சிம்பிள் சிக்கன் கிரேவி - இருபதே நிமிடத்தில் ரெடி!
சிக்கனிலேயே சிக்கன் கிரேவி, சிக்கன் பக்கோடா, சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சிக்கன் தந்துரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என பலவிதமான வெரைட்டிகள் சமைக்கப்படுகின்றன.
இன்றைய உணவுமுறை மாற்றங்களில் மக்கள் மனங்களை கவரும் வகையில் எத்தனை வகையான உணவுகள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் விருப்ப உணவாக இருப்பது என்னவோ அசைவ உணவுகள்தான். அந்த அசைவ உணவுகளிலும் பிரதானமாக இருப்பது சிக்கன்தான். சிக்கனிலேயே சிக்கன் கிரேவி, சிக்கன் பக்கோடா, சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குருமா, சிக்கன் பிரியாணி, சிக்கன் தந்துரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என பலவிதமான வெரைட்டிகள் சமைக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் நமது சமையல் பகுதியில் வெறும் 20 நிமிடத்திலேயே மிகவும் எளிமையாக சில்லி சிக்கன் கிரேவியை செய்து காட்டுகிறார்கள் வர்ஷா மற்றும் நந்தினி.
சிக்கன் கிரேவி செய்முறை
அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைக்கவும்.
குக்கர் சூடானதும் ஒரு பெரிய குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு, அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் என்று சொல்லக்கூடிய சோம்பு, பிரிஞ்சி இலை, ராஜ பத்திரி, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதக்கும் தருணம்
வெங்காயம், தக்காளி கலவை நன்கு வதங்கிய பிறகு, கழுவி எடுத்து வைக்கப்பட்டுள்ள சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
சிக்கன் ஓரளவு வதங்கியதும் ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், வீட்டில் அரைத்த மிளகாய் தூள் சிறிதளவு, ஒரு ஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது அதில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும், குக்கர் மூடியை போட்டு இரண்டு விசில் வைத்து இறக்கினால் இருபதே நிமிடத்தில் சிக்கன் கிரேவி ரெடி.
தயார் நிலையில் உள்ள சிக்கன் கிரேவியில் மேலாக கருவேப்பில்லை, கொத்தமல்லி தூவுதல்
சிக்கனில் உள்ள நன்மைகள்
சிக்கனில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சிக்கனை அடிக்கடி சமைத்து சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது.
மேலும், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுப்பதோடு, புத்துணர்ச்சியும் அளிக்கிறது.
சிக்கன் கிரேவி
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.
சிக்கனில் உள்ள பி12 மற்றும் கோலின் என்ற வைட்டமின்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.