"குளிருக்கு இதமான மூலிகை டீ"! இப்படி செய்து குடிங்க!
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே உணவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, உணர்வு ஏற்படும். அதில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது தேநீர். அதாவது டீ.
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே உணவுகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, உணர்வு ஏற்படும். அதில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது தேநீர். அதாவது டீ. குளிருக்கு இதமாக தேநீர் அருந்துவது என்றால் பலருக்கும் அலாதியான ஒன்றாகவே இருக்கும். குளிரில் இருந்து நமது உடலை சூடாகவும், இதமாகவும் வைத்துக்கொள்ள இந்த தேநீர் உதவுகிறது. அதிலும், குளிர் காலங்களில் ஏற்படும் தொற்றுகளான சளி, இருமல், தொண்டை கமறல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்வதற்கு என்று நிறைய தேநீர் வகைகள் இருக்கின்றன. அந்தவகையில் சளி, இருமலுக்கு உகந்த வகையில் வெறும் இரண்டு பொருட்களை கொண்டு சுவையான தேநீரை தயாரிப்பது எப்படி என்பதை செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் திரு.சீதாராமன்.
மூலிகை டீ செய்முறை
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு பேர் குடிக்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி சூடு செய்ய வேண்டும்.
தண்ணீர் சூடானுதும் அதில் அதிமதுரம் மற்றும் சித்தரத்தையை பொடித்தோ அல்லது தட்டியோ சேர்த்து 5 முதல் 8 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து கலர் மாறிய பிறகு தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இறக்கினால் அற்புதமான அதேநேரம் ஆரோக்கியமான சளி, இருமலுக்கு உகந்த மூலிகை டீ தயார்.
அதிமதுரம், சித்தரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை டீ
அதிமதுரம், சித்தரத்தையில் உள்ள நன்மைகள்
அதிமதுரம், சித்தரத்தை இரண்டும் நாட்டு மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அதேநேரம் தவிர்க்க முடியாத பொருட்கள்.
இவை இரண்டையும் சம அளவில் நாம் எடுத்துக்கொள்ளும்போது, குளிர்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை புண், வயிற்று புண் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யும்.
நாட்டு மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அதிமதுரம் பொடி மற்றும் பட்டை
சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் உட்பட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகவும் சித்தரத்தை உள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளாக நம் பயன்பாட்டில் உள்ள இந்த அதிமதுர வேரை வாயில் போட்டு சுவைத்தால், அதில் இருந்து வித்தியாசமான இனிப்புச் சுவை நம் தொண்டையில் இறங்குவதை நம்மால் உணர முடியும்.