ஆரம்பமே அமர்க்களம் - அப்பா, அண்ணனை மிஞ்ச வரும் ஆகாஷ்?
அப்பா மற்றும் அண்ணனை பின்பற்றி ஆகாஷ் முரளியும் கதாநாயகனாக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது ஒன்றும் புதிதில்லை. அப்படியே அறிமுகமாகும் அனைவரும் வெற்றி என்ற இலக்கை எட்டி விடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாரிசுகளாகவே இருந்தாலும் திறமை இருந்தால்தான் சினிமாவின் எந்த துறையிலும் சாதிக்க முடியும், மிகப்பெரிய உச்சம் பெற முடியும் என்பதற்கு உதாரணமாக இங்கு பலர் உள்ளனர். அந்த வகையில், 80 மற்றும் 90-களில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக, இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக, காதலை இறுதிவரை சொல்லாமலே நம்மை நடிப்பால் அழவைத்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா ஏற்கனவே தந்தையின் உதவியுடன் 2010-ஆம் ஆண்டு ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, இன்றுவரை ஏதோவொரு வகையில் தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், சினிமாவிற்கு வர மாட்டார், மாமனார் வழியை பின்பற்றி தொழில் துறையில் தனி முத்திரை பதிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில், தற்போது அப்பா மற்றும் அண்ணனை பின்பற்றி ஆகாஷ் முரளியும் கதாநாயகனாக திரைத்துறையில் கால் பதித்துள்ளார். அதுகுறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ரசிகர்கள் கொண்டாடிய முரளி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சித்தலிங்கையா என்பவருக்கு மகனாக பிறந்த முரளி, தந்தையை போன்றே பெரிய இயக்குநராக வர வேண்டும் என்று, அவரிடமே உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது மகனின் வேலை நுணுக்கங்களையும், அவரிடம் இருந்த திறமைகளையும் கண்டு வியந்த சித்தலிங்கையா, அவரை கதாநாயகனாக்கும் முடிவுக்கு வந்தார். அப்படி தந்தையின் வழிகாட்டுதல்படி கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகமான முரளி, கே.பாலச்சந்தரின் தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் 1984-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவிலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இதன் பிறகு பல படங்களில் இவர் நடித்திருந்தாலும், முரளி என்ற நடிகரை அடையாளம் காட்டியது இயக்குநர் விக்ரமனின் ‘புது வசந்தம்’ திரைப்படமும், இன்றுவரை காதல் நாயகன் என்றாலே அது முரளிதான் என்று அனைவரும் நினைவு கூறும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இதயம்’ திரைப்படமும்தான். இதில் கதிரின் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இதயம்’ திரைப்படத்தில் காதலின் தோல்வியால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்பதை தன் நடிப்பின் மூலம் நமக்கு கடத்தி கண்கலங்க வைத்திருப்பார் நடிகர் முரளி. அதனால்தானோ என்னவோ இன்றும் அவரின் பெயரோடு இதயம் என்பதும் சேர்ந்து இதயம் முரளி ஆக அடையாளம் பெற்றுவிட்டது.
இயக்குநர் சித்தலிங்கையா மற்றும் நடிகர் முரளி
இதனை தொடர்ந்து ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘கனவே கலையாதே’, ‘பொற்காலம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’ என்று ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்ற முரளி கடைசிவரை காதலை சொல்லாமல் சாவின் விளிம்பு நிலைக்கு சென்று வருவதுபோல் பல படங்களில் நடித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், மிகச் சிறிய வயதிலேயே காதலித்து, காதலித்த அந்த பெண்ணையே கரம் பிடித்து 3 பிள்ளைகளுக்கு தந்தையாக மிகச்சிறப்பான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆன சமயத்தில்தான் திடீர் மரணம் ஏற்பட்டு தன்னுடைய 46-வது வயதிலேயே இறந்து போனார். அவர் மறைந்தாலும் அவரது மறு உருவமாக இருந்து அவரது மகன் அதர்வா இன்றும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு தந்தையின் பெயரை காப்பாற்றி வெற்றி, தோல்வி என மாறி மாறி படங்களை கொடுத்து சிறந்த நாயகனாக பயணித்து வருகிறார். தற்போது முரளியின் வழியை பின்பற்றி அவரது வீட்டில் இருந்து மற்றொரு ஹீரோவும் களம் இறங்கியிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ்தான். இவர் மாஸ்டர் படத்தினை தயாரித்த தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதனால் தொழில் அதிபராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரும் தற்போது ஹீரோவாக களமிறங்கியிருப்பது தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
நடிகர் முரளி நடித்த படங்களின் புகைப்பட தொகுப்புகள்
யார் இந்த சேவியர் பிரிட்டோ?
