விவாகரத்து வரிசையில் இணைகிறதா ஃபகத் - நஸ்ரியா ஜோடி?
தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மன உளைச்சல் மற்றும் மன வேதனையை அனுபவித்து கொண்டிருப்பதாக கூறியதுடன், உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களோடு போராடி வருவதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் நஸ்ரியா.;
மலையாள நடிகையாக இருந்தாலும் கோலிவுட்டில் நன்கு பரிட்சயமானவர் நடிகை நஸ்ரியா. சிறுவயதிலிருந்தே கேமரா மீது காதல்கொண்ட இவர், தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையாக உருவானவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நஸ்ரியா தனது 19 வயதிலேயே நடிகர் ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் கடந்த ஓராண்டாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் திடீரென தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், உடல்நலத்திலும் சவால்களை சந்தித்து வருவதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் பேட்டியளித்துள்ளார். மேலும் இதிலிருந்து இன்னும் சில நாட்களில் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே ஃபகத்துக்கும் நஸ்ரியாவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை என்று மோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், நஸ்ரியாவின் இந்த பேட்டி பலரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியிருக்கிறது. இந்திய சினிமாவில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து பல ஜோடிகள் தங்களது விவாகரத்தை அறிவித்து வரும் நிலையில் நஸ்ரியா - ஃபக்த் ஜோடியும் அந்த வரிசையில் இணையப்போகிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் இவர்களுடைய ரசிகர்கள்.
நஸ்ரியா - ஃபகத் காதல் திருமணம்
நஸ்ரியா மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘ப்ரமணி’ என்ற படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபகத் ஃபாசில். குழந்தை கதாபாத்திரங்களைத் தொடர்ந்து ‘மேட் டாட்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நஸ்ரியா. அந்த சமயத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான் போன்ற இளம் ஹீரோக்கள் மலையாள திரையுலகில் அதிகப்படியான ரசிகர்களை பெற துவங்கினர். அதனாலேயே நிவின் பாலியுடன் தமிழில் ‘நேரம்’, மலையாளத்தில் ‘ஓம் ஷாந்தி ஓசன்னா’ போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தார் நஸ்ரியா. இதற்கிடையே துல்கருடன் ‘சாலாலா மொபைல்ஸ்’ என்ற படத்திலும் சேர்ந்து நடித்தார். இந்த இளம் ஜோடிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த சமயத்தில் துல்கர் மற்றும் நிவின் பாலி போன்றோருடன் இணைத்து பேசப்பட்டார் நஸ்ரியா. ஆனால் அவர்கள் இருவருமே தனக்கு நல்ல நண்பர்கள் என்று அவர் விளக்கமளித்த சமயத்தில்தான் இந்த மூன்று பேருடன் ஃபக்த் ஃபாசிலும் இணைந்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் ஃபகத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் நஸ்ரியா.
நஸ்ரியா - ஃபகத் திருமணத்தில் மனைவியுடன் கலந்துகொண்ட துல்கர்
அப்போது ஃபகத்தின் கேரக்டர் நஸ்ரியாவுக்கு மிகவும் பிடித்துப்போக அவரே தனது காதலை ஃபகத்திடம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கிடையே ஃபகத்திற்கும் வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்க, தன்னைவிட 12 வயது சிறியவரான நஸ்ரியாவுக்கு ஓகே சொல்ல முதலில் தயங்கியுள்ளார் ஃபகத். ஆனால் ஒருவழியாக நஸ்ரியாவின் காதலை புரிந்துகொண்ட அவர், அவருக்கு காதல் கடிதத்துடன் ஒரு மோதிரத்தையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த சமயத்தில் நஸ்ரியா ஓகே சொல்லாமல் இழுத்தடித்தாலும் பிறகு ஒத்துக்கொண்டதாக ஃபகத்தே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இப்படி இருவரும் தங்களது வீட்டில் காதலை சொல்ல, இருவீட்டார் சம்மதத்தோடு 19 வயதேயான நஸ்ரியாவை 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 21ஆம் தேதி கரம்பிடித்தார் ஃபகத். இரண்டே வருடங்களில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் திருமணத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார். இது ஒட்டுமொத்த நஸ்ரியா ரசிகர்களையுமே சோகத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என பொது நிகழ்ச்சிகளில் தனது கணவருடன் வந்து கலந்துகொண்டார் நஸ்ரியா.
