"விடாமுயற்சி" படப்பிடிப்பு இப்படித்தான் இருந்தது! - அஜித் பற்றிய தகவல்களை பகிரும் நடிகர் கணேஷ் சரவணன்!
எல்லோரையும் போன்று சினிமா என்னும் கனவோடு சென்னைக்கு வந்து போராடி, இன்று பலருக்கும் தெரிந்த திறமையான நடிகராக மாறியிருக்கிறார் நடிகர் கணேஷ் சரவணன்.;
வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் விடா முயற்சியும், விவேகமும் மிகவும் முக்கியம். அப்படியான விடா முயற்சியோடும், விவேகத்தோடும் சினிமாவுக்கு வந்து போராட துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ரோல் மாடலாக தமிழ் சினிமாவில் பலர் இருக்கின்றனர். அந்த வகையில், இன்று நமது ராணி ஆன்லைன் சினிமா பகுதியில் நாம் சந்திக்க இருக்கும் விருந்தினர் யார் என்றால் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாருடன் ஸ்க்ரீன் ஷேர் செய்து நமக்கெல்லாம் மிகவும் பரிட்சயமான நடிகர் கணேஷ் சரவணன்தான். எல்லோரையும் போன்று சினிமா என்னும் கனவோடு சென்னைக்கு வந்து போராடி, இன்று பலருக்கும் தெரிந்த திறமையான நடிகராக மாறியிருக்கும் அவர், தன் திரை அனுபவங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் முதல் பகுதியை இங்கே காணலாம்.
‘விடாமுயற்சி’ படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது? அஜித்துடன் நடித்த அனுபவம் மற்றும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னென்ன?
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இயக்குநர் மகிழ் திருமேனி மட்டும்தான். அவரது இயக்கத்தில் நான் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து விட்டேன். முதல் படம் நடிகர் ஆர்யாவுடன் ‘மீகாமன்’, இரண்டாவது படம் உதயநிதியுடன் ‘கலகத் தலைவன்’. மூன்றாவதுதான் ‘விடாமுயற்சி’. ‘விடாமுயற்சி’ படம் தொடங்கிய சமயம், நான் ‘ராவணக் கோட்டம்’ என்றொரு படத்தில் இரண்டாம் நிலை ஹீரோவாக நடித்து முடித்திருந்தேன். அப்போதுதான் மகிழ் திருமேனியை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். அவரும் எனக்கு ஒரு வேடம் அதில் கொடுத்தார். இப்படித்தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன்.
இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் நடிகர் சாந்தனுவுடன் கணேஷ் சரவணன்
விடாமுயற்சியில் நடிக்கும்போது அஜித்துடன் ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதும் இருக்கிறதா?
மறக்க முடியாத நிகழ்வுகள் ஒன்று, இரண்டு இல்லை. நிறையவே இருக்கிறது. நான் கிட்டத்தட்ட 60 நாட்கள் இந்த படத்தில் பயணித்திருக்கிறேன். அதில் 30 நாட்கள் மட்டும்தான் எனக்கு படப்பிடிப்பு இருந்தது. மீதி 30 நாட்கள் அவருடனேயே உடன் இருந்து பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இது யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம். எனக்கு முதல் முதலாக ஷூ மற்றும் நிறைய ஆடைகள் வாங்கி பரிசளித்தார். சமைத்து கொடுப்பார். அவருடன் எங்காவது அழைத்துச் செல்வார். தான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் உடன் நடிக்கும் அனைவரிடமும் சமமாக பழகுவார். இப்படி மறக்க முடியாத நினைவுகள் மட்டுமின்றி நிறைய நல்ல விஷயங்களையும் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
அஜித்துடனான நினைவுகளை பகிர்ந்த நடிகர் கணேஷ் சரவணன்
விடாமுயற்சி படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் நடித்திருந்தார்.. அவரது டீமில்தான் நீங்களும் இருப்பீர்கள். அவருடன் நடித்த அனுபவங்கள் மற்றும் உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்ட விதம் பற்றி கூற முடியுமா?
ஒவ்வொரு படத்திற்கும் கேப்டன் என்று பார்த்தல் அது இயக்குநர்தான். அப்படி என்னுடைய படத்திற்கு மகிழ் திருமேனி கேப்டன் என்பதால் ஒருவனை அவனது வேடத்திற்கு எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதை அவர் பார்த்துக்கொள்வார். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால் மகிழ் எனக்கு ஆடிஷன் வைக்கும்பொழுது ஒரு காட்சி குறித்து விளக்கி நடிக்க சொன்னார். நான் நடிக்கும் பொழுது நான் சொன்ன கதையை நன்கு உள்வாங்கி நடித்தாயா? என்று கேட்பார். தனக்கே உரிய ஸ்டைலில் நடிக்க வைப்பார்.
