தமிழ் சினிமாவில் கிராமங்கள்

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் வருகைக்கு பிறகு கிராமங்கள் திரையில் மிளிர்ந்தன.

Update:2023-09-05 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவின் உயிர் கிராமங்களில் இருக்கிறது. அப்படி உயிராக விளங்கும் கிராமங்கள் திரையில் மிளிர்ந்த விதத்தை இப்பதிவில் காண்போம். சினிமாவில் கிராமம் என்றதும் நமக்கு சட்டென நினைவுக்கு வருபவர் பாரதிராஜாதான். ஆனால் அவருக்கு முன்பே திரையுலகில் கிராமங்களையும், கிராம சிறப்புகளையும் எடுத்துக்கூறும் படங்கள் வந்ததுண்டு. இருந்தும் அவையெல்லாம் பாரதிராஜாவின் கிராம படங்களின் அளவுக்கு நம் மனதில் ஒட்டாதிருப்பது ஏன்? கருப்பு-வெள்ளை காலத்தில் திரைப்படங்கள் எல்லாம் உள்ளரங்குகளிலேதான் எடுக்கப்பட்டன. அப்போதிருந்த தொழில்நுட்பம் மற்றும் வசதிகளைக் கொண்டு வெளியரங்கில் படப்பிடிப்பு நடத்துவது இயலாத காரியமாக இருந்தது. உள்ளரங்குகளில் கிராமத்தை மட்டுமல்ல நகரம், சொர்க்கம், நரகம், பாதாளம் என எல்லாவற்றையும் அரங்கு வடிவமைப்புகளாகத்தான் காட்டினார்கள். வெளியரங்குகளில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. அதுவும் கிராமத்தின் அழகைக் காட்டுவதைக் காட்டிலும் காட்சியமைப்பின் கருத்தை காட்டுவதாகவே அமைக்கப்பட்டிருக்கும்.


பழைய திரைப்படங்களில் வெளியரங்கு மற்றும் உள்ளரங்கு காட்சிகள்

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் வருகைக்கு பிறகு கிராமங்கள் திரையில் மிளிர்ந்தன. ஆம், கிராமத்தின் அழகை வனப்புற காட்சிப்படுத்தினார் அவர். அதுமட்டுமின்றி கிராம மக்களின் குணவியல்வுகளை தனது படைப்பின் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார். அதுவரை கிராமம் என்றால் இப்படித்தான் என்றிருந்த பிம்பத்தை உடைத்தார். நகரத்துவாசிகளை ரசிக்க வைத்தது மட்டுமின்றி கிராமத்து மக்களுக்கும் கூட கிராமத்தின் சிறப்பை உணர்த்திக் காட்டினார். அவருடைய முதல் படமான ‘16 வயதினிலே’ மயிலு, சப்பாணி மற்றும் பரட்டை கதாபாத்திரங்களே அதற்கு சாட்சி. மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, புது நெல்லு புது நாத்து, நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன் போன்று அவர் இயக்கிய எல்லா கிராமத்துப் படங்களும் ரசிகர்கள் மனதில் மட்டுமின்றி வணிகரீதியாகவும் வெற்றியடைந்த படங்கள்தான். கிராமத்து இயக்குநர் என்று பெயர் பெற்றிருந்தாலும் நிழல்கள், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், கொடி பறக்குது, கேப்டன் மகள், தமிழ் செல்வன் ஆகிய நகரத்துப் படங்களிலும் தன் வெற்றியை தடம் பதித்திருக்கிறார். பொதுவாகவே இவருடைய கிராமத்து நாயகிகள் அனைவரும் துணிச்சல் மிக்கவராகவே இருப்பார்கள்.


இயக்குநர் பாரதி ராஜா 

பாரதிராஜா மதுரை வட்டாரத்தை திரையில் கொண்டுவந்ததைப் போன்று கொங்கு நாட்டு கிராமத்தை திரையில் காட்டியவர் ஆர்.வி.உதயகுமார். கிழக்கு வாசல், சின்னக்கவுண்டர், பொன்னுமணி போன்ற திரைப்படங்கள் மூலம் கொங்கு மண்டல கிராமத்தை கண்முன் கொண்டு வந்திருந்தார் ஆர்.வி.உதயகுமார். அவரைப்போன்றே கே.எஸ்.ரவிக்குமாரும் கொங்கு மண்டல கிராமத்தை மையமாகக் கொண்டு சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என கிராமத்து கதைகளை கையாண்டிருந்தார்.

இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் கதை மற்றும் திரைக்கதை எழுதிய பல படங்களும் கிராமத்தை மையமாகக் கொண்டே இருந்தன. அன்னக்கிளி, தம்பிக்கு எந்த ஊரு, எங்கேயோ கேட்ட குரல், முரட்டுக்காளை ஆகிய திரைப்படங்கள் கிராமத்தின் வேறு சில பரிமாணங்களை நமக்குக் காட்டின. பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களை இயக்கிய சேரன் கிராமத்தின் வலிகளை பதிவு செய்தார்.


கிராமத்து கதைகளத்தில் அமைந்த திரைப்படங்கள்

வெண்ணிலா கபடிக் குழு, பருத்தி வீரன், களவாணி போன்ற அடுத்தகட்ட கிராமத்துத் திரைப்படங்கள் நவீனகால கிராமிய சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டின. இன்றைய காலகட்டத்தில் சசிகுமார், முத்தையா, மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் கிராமத்துக் கதைகளத்தில் திரைப்படங்களை எடுத்தாலும் அவை பெரும்பாலும் சமூகப் படங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் வெளிவந்து தேசிய விருது வென்ற கடைசி விவசாயி திரைப்படத்தில் மணிகண்டன் நவீன கிராமத்தின் சூழ்நிலையைக் காட்டியிருப்பார்.


‘கடைசி விவசாயி’ திரைப்படக் காட்சி

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்துத் திரைப்படங்கள் வெளிவந்த போதும் முழுமையாக கிராமத்தின் அழகு, பண்பாடு, மனிதர்கள், சூழல் என்று பிரத்யேகப்படுத்தி கிராமத்தைக் காட்டும் திரைப்படங்களின் வரத்து குறைந்து போயிருப்பது உண்மைதான். அறிவியல் வளர்ச்சி கிராமத்தையும் நகரத்தையும் இணைத்து உலகத்தையே ஒற்றைக் கிராமம் ஆக்கியிருக்கிறது என்றாலும், நமது இந்திய கிராமங்களில் இன்னும் கிராமிய மணம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த காந்தாரா, விடுதலை ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். திரைப்படம் என்பது கலை மட்டுமின்றி வணிகம் சார்ந்ததாக இருப்பதால் கூட கிராமத்தின் தாக்கம் தற்போது குறைந்திருக்கலாம். திரையரங்குகள் எல்லாம் இப்போது வணிக வளாகங்களாகத்தான் இருக்கின்றன. நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமத்து திரையரங்குகளும் காலத்தின் போக்கில் மாறிக் கொண்டிருக்கிறன. காலத்தின் சுழற்சியில் கிராமத்துத் திரைப்படங்கள் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்புவோம்.

Tags:    

மேலும் செய்திகள்