நடிகை சதாவின் மறுபக்கம் - பல பெண்களுக்கு ரோல்மாடல்!
‘ஜெயம்’ என்ற ஒரே ஒரு படத்தின் மூலமாகவே பிரபலமடைந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் இடத்தை பெற்றவர்தான் நடிகை சதா.;
‘ஜெயம்’ என்ற ஒரே ஒரு படத்தின் மூலமாகவே பிரபலமடைந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் இடத்தை பெற்றவர்தான் நடிகை சதா. அந்த படத்தில் சதாவின் அழகையும், நடிப்பையும் ரசிக்கவே திரையரங்கிற்கு திரும்பத் திரும்ப சென்று அப்படத்தை பார்த்த 90’ஸ் கிட்ஸ்கள் ஏராளம். குறிப்பாக, இப்படத்தில் அவர் சொல்லும் ‘போயா போ’ என்கிற வசனம் இன்றுவரை மிகவும் பிரபலமானது. ‘ஜெயம்’ தவிர, ‘அந்நியன்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சதா நடித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் பெரிதாக காணப்படவில்லை. குறிப்பாக, 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு வெகு சில படங்களிலேயே நடித்து வந்த சதா, சமீப காலமாக வனவிலங்கு புகைப்படக் கலையில் (Wildlife Photography) மிகுந்த ஆர்வம் காட்டி, அதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். வனவிலங்குகளின் அழகியத் தருணங்களை கேமராவில் பிடித்து, புகைப்படக்கலையில் தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் சதா, திரைப்பயணத்தில் கடந்து வந்த பாதை, தற்போது புகைப்படக் கலையில் அவர் நிகழ்த்தி வரும் சாதனைகள் உள்ளிட்டவை பற்றிய விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆரம்பகால வாழ்க்கை
ஜெயம் திரைப்படத்தில் சுஜாதாவாக வரும் நடிகை சதா
தென்னிந்திய திரைப்படத்துறையில் "சதா" என அறிமுகமான இவரது முழுப்பெயர் சதா முகமது சயீத். 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் பிறந்த சதாவின் தந்தை முகமது சயீத் ஒரு மருத்துவர். இவரது தாய் ஒரு வங்கி ஊழியர்; அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சதா தனது பள்ளிப்படிப்பை ரத்னகிரியிலேயே முடித்தார். சிறுவயதில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர், ரத்தத்தைப் பார்த்தால் பயம் ஏற்படும் தன்மை காரணமாக, ஒரு தருணத்தில் மருத்துவம் தனது வழி அல்ல என்று உணர்ந்தார். இதனால், பொறியியல் துறையைத் தேர்வு செய்து கல்வியை தொடரத் தீர்மானித்தார். இந்த நேரம் சதா 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே, அவருக்கு திரைத்துறையில் அறிமுகம் கிடைக்கும் சந்தர்ப்பம் வந்தது. அவர் படித்த பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், அவர் நடனமாடியபோது, அங்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஒரு அரசியல் தலைவர், அவரின் அழகையும் திறமையையும் பார்த்து, திரைத்துறையில் அவருக்கு வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், சதாவின் பெற்றோர் இதை மறுத்து, அவர் தனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி. கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்த சதாவிற்கு நடிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டதால், அவர் ஆக்டிங் ஸ்கூலிலும் சேர்ந்து, தனது திறமையை மேம்படுத்த தொடங்கினார். அவ்வாறு தனது திறனை வளர்த்துக் கொண்டிருந்த போது, அவருக்கு தெலுங்குத் திரைப்படத்துறையில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம்தான், தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற "ஜெயம்".
