தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிட்டது! - வேதனைப்படும் இயக்குநர் வி. சேகர்

தமிழ் சினிமாவில் இயக்குநர் விசுவுக்கு பிறகு அன்றாடம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளை அலசும் வகையில் மிகவும் எதார்த்ததுடன் கூடிய குடும்ப பாங்கான கதையம்சம் உள்ள படங்களை எடுத்து வெற்றி கொண்டவர்தான் இயக்குநர் வி.சேகர்.;

Update:2025-03-18 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் இயக்குநர் விசுவுக்கு பிறகு அன்றாடம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சினைகளை அலசும் வகையில் மிகவும் எதார்த்ததுடன் கூடிய குடும்ப பாங்கான கதையம்சம் உள்ள படங்களை எடுத்து வெற்றி கொண்டவர்தான் இயக்குநர் வி.சேகர். 1990-கள் மற்றும் 2000-களின் தொடக்கம் வரையுமே குடும்பங்களில் நடக்கும் அழகான விஷயங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறும் விதமாக இவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட் ஆனவை. இப்படி பல சிறப்புகளை கொண்ட இவரின் திரைப்பயணம் குறித்த நேர்காணலின் முதல் பகுதியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பகுதி கட்டுரையை இங்கே காணலாம்.

சமீப காலமாக குடும்ப திரைப்படங்கள் அதாவது குடும்பமாக சேர்ந்து போய் பார்ப்பது மாதிரியான திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டது. இப்போது இளைஞர்களை மட்டுமே குறிவைத்து காதல், ஆக்ஷன், வயலன்ஸ் மாதிரியான படங்கள் தான் அதிகமாக வருகின்றன. ஒரு இயக்குநராக உங்களுடைய பார்வை எப்படி இருக்கிறது?

தொலைக்காட்சிகள் அதிகம் இல்லாத அன்றைய காலத்தில் குடும்ப பாங்கான கதைகளை சினிமாவில் மட்டும்தான் அதிகமாக பார்க்க முடியும். அப்போது எனது குருநாதரான விசு இருந்தார். அவரும், நானும் நிறைய குடும்ப கதைகளை எடுத்தோம். இப்போது தொலைக்காட்சிகள் அதிகமாகி விட்டன. தியேட்டருக்கு குடும்பமாக சென்று படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அங்கு டிக்கெட் விலை, தின்பண்டங்களின் விலை அனைத்தும் அதிகமாக இருக்கிறது. அதனால், வீட்டிலேயே டிவியில் படத்தை பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டது. இதுதான் காரணமாக நான் பார்க்கிறேன்.


மறைந்த இயக்குநர் விசு மற்றும் இயக்குநர் வி.சேகர்

 குடும்பத்தை முன்னிறுத்தி மிகவும் எமோஷனலான படங்கள் வருவது என்பது குறைந்துவிட்டது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழ் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கிறதா?

ஆரோக்கியம் குறைந்துவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்கள் அனைவரும் ஆயிரம், இரண்டாயிரம் திரையரங்கங்களை வைத்து படம் எடுத்து வெளியிடுகிறார்கள். அதனால் சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. நான் மூன்று கோடி, நான்கு கோடி அளவில் சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்கும் பொழுது தியேட்டர்களில் மூன்று லட்சம், நான்கு லட்சம் முன்பணம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் சிறிய பட்ஜெட் படங்களுக்கு அப்படி கொடுப்பது இல்லை. சம்பளம், லாபம் அதை மட்டும் குறியாக வைத்துக்கொண்டு அனைத்தையும் பெரிய பட்ஜெட் படங்களாக மாற்றிவிட்டார்கள். ரஜினி, கமல் ஆகியோர் ஆரம்ப காலங்களில் மிகவும் நல்ல நல்ல படங்களில் நடித்தார்கள். ஆனால் இப்போது எடுத்த எடுப்பிலேயே தலையை எடுப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள். கேட்டால் கமர்ஷியல் படங்கள் என்கிறார்கள். அவர்களின் படத்தை பார்க்கும் ரசிகர்களும் அதை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் ட்ரெண்டையே மாற்றிவிட்டார்கள். இந்தமாதிரியான சூழல் சினிமாவுக்கு நல்லதல்ல. போக்குவரத்தில் எப்படி ஒரு டிராபிக் சிஸ்டம் இருக்கிறதோ அதேபோன்று சிறிய படம், பெரிய படம் இரண்டுக்கும் ஒரு டிராபிக் சிஸ்டம் கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால்தான் நல்ல படங்கள் அதிகம் வரும். மக்களும் திரையரங்கம் வந்து படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.


