10 நிமிடத்தில் பைனாப்பிள் ஊறுகாய் எப்படி செய்வது?

ஊறுகாய் என்று சொன்னதும் எல்லாருக்குமே வாயில் எச்சில் ஊறும். ஊறுகாயில் நிறைய வகை உள்ளது.

Update:2024-05-07 00:00 IST
Click the Play button to listen to article

ஊறுகாய் என்று சொன்னதும் எல்லோருக்குமே வாயில் எச்சில் ஊறும். ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. எலுமிச்சை, மாங்காய், ஆவக்காய், நார்த்தங்காய் என பல வகைகள் இருக்கின்றன. ஏன் நம்ம அசைவ பிரியர்களுக்கென மட்டன், சிக்கன், இறால் ஊறுகாய்களும் இன்று வந்துவிட்டன. இப்படி எல்லோராலும் விரும்பி உண்ணும் இந்த ஊறுகாயில் பல நன்மைகளும் உள்ளன. சில தீமைகளும் உள்ளன. ஊறுகாயில் சிட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம் போன்ற அமிலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வகை அமிலங்கள், குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை வளர்ப்பதுடன், பலப்படுத்தவும் செய்கின்றன. ஊறுகாய் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்; விரைவில் செரிமானம் நடக்க வழிவகுக்கும்; கொழுப்பு சத்தை ஊக்கப்படுத்தும்; இப்படி நன்மைகள் பல இருந்தாலும் அளவுக்கு அதிகமாக ஊறுகாயை எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்நிலையில் பைனாப்பிள் பழத்தை வைத்து எப்படி ஊறுகாய் செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் வினோத்.


செய்முறை:

முதலில் பைனாப்பிளின் தோலை நீக்கி, பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊறுகாய் செய்ய மிகவும் முக்கியமானது, அதில் கலக்கப்படும் மசாலா பொடிதான். அதனை எப்படி செய்வது என பார்ப்போம். மசாலா பொடியை தயாரிக்க, தனியா (கொத்தமல்லி) 2 தேக்கரண்டி, மிளகு 1/2 தேக்கரண்டி, வெந்தயம் 1/2 தேக்கரண்டி மற்றும் கடுகு 1/2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சோம்பு 2 தேக்கரண்டி சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளை போட்டு, அதில் சிறிது கடுகு எண்ணெயை ஊற்ற வேண்டும். அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையுடன் சிறிது உப்பும், சர்க்கரையும் தேவைக்கு ஏற்ப போட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை 1 தேக்கரண்டி சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.


கடுகு எண்ணெயில் பச்சை மிளகாய் வதக்கும் காட்சி 

அடுத்ததாக ஒரு கடாயில் அரை கப் கடுகு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் 2 பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறிது காஷ்மீரி மிளகாய் தூள் போட வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சிறிது சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிது பொருங்காயமும் சேர்த்து சற்று வதக்கியதும், ஊறவைத்துள்ள பைனாபிளை சேர்த்து நன்கு கலந்தால் பைனாப்பிள் ஊறுகாய் ரெடி!

இந்த பைனாப்பிள் ஊறுகாயை 48 மணி நேரத்திற்கு பிறகு, நன்கு ஊறிய பின்னர் சாப்பிட்டால் அட்டகாசமா, அசத்தலாக இருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை சேகரித்து வைத்து, 3 மாதங்கள்வரை பயன்படுத்தலாம்.

பைனாப்பிள் (அன்னாசி) நன்மைகள்:

பைனாப்பிள் (அன்னாசி) பழத்தில் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலுக்கு வலு சேர்க்கிறது.

ப்ரோமிலைன் என்ற நொதிகள் பைனாப்பிள் பழத்தில் அதிக அளவில் உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் அழற்சியை குறைக்கின்றன.

பைனாப்பிள்(அன்னாசி) பழத்தில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, கண் பார்வையை மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு பைனாப்பிள் பழம் மிகவும் உதவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்