அரசியலில் இருந்து விலகிய பிறகு சுதந்திர காற்றை அனுபவிக்கிறேன் - மனம் திறந்த எஸ்.வி. சேகர்

எங்களுடைய நாடகப்பள்ளி மற்றும் அறக்கட்டளை மூலமாக வருடத்திற்கு 100 குழந்தைகளுக்கு முக்கியமான அளவிற்கு ஃபீஸ் கட்ட உதவுகிறோம். ஒரு மாதத்திற்கு 10-15 அனாதை பிணங்களை அடக்கம் செய்கிறோம். இதுவரை 600க்கும் மேற்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோல் நிறையப்பேர் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

Update: 2024-12-09 18:30 GMT
Click the Play button to listen to article

80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் எஸ்.வி. சேகர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல்வேறு கட்சிகளின் அரசியல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டிவந்த இவர், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியதால் திடீரென அரசியலிலிருந்து விலகியிருக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். இருப்பினும், சமுதாயத்திற்கு நல்லது செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும் கூறியிருந்தார். அரசியலில் இவருடைய கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டாலும் தனது நாடகப்பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் தனது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். மேலும் கண் தானம், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவரும் இவர், தனக்கு அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும், தனது நிலைப்பாடுகள் குறித்தும் நம்முடன் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். எஸ்.வி. சேகருடனான உரையாடலை இங்கு காணலாம்.

அப்பா சினிமாவில் இருந்ததால் அந்த ஆர்வம் உங்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் அரசியல் ஆர்வம் எங்கிருந்து வந்தது?

1980இல் நான் சினிமாவுக்கு வந்தேன். இரண்டு வருடங்களுக்குள் நான் பிரபலமாகிவிட்டதால் அந்த சமயத்தில் என்னை கேட்காமலேயே அவர்களுடைய படங்களில் என்னுடைய பெயரை போட்டுவிடுவார்கள். அந்த படங்களில் நான் நடிக்கவில்லை என்று பேட்டி கொடுத்தே நான் சோர்வடைந்துவிடுவேன். சினிமாவில் இப்படி இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியலில் நாட்டம் இல்லை. 1983-லிருந்தே எனக்கு நல்லவர்களாக தோன்றுபவர்களுக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். ஒரே தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் என எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் வேட்பாளர் நல்லவராக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்காக சென்று பேசிவருவேன். அதன்பிறகு 1990-க்குபிறகு 2004 வரை பாஜகவுக்கு ஆதரவாக பேசிவந்தேன். 2004-ஆம் ஆண்டு, ‘அரசியலுக்கு போவதாக இருந்தால் உன்னுடைய சகோதரியைப் போல இருக்கும் ஜெயலலிதாவுக்காக போ’ என்று என்னுடைய அப்பா என்னிடம் சொன்னார். அதை ஜெயலலிதாவிடமே சொல்லி, பிரச்சாரத்திற்கு போகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர், ‘தாராளமாக போங்க! ஆனா நான் உங்கள கட்சியில கூப்பிட மாட்டேன். நீங்களா வந்தா சேர்த்துக்குவேன்’னு சொன்னார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் எஸ்.வி. சேகர்

அதற்கு நான், ‘நீங்கள் கூப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. எனக்கு ஒரே ஒரு தலை இருந்தால் மட்டும்தான் ஒத்துவரும், பல தலைகளுக்கு கீழ் என்னால் ஆடமுடியாது. அப்படி ஒரு தலையிடம்தான் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். இப்படி ஒரு உரையாடலுக்கு பிறகு பிரச்சாரத்திற்கு போனேன். ஆனால் அந்த தேர்தலில் பாஜக + அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அந்த சமயத்தில் நான் கட்சியில் சேருவதாக கடிதம் எழுதிக்கொடுத்தேன். ஏதோ நான் ஆறுதலுக்கு அப்படிச் செய்வதாக நினைத்து ஒரு மாதம் என்னை கூப்பிடவே இல்லை. அதன்பிறகு என்னை அழைத்து கட்சியில் சேர்த்துக்கொண்டார். அப்போது எனக்கு காசு எதுவும் வேண்டாம், அரசியல் ஒரு சமூக சேவைக்கான அங்கீகாரம் என்று சொல்லி நானும் சேர்ந்துகொண்டேன். அரசியலில் விசுவாசமாக இருப்பது எனக்கு பிடிக்காது, நேர்மையாக இருக்கவேண்டும். இன்றுவரை என் அம்மாவுக்கு அரசியல் என்றாலே பயம். அதனால் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இப்போது நான் அரசியலையும் விட்டுவிட்டேன்.