அப்போதைய படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் 

உங்கள் படங்களுக்கு என்று ரசிகர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். அப்படியான படங்கள் வருவதில்லை என்று நினைக்கிறீர்களா? ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?

ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள், நிறைய நல்ல படங்களை பார்க்க தயாராக இருக்கிறார்கள். அதிலும், தியேட்டரில் போய் பார்ப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். தியேட்டரில் பார்க்கும் சுகம் வீட்டில் கிடைப்பது இல்லை.

ஓடிடி தளங்கள் நிறைய வந்துவிட்டன. அதன் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

ஓடிடி தளங்கள் தவறில்லை. ஓரளவுக்கு படித்தவர்கள், வேலையில் இருப்பவர்கள் பயணத்தின் போதோ, அலுவலகத்தில் இடைவேளை நேரங்களிலோ பார்ப்பதற்கு ஓகேதான். ஆனால், உங்கள் குழந்தைகளை மொபைலில் போட்டோவில் பார்த்து முத்தம் கொடுப்பதற்கும், நேரில் பார்த்து கொஞ்சி மகிழ்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஒரு திரைப்படத்தில் வரும் காமெடி சீனையோ அல்லது ஒரு அழகான காட்சியையோ எல்லோருடனும் சேர்ந்து தியேட்டரில் பார்த்து கைதட்டி மகிழ்வதற்கும், வீட்டில் தனியாக அமர்ந்து பார்த்து தனிமையில் சிரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால் என்னை பொறுத்தவரையில் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதுதான் சரி என்று நான் நினைக்கிறேன்.


தின்பண்டங்கள், பார்க்கிங் கட்டணம் போன்றவற்றால் ரசிகர்களுக்கு அதிகரிக்கும் திரையரங்கு செலவு 

உங்களுக்கான சினிமா பயணம் எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது?

எம்.ஏ பட்டதாரி நான். நன்கு படித்து அரசுத்துறையில் அதுவும் கல்வி சார்ந்த துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், மாநகராட்சி அலுவலகத்தில்தான் வேலை கிடைத்தது. அங்கு ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கொண்டிருந்தேன். பட்ஜெட் போட்டுத்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தேன். குடும்பத்தோடு படம் பார்க்க செல்ல வேண்டும் என்றால் கூட மாதத்திற்கு ஒருபடம் அல்லது இரண்டு படத்திற்குத்தான் செல்வோம். அதுவும் படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டுதான் அழைத்துச் செல்வேன். படம் நன்றாக இல்லை என்றால் அதற்கும் திட்டு விழும். இப்படி சென்று கொண்டிருந்த எனது வாழ்வில் சினிமா என்பது எதிர்பாராமல் வந்ததுதான். இயக்குநர் பாக்கியராஜ் மூலமாகத்தான் சினிமாவுக்குள் வந்தேன். நண்பர் ஒருவர் மூலமாக அவரின் 'சின்ன வீடு' படம் பார்க்க ஏவிஎம் சென்று இருந்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு என்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறினேன். மறுநாள் காலையில் கார் அனுப்பி நீங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறது. மிகவும் போல்டாக கூறினீர்கள். பேசாமல் என்னுடன் வந்து பணியாற்றுங்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே 15 வருடங்கள் அரசுத்துறையில் பணியாற்றிவிட்டேன். எனக்கு ஏற்கனவே 36, 37 வயது ஆகிறது என்று கூட சொல்லி பார்த்தேன். ஆனால், அவர் வயதெல்லாம் முக்கியம் இல்லை. மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கே 40 வயதில்தான் டேக் ஆப் ஆனது என்று, விடாமல் பேசவும் நானும் அவருக்காக ஒப்புக்கொண்டேன். அவரை நம்பி சினிமாவுக்கு சென்றேன். நிறைய உதவிகள் செய்தார். அதன் பிறகு நானும் இயக்குநராக களமிறங்கினேன். அதில் வெற்றியும் கண்டேன். பார்க்க வரும் மக்கள் என்னடா படம் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைத்துவிடக் கூடாது என்று மிகவும் யோசித்து யோசித்துதான் படங்களை எடுப்பேன்.