'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகர் அர்ஜூனுடனான காட்சியில் நடிகர் கணேஷ் சரவணன்
அர்ஜூனுடன் ஏற்கனவே இரும்புத்திரை படத்தில் நடித்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் தன் நடிப்பு சார்ந்து மட்டுமான சிந்தனையில்தான் எப்போதும் அவர் இருப்பார். அதனால், நடித்து முடித்து தனியாக அமர்ந்திருக்கும் போதுதான் நாங்கள் சென்று பேசுவோம். அப்போது பொதுவான விஷயங்கள் குறித்தும், இதற்கு முன்பாக இரும்புத்திரையில் அவருடன் நடித்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும் பேசுவோம். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்று பார்த்தால் அவரின் டெடிகேஷன், ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னை எப்படி தயார் படுத்திக்கொள்வது, செய்யும் வேலையை சிம்பிளாக எப்படி செய்வது போன்றவைதான்.
இந்த படத்தில் நீங்கள் நடிக்கும் போது நிறைய ஜிம் ஒர்கவுட் வீடியோ எல்லாம் போட்டு இருந்தீர்கள்.. அதுபற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஜிம் செல்வது என்பது எனக்கு பிடித்தமான ஒன்றுதான். சிறுவயதில் இருந்தே ஜிம், அத்லெட்டிக் போன்ற ஸ்போர்ட்ஸ் தொடர்பானவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா தொடர்பான சில கலைகளை கற்றுக்கொண்டு வருகிறேன். அதில் பாக்சிங்கும் ஒன்று. இந்த படத்திற்கு ஃபிட்னெஸ் தேவைப்பட்டது. அதற்காக என்னை தயார் படுத்திக்கொண்டேன். கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி என்னை நான் மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஜிம் பயிற்சியின்போது கணேஷ் சரவணன்
உங்களின் முதல் பட அனுபவம் பற்றி கூற முடியுமா?
இயக்குநர் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம்தான் என்னுடைய முதல் படம். அந்த படத்திற்கான வாய்ப்பை என்னுடைய ஜிம் நண்பர் பிரபு என்பவர்தான் வாங்கி கொடுத்தார். நடிகை அனுஷ்காவை ஒருதலையாக காதலிப்பது போன்ற கதாபாத்திரம். அனுஷ்காகிட்டாதான் நான் என்னுடைய முதல் வசனத்தை பேசினேன். அதில் முதல் அனுபவம் என்ன என்றால் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜட்டியுடன் அமர்ந்து போலீஸ் அடித்து அமர வைத்திருப்பார்கள். அப்போது எங்களோட ஆள எப்படி அடிக்கலாம் என்று என்னை தொட்டு, பிடித்து சண்டை போடுவாங்க. அந்த காட்சியில் நடிக்கும் போது எனக்கு ஏதோ பெரிய சாதனையே நடத்திவிட்டது போல் இருந்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்து நாம் தவிர்க்க முடியாத ஹீரோவாக வர போகிறோம் என்ற ஒருவிதமான மனநிலையில் இருந்தேன். ஆனால், படம் வெளிவரும்போது அந்த காட்சிகளையெல்லாம் எடுத்துவிட்டார்கள். அப்போது நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், சினிமாவில் அப்போது நான் ஜீரோதான் என்றாலும் கூட அந்த படத்தில் நான் நடித்த காட்சி அப்போதே வெளிவந்து இருந்தால் அன்றே நான் தோற்றுப் போய் இருப்பேன். எனக்கொரு தலைக்கனம், திமிரு எல்லாம் வந்து இருக்கும். ஆனால், இன்று நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். அது அனைத்தும் எனக்கு ஒவ்வொரு அனுபவ பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதனால்தான், இந்த நிலைக்கு நான் வந்து நிற்கிறேன்.
‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவுடன் கணேஷ் சரவணன்
முதல் முறையாக கேமரா முன்னாடி நின்ற அனுபவம் எப்படி இருந்தது?
நான் சினிமாவுக்கு புதிது என்பதால் மிகவும் பயமாக இருந்தது. அதிலும் இயக்குநர் செல்வராகவன் மிகவும் டென்ஷன் ஆவார். நைட் எல்லாம் தூக்கம் வராது. அதுவொரு மாதிரி இருக்கும். 20 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் தினமும் ஒருவித பயத்தோடுதான் இருப்பேன். ஆனால், இப்பொது அப்படியான எந்த பயமும் இல்லை. செல்வராகவன் சார் இயக்கத்தில் நடித்தால் கூட அவர் எப்படி இயக்குவார் என்ற புரிதல் வந்துவிட்டது.