சினிமாவில் இருந்தாலும் அரசியலில் இருந்தாலும் குடும்பத்தையும் சரிசமமாக பார்த்துகொள்கிறீர்களே எப்படி?

எனக்கு முதலில் என் தேசம், அடுத்து என் மதம், என் ஜாதி, அதன்பிறகு குடும்பம்தான் முக்கியம். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளுக்கு பிறகுதான் எல்லாமே.

இப்போது நிறையபேர் விவாகரத்து செய்கிறார்கள். குடும்ப வாழ்க்கையை சரிவர கையாளாதது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

கணவனுடைய புகழ் சில சமயம் மனைவியின் தலைக்கும் ஏறிவிடுகிறது. சினிமாத்துறையை பொருத்தவரை மனைவி பிரபலமாக இருந்தால் கணவன் விவாகரத்து வாங்கியதாக நாம் கேள்விபட்டிருக்க மாட்டோம். ஆனால் கணவன் பிரபலமாக இருந்தால் அப்படி நடக்கிறது. ஏனென்றால் புகழைத் தாண்டி மனைவிக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும். எப்போதும் ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருந்தாலும் தனக்கான நேரத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் உறவு என்பது எலாஸ்டிக் போன்றது. இழுக்க இழுக்க ஒருகட்டத்தில் அறுந்துவிடும். எனவே ஏதாவது ஒரு இடத்தில் விட்டுகொடுத்துதான் போகவேண்டும்.


பெண்கள் குறித்து தவறாக பேசியதாக உருவான சர்ச்சை குறித்து எஸ்.வி. சேகர் கருத்து

நீங்கள் ஏதாவது கருத்து சொல்லி அதுகுறித்து பின்னர் வருந்தியதுண்டா?

ஃபேஸ்புக்கில் ஒருவர் ‘மதுரை யுனிவர்சிட்டியும் கவர்னரும்’ என்ற தலைப்பில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதை ஃபார்வேர்டு பண்ண சொல்லியிருந்தார். நானும் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ஃபார்வேர்டு செய்துவிட்டேன். அரை மணிநேரம் கழித்து என்னுடைய நண்பர் ஒருவர் போன் செய்து, அதில் அசிங்கமாக எழுதி இருப்பதாக கூறினார். அது என்னவென்று கூட படிக்காமல் உடனடியாக டெலிட் செய்துவிட்டேன். உடனே அது சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டேன். ஏனென்றால் எனக்கும் மனைவி, அம்மா, சகோதரி, மகள் இருக்கிறார்கள். எந்த பெண்ணையும் நான் தவறாக பேசவில்லை. ஆனால் அன்று இருந்த அரசியல் சூழ்நிலையில் நான் சேர்ந்திருந்த கட்சியும் என்னை ஒழிக்கவே நினைத்தார்கள். எதிர்க்கட்சிகளும் எதிர்த்தபோது அனைத்தும் எனக்கு எதிராக திரும்பிவிட்டது. அன்று நான் மிகவும் வருத்தப்பட்டேன். அதன்பிறகு என்னிடம் யார் எதை ஃபார்வேர்டு செய்ய சொன்னாலும் நான் பயந்துவிடுவேன்.

ரத்த தானம் குறித்து நிறைய பேசியிருக்கிறீர்கள். கண் தானம் செய்திருக்கிறீர்கள். அதுபோக ஏழைக் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்துவருகிறீர்கள். இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது?

இது எல்லாவற்றுக்கும் காரணம் என் அப்பாதான். இந்தியாவிலேயே முதன்முறையாக கண் தானம், ரத்த தானம் குறித்து ‘நம் குடும்பம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் குறும்படம் எடுத்து, அதை தனியாக கட் செய்து மருத்துவமனைகளுக்கு கொடுத்தோம். என்னுடைய அப்பா இறந்ததும் அவருடைய கண், தானம் கொடுக்கப்பட்டது. நானும் இதுவரை 50க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்திருக்கிறேன். ரத்தத்தை விலைக்கு விற்பதை பார்த்தாலே எனக்கு கோபம் வரும். கூடுமானவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிற ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரத்தம் கொடுக்கவேண்டும். ஏனென்றால் அந்த சமயங்களில் ரத்தம் கிடைப்பதில்லை. இன்றுவரை ரத்த தான விழிப்புணர்வு முகாம்களுக்கு என்னை அழைத்தால் சென்று வருகிறேன். எங்களுடைய நாடகப்பள்ளி மற்றும் அறக்கட்டளை மூலமாக வருடத்திற்கு 100 குழந்தைகளுக்கு முக்கியமான அளவிற்கு ஃபீஸ் கட்ட உதவுகிறோம். ஒரு மாதத்திற்கு 10-15 அனாதை பிணங்களை அடக்கம் செய்கிறோம். இதுவரை 600க்கும் மேற்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோல் நிறையப்பேர் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.