 'சின்ன வீடு' திரைப்படத்தில் ஒரு காட்சியில் பாக்யராஜுடன் நடிகை அனு 

இயக்குநர் பாக்கியராஜ் அவர்களுடன் மறக்க முடியாத அனுபவங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நிறையவே இருக்கிறது. அவர் என்னை வேலைக்கு எடுத்ததே மறக்க முடியதா ஒன்றுதான். நிறைய இளைஞர்கள் வந்தால் கூட உன்னிடம் நிறைய அறிவுசார்ந்த தகவல்கள் இருக்கிறது. எப்படி என்று கேட்பார். நான் மாநகராட்சியில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவன். தினமும் குறைந்தது மலேரியா, காலரா என்று ஒரு 500 பேரை சந்திப்பேன். அதனால் மக்களின் கருத்துக்கள் ஓரளவு எனக்கு தெரியும் என்றதும், சூப்பர் இதுதான் சினிமாவுக்கு தேவை என்று கூறினார். எடுத்த எடுப்பிலேயே என்னை அசோஸியேட்டாக சேர்த்துக்கொண்டார். ‘எங்க சின்ன ராசா’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்கள்தான் அவருடன் பணியாற்றினேன். பிறகு நிறைய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நானும் இயக்குநராக களமிறங்கிவிட்டேன்.


பாக்யராஜின் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய வி.சேகர் 

உங்கள் காலகட்டங்களில் நிறைய ஜானர்களில் படங்கள் வந்தாலும் நீங்கள் குடும்பம் சார்ந்த கதையுள்ள படங்கள்தான் அதிகம் எடுத்தீர்கள். இந்த ஜானர் கதைகள்தான் பிடிக்குமா? இல்லை வேறு கதைக்களங்களும் பிடிக்குமா?

அரசனாகலாம் என்று ஆசை. ஆனால், வாய்ப்பு கிளர்க்காகதான் கிடைக்கும். அதுபோன்று சினிமாவில் எத்தனையோ ஜானர் இருக்கிறது. முதலில் நான் மக்கள்தான் ஹீரோ என்று புரட்சிகரமான படம் எடுத்தேன். ஆனால், அந்த படம் ஓடவில்லை. மீண்டும் அரசு வேலைக்கே சென்றுவிடலாமா? என்று யோசித்துக்கொண்டிருந்த போது எனது மனைவிதான் குடும்பம் சார்ந்து படங்கள் எடுங்கள் என்று சொன்னார். நான் இல்லை, விசுவே, நிறைய குடும்ப படங்கள் எடுத்தார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்திற்கு பிறகு ஓடவேயில்லை. ட்ரெண்ட் மாறிவிட்டது போல என்று சொன்னேன். இல்லை நீங்கள் குடும்பம் சார்ந்து ஒரு படம் எடுங்கள். நிச்சயம் போகும் என்று விடாமல் கூறியதால் மனைவிக்காக எடுத்தேன். ‘நான் பிடித்த மாப்பிள்ளை’ என்று குடும்பம் சார்ந்து எடுத்தேன். அந்த படம் தமிழில் 100 நாள், தெலுங்கில் சில்வர் ஜூபிலி, கன்னடத்தில் 100 நாள் இப்படி மாபெரும் வெற்றி பெற்றது. எனக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அந்த ஒரு படத்திலேயே கார், வீடு என்று எல்லாமே வாங்கி பெரிய இயக்குநராக மாறிவிட்டேன். அடுத்த படம் எடுக்க தயாராகும் போது, மனைவி சொல்லை கேட்டு இரண்டாவது படம் வெற்றி பெற்றதால் அடுத்த படத்தை ‘பொண்டாட்டி சொன்னா’ கேட்டுக்கணும் என்று பெயர் வைத்து எடுத்தேன். அதுவும் வெற்றி பெற்றது. இப்படிதான் என் இயக்குநருக்கான வெற்றிப்பயணம் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்