சேவியர் பிரிட்டோ தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் , தேவகோட்டையை பூர்வீகமாக கொண்டவர். தேவகோட்டையில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் இன்று கடல் எனும் கோட்டையை ஆளும் அளவிற்கு கெர்ரி இண்டேவ் குரூப் ஆஃப் கம்பெனிசை நிர்வகித்து வருகிறார். இது தவிர பள்ளி, கல்லூரி என்று இவர் கையாளாத துறைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர் தமிழ் சினிமாவில் இளைய தளபதி, தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய்யின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரின் அக்கா மகன் ஆவார். விஜய் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டக்கூடிய இவர், 2021-ஆம் ஆண்டு விஜய் - விஜய் சேதுபதி ஆகிய இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தினை தயாரித்திருந்தார். படமும் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுடன், வசூலையும் வாரி குவித்தது. இதனால் அந்த சமயம் தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த சேவியர் பிரிட்டோ, எப்படி கோடிக்கணக்கில் பணம் போட்டு அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கக்கூடிய விஜய்யை வைத்து படம் தயாரித்தார்? எங்கிருந்து அவருக்கு இவ்வளவு பணம் வந்தது? என பல கேள்விகள் எழுப்பப்பட்டதுடன், அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.
ஆகாஷ் முரளியின் திருமண புகைப்படம் மற்றும் நடிகர் விஜய்யுடன் சேவியர் பிரிட்டோ
இப்படிப்பட்ட சேவியர் பிரிட்டோவிற்கு சினேகா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் சினேகா கல்லூரியில் படித்து வந்த சமயத்தில்தான், அங்கு அவருடன் அதே கல்லூரியில் நடிகர் முரளியின் இரண்டாவது மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷும் படித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அந்த காதல் சில வருடங்களுக்கு பிறகு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. அப்பா, அண்ணனைப் போல் சினிமாவுக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் தொழிலதிபரின் மகளை திருமணம் செய்துகொண்டதால் நிச்சயம் இனி சினிமாவுக்கு வரமாட்டார், மாமனாரின் தொழில்களை கவனித்து ஒரு முழுநேர தொழிலதிபராக மாறிவிடுவார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில்தான் தற்போது ஆகாஷும் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
ஆக்சன் ஹீரோவாக ஆகாஷ்!
திருமணத்திற்கு பிறகு, ஆகாஷ் முரளிக்கு தனது அண்ணனைப் போல தாமும் ஒரு பெரிய ஹீரோவாக வர வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. மருமகனின் ஆசையை தெரிந்துகொண்ட மாமனார் சேவியர் பிரிட்டோவும் அவரின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதன்படி 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா', 'ஆரம்பம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியதுடன், ஹிந்தியில் 'ஷெர்ஷா' என்ற படத்தினை இயக்கி தேசிய விருதினை பெற்றிருந்த இயக்குநர் விஷ்ணுவர்தனை வைத்து படத்தினை இயக்க முடிவு செய்த சேவியர் பிரிட்டோ அதுகுறித்து அவரிடம் பேசி, பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்குள் கொண்டு வந்தார். ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், பின்னர் போர்ச்சுக்கல் நாட்டில் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் படமாக்கப்பட்டு, மீண்டும் சென்னையிலேயே விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பாக படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிகழ்வு வைரலானது. இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் ஆகாஷ் முரளி மற்றும் நடிகை அதிதி ஷங்கர்
இந்த நிலையில், அறிமுக நடிகரான ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தின் மொத்த செலவு எப்படியும் 40 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. மருமகன் என்பதால் அதைப்பற்றி எந்தக் கவலையும் படாமல் படத்தினை எடுத்து முடித்துள்ளாராம் தயாரிப்பாளரும், ஆகாஷின் மாமனாருமான சேவியர் பிரிட்டோ. படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக ஆகாஷ் முரளி ஒருபுறம் சந்தோஷமாக இருக்க, இன்னொரு புறம் இதனை கண்டு ஆனந்தப்பட அப்பா முரளி இல்லையே என்று வருத்தப்பட்டாராம் அண்ணன் அதர்வா. தமிழ் சினிமாவில் தந்தையின் பெயர் சொல்ல மற்றொரு பிள்ளையும் ஹீரோவாக புறப்பட்டுவிட்டார். அவரை வரவேற்று நாமும் வாழ்த்து சொல்லுவோம்.