சினிமா ஆசை எப்போது வந்தது.. குடும்பத்தில் உள்ளவர்கள் எந்தமாதிரியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள்?
எனக்கு சினிமா ஆசை வந்ததற்கு காரணம் என்னுடைய தாத்தாதான். 1935 கால கட்டங்களில் ஜெமினி பிக்சர்ஸ் தயாரித்த ‘பக்த துருவன்’, ‘சத்தியவான் சாவித்திரி’ போன்ற ஊமை படங்களில் நடித்து இருக்கிறார். திருச்சி பாலக்கரையில் சொந்தமாக கூத்துப்பட்டறையும் வைத்து இருந்தார். அந்த டிராமா கம்பெனிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் வந்து போனதாக எங்கள் வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்ப சூழலினால் போக முடியவில்லை. நான் ஒரு நிறுவனத்தில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது ஏன் நமது தாத்தா பயணித்த சினிமா துறைக்கு நாமும் போகக்கூடாது என்று அந்த சமயம் எடுத்த முடிவுதான்.
‘சத்தியவான் சாவித்திரி’ பட காட்சி மற்றும் கணேஷ் சரவணன்
இதை வீட்டில் தெரிவித்த போது முதலில் பயந்தார்கள். காரணம் நன்கு சம்பாதித்து குடும்பத்தை மேலே கொண்டு வரவேண்டிய பையன், திடீரென சினிமாவுக்கு போகிறேன் என்கிறானே என்பதுதான். ஒரு இரண்டு வருடம் மட்டும் முயற்சி செய்து பார்க்கிறேன். முடியாவிட்டால் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன.
உங்களின் சினிமா கனவை அடைய இந்த 15 வருடங்கள் எப்படியெல்லாம் போராடி இருக்கிறீர்கள்? என்ன மாதிரியான சவால்களை எல்லாம் சந்தித்து இருக்கிறீர்கள்?
உறவுகளை இழந்தாச்சு. நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கிறேன். அதைத்தாண்டி இன்னும் வெளியில் சொல்ல முடியாத நிறைய இருக்கிறது. அதை தவிர்த்து விடலாம் என்று நினைக்கிறேன்.
அஜித்துடன் நடித்து விட்டீர்கள்… தளபதி கூட நடிக்க ஏதும் முயற்சி செய்தீர்களா? வாய்ப்பு ஏதும் வந்ததா?
நடிகர் விஜய் மற்றும் கணேஷ் சரவணன்
அஜித்துடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தது போன்று விஜய் சார் படத்திலும் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறேன். பெரிய ஹீரோக்களின் படத்தில் நடிக்க அவ்வளவு எளிதில் தயாரிப்பு நிறுவனத்தை அணுகிவிட முடியாது. அதற்கு என்று பி.ஆர்.ஓ குரூப் இருப்பார்கள். பெரிய டீம் இருப்பார்கள். உள்ளே நெருங்குவதே அவ்வளவு எளிது கிடையாது. அதை தாண்டி விஜய் சாரின் கடைசி படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை கேட்டு பிறகு நான் அழைத்து அழைத்து பார்த்தேன். அவர்களிடம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. சரி நமக்கு கிடைப்பதுதான் கிடைக்கும் என்று விட்டுவிட்டேன்.
திருநங்கைகளை மையமாக வைத்து ஒரு குறும்படமும், பாடலும் இயக்கி இருக்கிறீர்கள்? அதுபற்றி சொல்ல முடியுமா?
இயக்குநராக சாதித்த கணேஷ் சரவணன்
இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் இல்லை. கொரோனா லாக்டவுனின்போது, அடுத்து என்ன செய்ய போகிறோம்? இனி எந்த இயக்குநர் என்னை வைத்து படம் இயக்க போகிறார் என்று பல கேள்விகள் எழுந்தன. அப்போதுதான் இயக்கத்தை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டு எடுத்த குறும்படம்தான் அது. திருநங்கைகளை மையமாக கொண்டு எடுத்ததற்கான காரணம் என்று பார்த்தால் எனக்கு ஆனந்த் என்றொரு நண்பன் இருந்தான். அவன் வாழ்க்கையில் என்ன நடந்தது? 1985-ல் திருநங்கைகள் குறித்து மக்களுடைய பார்வை எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் எடுத்தேன். இந்த குறும்படத்தை இயக்கிய பிறகு திருநங்கைகள் மீதான மரியாதை என்பது எனக்கு இன்னுமே அதிகமாகியுள்ளது.