வில்லனாக நடிப்பது ஏன்? - நடிகர் ஜெய்சங்கர் விளக்கம்

நண்பர்களுக்காகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

Update: 2023-08-14 18:30 GMT
Click the Play button to listen to article

(08.03.1981 தேதியிட்ட `ராணி’ இதழில் வெளியானது)

‘முரட்டுக்காளை’ திரைப்படம் ஜெய்சங்கருக்கு ஓர் ஏணியாக அமைந்துவிட்டது. ஜெய்சங்கர் மீண்டும் தனது இடத்தைப் பிடிப்பார் என சொல்லக்கூடிய அளவுக்கு, அவருக்குப் படங்கள் குவிந்து கொண்டு இருக்கின்றன! ரஜினிகாந்தோடு இரண்டு படத்திலும், கமலஹாசனோடு ஒரு படத்திலும், பஞ்சு அருணாசலம் படம் ஒன்றிலும், கர்ணன் டைரக்சனில் உருவாகும் படம் ஒன்றிலும் ஜெய்சங்கர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வில்லனாக நடிப்பது ஏன்?

15 ஆண்டு காலம் கதாநாயகனாகக் கொடி கட்டிப் பறந்த நீங்கள் வில்லன் பாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று ஜெய்சங்கரிடம் "ராணி" நிருபர் கேட்டார்.

ஜெய்சங்கர் கூறினார்:- நான் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவன், சண்டைக் காட்சிகளில் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றவன். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ‘முரட்டுக்காளை’யில் எனது வில்லன் பாத்திரத்தைப் படைத்து இருந்தார்கள். அதனால்தான், நான் மகிழ்ச்சியுடன் அந்தப் பாத்திரத்தில் நடித்தேன். அடுத்து நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களிலும் என் மனதுக்கு ஏற்றபடியே பாத்திரங்கள் அமைந்துள்ளன.


‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜெய்சங்கர்

ரசிகர்கள் வரவேற்பு!

நிரு: நீங்கள் வில்லனாக நடிப்பதை உங்கள் ரசிகர்கள் வரவேற்கிறார்களா?

ஜெய்: என் ரசிகர்கள் எனது முடிவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. என்மேல் கொண்டுள்ள அளவுகடந்த அன்பால், "நீங்கள் வில்லனாக நடிக்கக் கூடாது" என்கிறார்கள்; ஆனால் ஒரு பகுதியினர் எனது முடிவை ஆதரிக்கிறார்கள். மற்றவர்களும் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நிரு: ஆண்டுக்கு பத்து பதினைந்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்த உங்கள் மார்க்கெட்டு திடீர் என்று சரிந்தது ஏன்?

ஜெய்: ரசிகர்களிடம் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம்!

நிரு: இப்பொழுது மீண்டும் உங்களுக்கு வாய்ப்புப் பெருகி வருகிறதே?

ஜெய்: இதற்குக் காரணமும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்தான்! இப்பொழுது அவர்கள் பழையவர்களை புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்!


ஜெய்சங்கர்

தி.மு.க.வா?

நிரு: நீங்கள் தி.மு.க.வில் சேர்ந்ததால்தான் மார்க்கெட்டை இழந்தீர்கள் என்கிறார்களே?

ஜெய்: நான் எப்பொழுதும் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. கலைஞர் கருணாநிதி மீது எனக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. அவர் மருமகன் செல்வம் எடுத்த ‘வண்டிக்காரன் மகன்’ படத்தில் நடிக்கும்பொழுது, கருணாநிதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. ‘வண்டிக்காரன் மகன்’ பட தொடக்க விழாவின் போதும் வெற்றி விழாவின் போதும் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசினேன். இதை வைத்துக் கொண்டு சிலர் எனக்கு கட்சிச் சாயம் பூசினார்கள். ஆனால் எனக்கும் எந்தக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது.


ஜெய்சங்கர் மற்றும் கருணாநிதி

பணமே பிரதானம்

நிரு: நீங்கள் நிறையப் படங்களை ஒப்புக் கொண்டு, மாதத்துக்கு மூன்று நான்கு படங்களை வெளியிட்டதும் உங்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறதே?

ஜெய்: இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. நான் அப்போது பணத்துக்காக நிறையப் படங்களில் நடிக்கவில்லை. நண்பர்களுக்காகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன். என் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும், பணத்திற்காகவும் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். கையில் பணம் இருந்தால்தானே, ஏதாவது நல்ல காரியம் செய்ய முடியும்?


ஜெய்சங்கர்

நிரு: சினிமா உலகம் இப்பொழுது எப்படி இருக்கிறது?

ஜெய்: கடந்த ஆண்டுகளில் வேகம் அதிகமாக இருந்தது. இப்பொழுது அது தணிந்து வருகிறது. புதிய பாணி புதிய கண்ணோட்டத்தில் படங்களை எடுக்கிறார்கள். காலம் மாற மாற, கடைசியில் பழைய நிலைக்கே வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்