திரையில் கண்ட வெற்றிகள்
அந்நியன் நந்தினியாக சதா
2002 ஆம் ஆண்டு, இயக்குநர் தேஜா இயக்கத்தில், நிதின் கதாநாயகனாக நடித்துப் பெரும் வெற்றி பெற்ற படம் ‘ஜெயம்’. இந்த படம் மூலமாகவே நடிகை சதா தென்னிந்திய திரைப்பட உலகில் கதாநாயகியாக அறிமுகமானார். ஒரு கிராமத்து காதல் காவியமாக வெளிவந்த இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, தமிழிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், ரவி மோகனுடன்(ஜெயம் ரவியுடன்) ஜோடியாக நடித்து அறிமுகமான சதா, இப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி தனது சிறப்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார். காதல், அன்பு, பயம், கோபம் போன்ற உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்திய அவர், தனது அழகாலும், திறமையாலும் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இந்தப்படம் பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பிரபலமான சதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, தமிழில் ‘எதிரி’, ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’, ‘பிரியசகி’, ‘திருப்பதி’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2005 ஆம் ஆண்டு, இயக்குநர் சங்கர் இயக்கத்தில், விக்ரம், பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தில், நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சதா, அம்பி, ரெமோ, அந்நியன் என்ற மூன்று கதாபத்திரங்களில் தோன்றி கலக்கிய விக்ரமின் நடிப்பிற்கு ஈடுகொடுத்து தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். அதன்பிறகு, 2007 ஆம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தில், ஜான்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்த சதா, ஒரு பொறுப்புள்ள, உணர்ச்சிகரமான காதலியாக தோன்றி, காதல், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி, பல இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
சறுக்கலும், தடுமாற்றமும்
மாடர்ன் லுக்கில் நடிகை சதா
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வந்த சதா, இரு மொழிகளிலும் குறிப்பிடத்தக்க நடிகையாக நிலை பெற்றிருந்தார். இந்த நேரத்தில்தான் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கின. இந்த காலகட்டத்தில், ஹிந்தி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தாலும், அவற்றில் பங்கேற்காமல் வெவ்வேறு மொழி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதற்கிடையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் நடுவராக இடம் பெற்று பெரும் கவனம் பெற்றவர், வேறு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 2015ஆம் ஆண்டு, இயக்குநர் யுவராஜ் இயக்கிய ‘எலி’ திரைப்படத்தில் வடிவேலுவுக்கு இணையாக நடித்தார். இப்படம் பெரிய தோல்வியை சந்தித்ததோடு, வடிவேலுவுடன் நடித்தது சதாவின் தவறான முடிவாக பலரால் விமர்சிக்கப்பட்டது. சிலர் அவரை கேலி செய்ததுடன், இதனால் அவருடைய திரையுலக பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி சங்கடப்படுத்தினர். ஆனால், இவ்வாறான விமர்சனங்களை பெரிதாகப் பொருட்படுத்தாத சதா, “ஒரு லெஜெண்டரி நடிகருடன் நடித்தது எனக்கு பெருமையாகும்” என்று பதிலளித்தார். 2018ஆம் ஆண்டு, ‘டார்ச்லைட்’ திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து, தனது நடிப்புத் திறமையால் கவனம் பெற முயற்சித்த சதா அதிலும் தோல்வியையே சந்தித்தார். வறுமையால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் பிரதிபலிக்கும் இப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சதா, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
ஃபோட்டோகிராஃபியில் ஆர்வம்
வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் கலைஞராக அவதாரம் எடுத்துள்ள நடிகை சதா
சதா தனது திரையுலக வாழ்க்கையின் தொடக்கத்தில் மிகுந்த ஹோம்லி தோற்றத்துடன் அறிமுகமாகி, இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தாலும், தொடர்ந்து வெற்றியை பெற, கிளாமராக மாறினால்தான் இங்கு ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதாலோ என்னவோ, தொடர்ந்து கிளாமர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இருப்பினும், அதனால் அவருக்கு பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. குறிப்பாக, ‘எலி’, ‘டார்ச்லைட்’ போன்ற படங்கள், அவரது திரையுலக பயணத்தைக் கேள்விக்குறி ஆக்கின. அதேநேரம் ஃபோட்டோகிராஃபியில் ஆர்வம் உடைய சதா தற்போது அர்ப்பணிப்புடன் காட்டுயிர் புகைப்படக் கலைஞராகவும், வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலராகவும், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, வைல்டு லைஃப் ஃபோட்டோகிராஃபியில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், நாட்டின் பல்வேறு தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கே தங்கி காட்டுயிர்களின் இயற்கை வாழ்வியலை படம் பிடித்து வருகிறார். யானை, சிறுத்தை, புலி மட்டுமின்றி, விஷ பாம்புகள் மற்றும் அரிய வகை பறவைகளையும் தனது கேமராவில் சிறப்பாக பதிவேற்றி வரும் சதா, தன்னுடைய புகைப்படங்களை ‘சதா வைல்டு லைஃப் ஃபோட்டோகிராஃபி’, ‘சதா வைல்டு ஸ்டோரி’ என்ற பெயர்களில் இயங்கும் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறார். என்னதான் சதா சமீபகாலமாக சினிமாவில் சில சறுக்கல்களை சந்தித்து வந்தாலும், ஃபோட்டோகிராஃபியில் அவர் காட்டிய திறமை, அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சதாவை முன்மாதிரியாகக் கொண்டு, கர்நாடகாவில் பல பெண்கள் காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களாக உருவாகி வருகின்றனர் என்ற தகவல், அவருக்கு மேலும் பெருமையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.