தற்போது இயக்கும் இந்த வெப் தொடரில் இளம் நடிகை துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப் தொடரில்தான் நடிகர் அப்பாஸும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடர் குறித்த முழுமையான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த அப்பாஸ், மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றுவாரா என்ற ஆவலில் அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தனர். இந்நிலையில் வெளியாகியுள்ள இந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.