நான் எம்.ஜி.ஆரின் பக்தன் - வளர்ந்து வரும் நடிகர் விஜய் கௌரிஷுடன் உரையாடல்!
எந்த கேரக்டர் கொடுத்தாலும் விஜய் கௌரிஷ் நடிப்பார் என்ற இடத்தையே மக்கள் மனதில் பிடிக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். அதுபோன்ற கதாபாத்திரங்களையே இயக்குநர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.;
‘பகீரா’ என்ற திரைப்படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஜய் கௌரிஷ். தொடர்ந்து மலையாளம், தமிழ் என அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவர் வளர்ந்துவரும் இளம்தலைமுறை நடிகர்களில் ஒருவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரைப்போலவே திரையுலகில் சாதிக்கவேண்டும் என்ற நோக்கோடு நடிப்புத்துறையில் இறங்கியிருக்கும் இவர் தற்போது ‘கடுக்கா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோவாகும் முன்பே வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கும் விஜய் கௌரிஷுடன் ஓர் சிறப்பு உரையாடல்...
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்கும் ‘கடுக்கா’ படத்தில் ஹீரோவாக நடித்ததற்கும் இடையே என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள்?
வில்லன், ஹீரோ, துணை கதாபாத்திரம் என்று பார்க்கமாட்டேன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஒரு நடிகராக சிறப்பாக செய்வேன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் விஜய் கௌரிஷ் நடிப்பார் என்ற இடத்தையே மக்கள் மனதில் பிடிக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். அதுபோன்ற கதாபாத்திரங்களையே இயக்குநர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.
சினிமாவுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? எம்.ஜி.ஆரை உங்களுடைய குரு என்கிறீர்களே?
எம்.ஜி.ஆர் சாரை என்னுடைய குரு என்பதைவிட நான் அவருடைய பக்தன் என்றே சொல்லலாம். ரஜினி சார் உட்பட எல்லாரையுமே பிடிக்கும் என்றாலும் இப்போது கமல் சார் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தை வென்றவர். அவருக்கு அடுத்து விஜயகாந்த் சாரின் ரசிகனும்கூட.
தன்னை எம்.ஜி.ஆரின் பக்தன் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர் விஜய் கௌரிஷ்
நீங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானீர்களா?
இல்லை. கடந்த 6 வருடங்களாகத்தான் திரையுலகில் இருக்கிறேன். எல்லா பெரிய நடிகர்களுக்கும் இருக்கும் வரலாற்றை போன்றுதான் எனக்கும் இருக்கிறது. நிறைய இடங்களில் வாய்ப்பு தேடி, சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துதான் இப்போது ‘கடுக்கா’ படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறேன்.
‘கடுக்கா’ என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே... என்ன மாதிரியான கதை இது?
திருநெல்வேலி போன்ற இடங்களில் அல்வா கொடுத்துட்டான் என்று சொல்வது போல, ஒவ்வொரு ஊர்களில் காது குத்திவிட்டான், கடுக்கா கொடுத்துட்டான், விபூதி அடிச்சிட்டான் என்று சொல்வார்கள். அதுபோன்று யார் யாருக்கு கடுக்கா கொடுத்தார் என்பதை படத்தை பார்த்தால்தான் தெரியும்.
ஒரு நடிகனாக உருவாக உங்களை எப்படியெல்லாம் தயார்படுத்திக்கொண்டீர்கள்?
நான் ஒரு கூத்து பட்டறை ஆர்ட்டிஸ்ட். என்னுடைய மாஸ்டர் பெயர் ஜெயராவ். தியேட்டர்ஸ் லேப் என்ற இடத்தில்தான் பயின்றேன். ஒவ்வொரு பெரிய நடிகரையும் பார்த்து அவர்களுடைய மேனரிஸத்தை உற்று கவனித்து என்னை நானே மேம்படுத்திக்கொள்வேன். ஒவ்வொருவரின் மேனரிஸமும் ஏதோ ஒரு படத்திற்கு உதவியாக இருக்கும். ஒரு நடிகனுக்கு மற்றவர்களை கவனிப்பது மிகவும் அவசியம்.
‘கடுக்கா’ படத்தின்மூலம் விஜய் கௌரிஷின் ஹீரோ அவதாரம்
ஒரு நடிகனுக்கு மிமிக்ரி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமா?
கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமை. என்னாலும் ரஜினி, கேப்டன், அஜித் போன்ற ஒருசிலரின் குரல்களை முடிந்தவரை மிமிக்ரி செய்யமுடியும்.
உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார்?
எனக்கு வெற்றிமாறன், ஷங்கர், லோகேஷ் கனகராஜ் போன்றோரை மிகவும் பிடிக்கும். மணிரத்னம் சாரின் படத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு சிறிய பியூன் கேரக்டர் கிடைத்தாலும் போதும்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய் கௌரிஷ்
உங்களை வைத்து இயக்கிய இயக்குநர்கள் குறித்து சொல்லுங்கள்...
இதுவரை நான்கைந்து இயக்குநர்களின் படத்தில் நடித்திருக்கிறேன். அமலா பால் ஹீரோயினாக நடித்த ‘கடா’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தை அபிலாஷ் என்ற பெரிய இயக்குநர் இயக்கியிருந்தார். அடுத்து ‘ஆர்கே வெள்ளிமேகம்’ என்ற தமிழ்ப்படத்தை சைனு சாவுக்கடன் மலையாளத்தில் எடுத்தார். அந்த படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் சார் இயக்கிய ‘பகீரா’ படத்தில் பிரபு தேவா சார் ஷூட்டிங்கிற்கு வந்தபிறகு ஆடிஷன் வைத்துதான் என்னை செலக்ட் செய்தார்கள். அடுத்த படத்தில் ஆதிக் சாரிடம் நான் வாய்ப்பு கேட்கலாம் என்று இருக்கிறேன்.
பொதுவாகவே வளர்ந்துவரும் நடிகர்கள் ஒரு குறிக்கோள் வைத்திருப்பார்கள். அப்படி உங்களுடைய குறிக்கோள் என்ன?
நான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் அழுபவர்களை சிரிக்க வைக்கவேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்கவேண்டும். ஆனால் சிந்திப்பவர்களை அதற்கடுத்து உழைக்க வைக்கவேண்டும். உழைப்பவர்களை வெற்றியடைய வைக்கவேண்டும். வெற்றியடைபவர்களை அடுத்தவர்களுக்கு உதவ வைக்கவேண்டும். இதுதான் என்னுடைய வாழ்நாள் குறிக்கோள். இதைத் தாண்டி இந்த லெவல், அந்த லெவல் என்றெல்லாம் இல்லை. மக்கள் மனதில் ஒரு சிறிய இடம் எனக்கு கிடைத்தாலே போதும்.