எஸ்.வி. சேகரின் ரத்த தான மற்றும் கண் தான முன்னெடுப்புகள்

சில அரசியல் நிகழ்வுகளால் சில நேரங்களில் என்னுடைய நிலைப்பாடுகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இனிமேல் எந்த கட்சிக்காவும் பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். சமுதாயத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுகள் கிடைக்க நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்றிருக்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் ‘அந்தணர் நல வாரியம்’ ஒன்றை ஆரம்பித்து அதற்காக ரூ. 50 கோடி ரூபாயை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டில் 40 லட்சம் பிராமணர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்போது அவர்களுடைய வாக்குகளும் அந்தந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதேபோல் சட்டசபையில் பிராமணர்களுக்கு சீட் கொடுக்கவேண்டும் எனவும் கேட்டிருக்கிறேன். இருப்பினும் எந்த கட்சிக்காகவும் பேசாமல் இருப்பதால் இப்போது சுதந்திர காற்றை நான் அனுபவிக்கிறேன்.

எஸ்.வி சேகரின் ஃபேவரிட் யார்? ஏன்?

எம்.ஜி.ஆரா? சிவாஜியா?

எம்.ஜி.ஆர். அவர் ஒரு என்டர்டெய்னர். எனக்கு நடிப்பைவிட என்டர்டெய்ன்மென்ட் தான் பிடிக்கும். இந்த தலைமுறை நடிகர்களில் விஜய்யை பிடிக்கும். அவரும் 100% என்டர்டெய்னர்.

கலைஞரா? ஜெயலலிதாவா?

கலைஞர். எனக்கு ஜெயலலிதாவையும் பிடிக்கும். ஆனால் கலைஞர் என்னிடம் காட்டியது ஒரு அப்பாவின் பாசம். என் அப்பாவை அப்போலோ ஹாஸ்பிட்டலில் சேர்ப்பதற்கு முன்புவரை அவரை தொட்டது கிடையாது. ஆனால் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது அவர் என் கையை பிடித்துக்கொண்டே இருந்தார். அதே உணர்வு எனக்கு கலைஞரிடமும் கிடைத்தது. அவருடைய கொள்கைகளை பிடிக்கும்.

ரஜினியா? கமலா?

கமல். கமலும் நானும் 1972-லிருந்தே நண்பர்கள். இருவரும் ஸ்கூட்டரில் போவோம். நடந்து தியேட்டருக்கு போவோம். அந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அதேபோல் ரஜினியும் மரியாதையுடன் நடந்துகொள்வார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. என்னை பொருத்தவரை இருவருமே சமம்தான்.

சாவித்திரியா சரோஜா தேவியா?

இரண்டு பேருமே எனக்கு கனவில் வந்தவர்கள். சாவித்திரி நல்ல நடிகை. சரோஜா தேவி குறும்புத்தனமாக நடிக்கக்கூடியவர்.

திரிஷாவா? நயன்தாராவா?

திரிஷா. அவருக்கென தனி நடிப்பு ஸ்டைல் இருக்கிறது.

செந்திலா? கவுண்டமணியா?

இருவரையும் பிரித்துபார்க்க முடியாது.

வாஜ்பாயா? நரேந்திர மோடியா?

எனக்கு மோடியுடன்தான் பழக்கம். வாஜ்பாய் ஒரு கவிஞர். அரசியலில் இப்படியெல்லாம் பார்க்கமுடியாது. மோடியை பார்த்தே 5 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. அவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது.

அண்ணாமலையா? தமிழிசை சௌந்திரராஜனா?

தமிழிசை சௌந்திரராஜன். என்னால் அண்ணாமலையை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் 100% அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர். அவர் போலீஸாக இருக்கவேண்டியவர். அவருக்கு இருவேறு முகங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழிசைக்கு அப்படி இல்லை.

உதயநிதியா? விஜய்யா?

உதயநிதி. இப்போது எவ்வளவோ கேலி பண்ணுகிறார்கள். ஆனால் அவர் நிச்சயம் உச்சத்திற்கு போவார். விஜய்யை பொருத்தவரை அவர் யாரைப் பற்றியும் புறளி பேசமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்