முதல் வாழ்க்கை தந்த பாடமா? மீண்டும் திருமணம் பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தும் சோனியா அகர்வால்!
‘காதல் கொண்டேன்’ திவ்யாவாக, ‘7ஜி ரெயின்போ காலனி’ அனிதாவாக நமக்கெல்லாம் அறிமுகமாகி அன்றைய இளைஞர்கள் பலரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகை சோனியா அகர்வால்.;
‘காதல் கொண்டேன்’ திவ்யாவாக, ‘7ஜி ரெயின்போ காலனி’ அனிதாவாக நமக்கெல்லாம் அறிமுகமாகி அன்றைய இளைஞர்கள் பலரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர்தான் நடிகை சோனியா அகர்வால். தெளிந்த முகம், நீரோடை போன்ற கண்கள் என தனக்கே உரிய அழகுடன் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த சோனியா, குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும், நடித்த அத்தனை படங்களுமே ரசிகர்களின் மனம் கவர்ந்தவை. இன்றைக்கும் தமிழ் சினிமாவில் தனக்கான பங்களிப்பை ஏதோவொரு வகையில் கொடுத்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டு வரும் சோனியா, மார்ச் 28 அன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், திரைத்துறையில் சோனியா அகர்வால் கடந்து பாதை, அவர் கண்ட வெற்றிகள், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த சறுக்கல்கள் போன்ற பல தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.
நடிகையாகவே பிறந்த சோனியா
இருமாறுபட்ட தோற்றங்களில் அழகாக காட்சியளிக்கும் நடிகை சோனியா அகர்வால்
அழகு பதுமையாக, கனவு கன்னியாக 90-களில் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சோனியா அகர்வால் பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் 1982-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி பிறந்தார். இவர் பிறக்கும் போதே நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது அம்மா சீமா அகர்வாலுக்கு விருப்பமாம். அதனாலேயே தனக்கு பெண் பிள்ளை பிறந்ததும், தான் எந்த தொலைக்காட்சி தொடரை பார்த்து இன்ஸ்பயர் ஆனாரோ அதே சீரியலில் வந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயரையே (சோனியா) தன் மகளுக்கு வைத்து மகிழ்ந்தாராம். காரணம் தன்னால் அடைய முடியாத கனவை தன் மகளை வைத்து அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு. சீமா நினைத்தது போலவே மகளுக்கும் அதற்கான தகுதிகளை சிறுவயதில் இருந்தே வளர்த்துவிட ஆரம்பித்துள்ளார். அதன்படி சண்டிகரில் பள்ளியில் படிக்கும் போது ஒருநாள் ஃபேஷன் டிரஸ் போட்டி நடந்துள்ளது. அந்த போட்டியில் கலந்து கொண்ட சோனியா, பெஸ்ட் பெர்ஃபாமர் என்ற விருதையும் பெற்றுள்ளார். அந்த விருதை சோனியா வாங்கிய அந்த தருணம் ‘எப்படியும் நம் கனவை மகள் நிறைவேற்றிவிடுவாள் என்ற நம்பிக்கை சீமாவுக்கு வந்ததாம்.
மாடலாக சோனியா அகர்வால்
இங்கு ஆரம்பித்த சோனியாவின் மாடல் பயணம் கொஞ்சம் கொஞ்சமாக தொடர ஆரம்பிக்க, 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சண்டிகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு மிஸ் சண்டிகராக இரண்டாவது இடத்தை வென்றாராம். இருப்பினும், தான் ஒரு ரன்னர் அப் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சோனியா. அடுத்த முறை எப்படியாவது மிஸ் சண்டிகர் பட்டத்தை வென்று விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து, அதற்கான பயிற்சிகளையும் சிறப்பாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆண்டே பட்டத்தையும் வென்றாராம். இதற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்க வேண்டும்.. இந்த துறையையே தனது பேஷனாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். அதன்படி பயணிக்க ஆரம்பித்தவர், 1998-ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும் வென்று நிறைய விளம்பர படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் பிறகு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு தொடரிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து சின்ன திரைக்குள் நுழைந்தவர், இங்கிருந்துதான் தன் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து, அம்மா சீமாவின் கனவையும் நிறைவேற்ற தொடங்கியுள்ளார்.
