காதல் திருமணத்தை அனுமதித்தேன் - சொல்கிறார் நடிகை ஜெயசுதா அம்மா!

ஜெயசுதாவின் அம்மா ஜோக, கல்லூரியில் (புகுமுக வகுப்பு) படித்தவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாடகங்களில் நடித்தார்.;

Update:2025-03-25 00:00 IST
Click the Play button to listen to article

(24.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

ஜெயசுதாவின் அம்மா ஜோகா, கல்லூரியில் (புகுமுக வகுப்பு) படித்தவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது நாடகங்களில் நடித்தார். ஜோகாவைப் பார்த்த தயாரிப்பாளர்கள், அவரை சினிமாவில் நடிக்க அழைத்தார்கள். அதற்குள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டார் ஜோகா.

பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது, ரமேஷ் என்பவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். "காதலனையே மணப்பேன்" என்று பிடிவாதமாக இருந்தார் ஜோகா. அதனால் பெற்றோர்கள், காதலித்தவருக்கே, ஜோகாவை கை பிடித்துக் கொடுத்தார்கள். அப்போது ஜோகாவுக்கு வயது 14. ரமேஷுக்கு 19 வயது. ஜோகாவின் 2-வது மகள், ஜெயசுதா.

ஜோகா சொன்னர்:-

விஜயநிர்மலா

"நான் சின்ன வயதில் நடனமும் பாட்டும் கற்று இருந்தேன். அதனால், திருமணத்துக்குப் பிறகும், என்னை நடிக்க அழைத்தார்கள். ஆனால், என் கணவர் ரமேஷ், அனுமதிக்கவில்லை. எனக்கு வந்த சினிமா வாய்ப்பு எல்லாம் பறிபோனது. ஆனால், அந்த வாய்ப்பு என் மகளைப் பின்னால் தேடிவரும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.


அழகு பதுமையாக நடிகை ஜெயசுதா 

என் கணவரின் சொந்த அக்காள் மகள்தான் நடிகை விஜயநிர்மலா.

சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்த விஜயநிர்மலா, "ஜெயசுதாவை நடிக்க வைக்கலாமா?" என்று என்னிடம் கேட்டாள்.

ஜெயசுதாவிடம் அழகு இருந்தது. நடிப்புச் சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொண்டு செய்யும் ஆற்றலும் இருந்தது. அதனால், நான் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.

படங்களில் நடிக்க ஜெயசுதாவும் சம்மதம் தெரிவித்தாள். என் கணவரும் அனுமதித்தார்.

பயிற்சி


புன்னகையுடன் ஜெயசுதா...

ஜெயசுதாவுக்கு வீட்டில் வைத்து நடிப்பு பயிற்சி அளிக்கத் தொடங்கினாள், விஜயநிர்மலா. நான் நடனம் சொல்லிக் கொடுத்தேன். ஜெயசுதாவுக்கு நடிப்பில் இருந்த ஆர்வம், நடனத்தில் இல்லை. இப்பொழுதுகூட, ஜெயசுதாவுக்கு நடனம் என்றால் அலர்ஜிதான்! சினிமாவில் நடனக் காட்சி வந்தால், விருப்பம் இல்லாமல்தான் நடித்து முடிப்பாள்.

"பெத்தமனம் பித்து” என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க ஜெயசுதா முதன் முதலாக ஒப்பந்தமானாள். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை தொடர்ந்து, மளமள என்று படங்கள் வந்தன.

நடிகைகளின் அம்மா

ஜெயசுதாவின் பட விவகாரங்களை பற்றியோ, பண விவகாரங்கள் பற்றியோ நான் எதுவும் பேசுவது இல்லை. எல்லாம் அவள் அப்பாதான் பார்த்துக் கொள்ளுவார். “கால்ஷீட்டு” விவகாரங்களையும் அவரே கவனித்துக் கொள்வார். நான் ஜெயசுதாவோடு படப்பிடிப்புக்கு மட்டும் செல்வேன்.


கண்களால் பேசும் ஜெயசுதா...

என்னை “நடிகை”யின் அம்மா என்று சொல்லுவதைவிட, “நடிகைகளி"ன் அம்மா என்று சொல்லுவதே பொருந்தும். காரணம், என் இளைய மகள் சுபாஷிணியும் (ஜெயசுதாவின் தங்கை) இப்பொழுது நடித்துக் கொண்டு இருக்கிறாள்!

காதல்

தங்கை நடிகை ஆனதும், ஜெயசுதா தனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். நான் இளம் வயதில் செய்து கொண்டதுபோல, ஜெயசுதா செய்துகொண்டதும், காதல் திருமணம்தான்! எல்லா பெற்றோர்களும் செய்வது போல, நாங்களும் ஜெயசுதாவின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தோம்.

ஜெயசுதா, எங்கள் எதிர்ப்பையும் மீறி, காதலித்தவரையே கை பிடித்தாள்!

அதற்காக, என் மகளை நான் ஒதுக்கிவிடவில்லை.


கோபமான முக பாவனையில்... 

ஜெயசுதாவிடம் இளமையும் அழகும் இருந்தும், நாங்கள் எதிர்பார்த்த அளவு தமிழ்ப்படங்களில் அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

ஆனால், தமிழ் சினிமா உலகம் கைவிட்ட ஜெயசுதாவை, தெலுங்குத் திரை உலகம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. தெலுங்கில் இப்பொழுது என் மகள்தான் (ஜெயசுதாதான்) "சூப்பர் ஸ்டார்" என்பதை நினைக்கும் பொழுது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கிறது.

சுபாஷிணியை தமிழ்த் திரை உலகம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கிறோம்!" என்று சொன்னார், ஜோகா. ஜெயசுதாவுக்கு நடிகை சுபாஷிணியோடு, இரண்டு தம்பியும் இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்