நஸ்ரியாவின் கம்பேக்கால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இனிமேல் இவரை திரையில் பார்க்கவே முடியாது என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக 2018ஆம் ஆண்டு ‘கூடே’ என்ற மலையாள படத்தில் தோன்றினார் நஸ்ரியா. சுமார் 4 ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த அவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த படத்திற்காக எடையை குறைத்து பழைய க்யூட் நஸ்ரியாவாகவே என்ட்ரி கொடுத்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு தனது கணவர் ஃபகத்துடன் சேர்ந்து ‘டிரான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார்.
நஸ்ரியா கம்பேக் கொடுத்த ‘கூடே’ மற்றும் ஃபகத்தின் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படங்களின் வெற்றிகள்
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்ணாக மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் நஸ்ரியா. இந்த படத்துக்காக தனது முடியை ஷார்ட் செய்திருந்தார். அதுவரை கியூட் மற்றும் ஸ்வீட் கேர்ள்ளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நஸ்ரியா மீதான இயக்குநர்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணோட்டமே முற்றிலும் மாறியது. அந்த படத்தின் வெற்றியால் அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ‘அடடே சுந்தரா’ படத்தில் நடித்தார். அதனையடுத்து கடந்த ஆண்டு ‘சூக்ஷமதர்ஷினி’ என்ற படம் இவர் நடிப்பில் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு தனிப்பட்ட காரணங்களால் ஓராண்டு திரையுலகில் இருந்து விலகியிருக்க போவதாக தெரிவித்தார் நஸ்ரியா. நஸ்ரியாவின் திரைப்படங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஃபகத்தும் பான் இந்தியா நடிகராக உருவெடுத்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து ‘மாலிக்’, ‘புஷ்பா: தி ரைஸ்’, ‘விக்ரம்’, ‘மாமன்னன்’, ‘ஆவேஷம்’ என பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருந்தார்.
நஸ்ரியாவின் திடீர் பேட்டியால் பரபரப்பு!
கடந்த ஓராண்டு காலமாக எங்கும் தலைகாட்டாமல் இருந்த நஸ்ரியா சமீபத்தில் தான் கிட்டத்தட்ட ஒரு வருடமாக யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருப்பதாகவும், தன்னுடைய பிரச்சினைகள் குறித்துகூட யாரிடமும் பேசுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய தோல்வியை பற்றி யாரிடமும் பேசுவதில்லை என்றும், கடந்த ஆண்டு ‘சூக்ஷமதர்ஷினி’ படத்தின் வெற்றிவிழாவில்கூட கலந்துகொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். அதற்கு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மன உளைச்சல் மற்றும் மன வேதனையை அனுபவித்து கொண்டிருப்பதுதான் காரணம் என்று கூறியதுடன், உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த சவால்களோடு போராடி வருவதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது ஓரளவு தான் குணமடைந்துவிட்டதாகவும் ஓரிரு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
தனது மனநலம் குறித்து அறிக்கை வெளியிட்ட நஸ்ரியா ஃபகத்
தன்னால் சொல்லமுடியாத காரணங்கள் இருப்பதாகவும், அதிலிருந்து மீண்டுவர போராடிவருவதுடன் அதற்கான விஷயங்களையும் கையில் எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஃபகத் ஃபாசிலுடன் நஸ்ரியாவிற்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக மலையாள ஊடகங்களில் பேசப்பட்டன. ஒரு வருடத்திற்கு முன்பே ஃபகத் ஃபாசில் தனக்கு ஒருவித மனநோய் இருப்பதாகவும், அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவதுடன் தேவையில்லாமல் சத்தம் போட்டு கத்துவதாகவும், ஒரு மணிநேரத்திற்கு பிறகுதான் தான் இயல்பு நிலைக்கே திரும்புவதாகவும் கூறியிருந்தார். அப்போதே அவருக்கு ADHD என்ற மூளை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த பிரச்சினையால்கூட நஸ்ரியா - ஃபகத் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஃபகத்தை பார்த்துக்கொள்ளத்தான் நஸ்ரியா படங்களில் நடிக்காமல் தவிர்த்துவந்ததாகவும் கூறப்படும் நிலையில், திருமணமாகி 10 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த இந்த தம்பதிக்கு இன்னும் குழந்தை இல்லை என்பதும்கூட பிரச்சினையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால்கூட இருவரும் விவாகரத்து பெற யோசிக்கலாம் என்று தகவல்கள் பரவினாலும் நஸ்ரியா - ஃபகத் இருவருமே அதுகுறித்து பொதுவெளியில் இதுவரை எதுவும் பேசவில்லை. எனவே இருவரும் சேர்ந்து வாழத்தான் விரும்புகின்றனர் என்று அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.