நடிகையாக அடுத்த பரிமாணம்
நடிகர் அப்பாஸுடன் தெலுங்கில் அறிமுகமான சோனியா
சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், இவரின் நடிப்பு திறமையை பார்த்து தெலுங்கு திரையுலகில் இருந்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஓரளவுக்கு தன் இலக்கை நோக்கி சரியாக போய்க்கொண்டிருந்த சோனியாவும் மறுக்காமல் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான படம்தான் 'நீ பிரேமகை' திரைப்படம். 2002-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் வினித் மற்றும் அப்பாஸுடன் இணைந்து பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படம் ஓரளவு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததால் அந்த அடையாளமே அவரை கன்னடம் மற்றும் தமிழ் திரையுலக பக்கம் அழைத்து வந்தது. அதன்படி தமிழில் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தில் திவ்யாவாக உலகமே கொண்டாடி தீர்க்கும் அழகு தேவதையாக நம் மனங்களில் பதிந்துபோனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தன் தேர்ந்த நடிப்பால் திறமையான நடிகை என்ற பிம்பத்தை உண்டாக்கியது மட்டுமின்றி இப்படத்தில் 'சிறந்த புதுமுக நடிகைக்கான சர்வதேச தமிழ் திரைப்பட விருதையும்' வென்றார். இதனை தொடர்ந்து சோனியா தெலுங்கு, கன்னடம் என்று மாறி மாறி நடித்தாலும் தமிழில் சிம்புவுடன் நடித்த ‘கோவில்’ மற்றும் விஜய்யுடன் நடித்த ‘மதுர’ ஆகிய திரைப்படங்கள் மற்றுமொரு வெற்றி மகுடமாக மாறிப்போகின.
7ஜி ரெயின்போ காலனி அனிதா கதாபாத்திரத்தில்...
இந்த நிலையில், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க திவ்யாவில் இருந்து ரசிகர்களின் மனதை பிழிந்து உருக வைக்கும் அனிதாவாக அப்படியே நின்று போனார். இப்படத்தில் ரவிகிருஷ்ணாவுடன் சேர்ந்து அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் 90-ஸ் கிட்ஸ்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்தவை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு பாடல்களும் சரி, காட்சிகளும் சரி எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்து காட்டுவது போன்ற உணர்வை கொடுத்திருக்கும். அதிலும் சோனியா தன் இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்தது மட்டுமின்றி அப்படியே அனிதா என்ற பெண்ணாகவே வாழ்ந்துவிட்டு போயிருப்பார். இப்படி வெற்றிமேல் வெற்றியாக கொடுத்து வந்த சோனியாவை தமிழ் திரையுலகம் மிஸ் செய்ய விரும்பவில்லை. அதன் பலனாகத்தான் தொடர்ந்து தமிழில் ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘ஒருநாள் ஒரு கனவு’, ‘திருட்டு பயலே’, ‘புதுப்பேட்டை’ என வரிசையாக அவரது படங்கள் வெளிவர, அத்தனை படங்களும் ஓரளவு வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.
திருமணத்தில் ஏற்பட்ட தோல்வி
இயக்குநர் செல்வராகவனை மணந்தபோது...
நடித்த ஒவ்வொரு படங்கள் வாயிலாகவும் தன் வெற்றி முத்திரையை பதித்து கொண்டிருந்த சோனியா, தனுஷின் ‘புதுப்பேட்டை’ படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவனை காதலித்து மணந்தார். 2006-ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்ற இவர்களின் திருமணம் அன்று பலருக்கும் ஆச்சரியத்தை தந்தாலும், ஒட்டுமொத்த திரையுலகமும், இருவரின் ரசிகர்களும் இந்த தம்பதிகளை மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். மிகவும் சந்தோஷகரமாக ஆரம்பித்த இவர்களின் திருமண பந்தம் யார் கண் பட்டதோ வெறும் மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி சட்டப்படி பிரிவதாக அறிவித்தனர். சினிமாவில் வெற்றிகளை அள்ளி குவித்து குறுகிய காலத்திலேயே பல உச்சங்களை தொட்டவரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. முதல் வாழ்க்கை தந்த பாடமோ என்னவோ இன்று வரை வேறொரு வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர், கதாநாயகி என்றில்லாமல், அம்மா, அக்கா மற்றும் துணை வேடங்களிலும் நடிக்க முடிவெடுத்து, 'துப்பறியும் சத்யபாமா', 'டெம்பர்', 'சாசன சபா' போன்ற படங்களில் நடித்தார். அவரது இரண்டாம் கட்ட திரை வாழ்க்கை சற்று மெதுவாக தொடங்கி இருந்தாலும், இப்போது பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். எத்தனை படங்கள், தொடர்களில் நடித்தாலும் இன்றும் நமக்கு திவ்யா, அனிதாவாக மட்டுமே பளிச்சிட்டு கொண்டிருக்கிறார் சோனியா. எப்போதும் இயக்குநர்களின் நடிகையாகவே பார்க்கப்படும் சோனியா அகர்வால், சினிமா பயணத்தில் இன்னும் பல உயரங்களை தொட்டு மீண்டும் ஒரு புதிய சகாப்தத்தை படைக்க இந்த பிறந்த நாளில் வாழ்த்துவோம்.