இரட்டை வேடத்தில் சாதிப்பாரா விஜய் - 'GOAT' ஸ்பெஷல்

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் மீண்டும் ‘GOAT’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

Update: 2024-01-08 18:30 GMT
Click the Play button to listen to article

தங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள் என்றாலே அவர்களது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். அது அன்றைய பி.யு.சின்னப்பா காலம் தொடங்கி பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தொடர்ந்து, இன்றைய அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களின் இரட்டை வேடப் படங்கள் தாறுமாறாக ஓடி வெற்றியும் கண்டுள்ளன. அந்த வகையில், நடிகர் விஜய் அழகிய தமிழ் மகன் தொடங்கி பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அதில் பெரும்பாலான படங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன. இருப்பினும் தன் முயற்சியில் எப்போதும் பின் வாங்காமல் தொடர்ந்து போராடும் குணம் கொண்ட நடிகர் விஜய், தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ என்ற படத்தில் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் இந்த முயற்சி கைகொடுக்குமா? தொடர்ந்து தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிசில் வெற்றி என்ற அஸ்திரத்தை தக்கவைத்து வரும் விஜய் இந்த முறையும் சாதிப்பாரா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

மாஸாக வெளியான 'கோட்' போஸ்டர்ஸ்

தல அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தின் வெற்றியின் போதே விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணையப்போகிறது என்ற பேச்சும்… எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் 12 ஆண்டுகள் கழித்துதான் இந்த கூட்டணி முதல் முறையாக ‘தளபதி 68’ என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, இவர்களுடன் 80களின் கனவு நாயகனான மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர வெங்கட் பிரபுவின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் அவரது தம்பி பிரேம்ஜி அமரன், வைபவ் மற்றும் அரவிந்த் உள்ளிட்டோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் நட்பை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. ராஜு சுந்தரம் நடனம் அமைத்த அப்பாடல் காட்சியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடனமாடி இருப்பதாகவும், இப்பாடலே படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டின் இறுதி நாளான கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் "The Greatest of All Time" என்று படத்தின் பெயர் ரிவீல் செய்யப்பட்டது. மேலும் அந்த போஸ்டரில் விமானம் மற்றும் பாராஷூட்டை கழட்டிவிட்டு இரண்டு விஜய்யும் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டிக் கொண்டு நடந்து வருவது போன்றும், அதில் ஒரு விஜய் வயதான தோற்றத்திலும், இன்னொரு விஜய் மிக இளமையாக இருப்பது போன்ற தோற்றங்களும் உருவாக்கப்பட்டு படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டன.


'GOAT' திரைப்பட போஸ்டரின் விளம்பரம் மற்றும் விஜய் இரட்டை வேடத்தில் இருக்கும் போஸ்டர் 

இதனை தொடர்ந்து புதிய ஆண்டான 2024-ஐ வரவேற்கும் விதமாக இரண்டாவது போஸ்டரையும் படக்குழு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்டது. முழுக்க முழுக்க CG-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரில் வயதான மற்றும் இளமை என இருமாறுபட்ட தோற்றங்களில் இருக்கும் விஜய், ஒரு பைக்கில் ஒன்றாக அமர்ந்து ஒருவர் வண்டி ஓட்டிக்கொண்டே துப்பாக்கியால் சுடுவது போன்றும், இன்னொருவர் பைக்கில் பின்னாடி அமர்ந்து பெரிய துப்பாக்கியால் சுடுவது போன்றும் சும்மா கெத்து காட்டி அமர்ந்துள்ளனர். மிகவும் கலர்ஃபுல்லாக வெளிவந்துள்ள இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் புத்தாண்டுக்கு கிடைத்த சிறந்த பரிசு என ஒருபுறம் பாஸிட்டிவாகவும், இன்னொருபுறம் அவசர அவசரமாக போஸ்டரை உருவாக்கி வெளியிட்டதுபோல் உள்ளது என்றும், இதனால் அந்த போஸ்டரின் தரமே குறைந்துவிட்டது என்று நெகட்டிவ்வாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த போஸ்டரை பார்த்தால் வில் ஸ்மித் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஜெமினி மேன்(Gemini Man) படம்தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் வில் ஸ்மித் ஒரு நடுத்தர வயதானவராகவும், மற்றொருவர் இளமையானவராகவும் தோன்றி நடித்திருப்பார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும், இந்த 'Goat' பட போஸ்டரில் இடம் பெற்றிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சறுக்கிய இரட்டை வேடங்கள்

தமிழ் சினிமாவில் 1940-ஆம் ஆண்டு ‘உத்தம புத்திரன்’ படத்தின் வாயிலாக இரட்டை வேடம் ஏற்று முதல் முதலாக மாபெரும் வெற்றியை பதிவு செய்த நாயகன் என்ற பெருமையை பி.யு.சின்னப்பா பெற்றிருந்தாலும், அதனை தொடர்ந்து வந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்தான் இரட்டை வேடப் படங்களுக்குப் பெயர் போனவர். காரணம் 1958-ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘நாடோடி மன்னன்’ தொடங்கி 1976ஆம் ஆண்டு வெளியான ‘ஊருக்கு உழைப்பவன்’ வரை 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து சாதனை படைத்திருந்தார். இவரை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என வரிசையாக வந்த அடுத்த தலைமுறை நடிகர்களும் இரட்டை வேடங்களில் நடித்து தங்களது வெற்றி முத்திரையை பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த வரிசையில் வந்த நடிகர் விஜய் இரட்டை வேடம் ஏற்ற பெரும்பாலான படங்களில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். அதில் பரதன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தில் முதல் முறையாக குருமூர்த்தி, பிரசாத் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், இப்படத்தின் கதைக்களமும், சுவாரஸ்யமும் விஜய்யின் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதனால் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது மட்டுமின்றி தோல்விப்படமாகவும் அமைந்தது. ஆனால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற பாடல்கள் மட்டும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.


 'அழகிய தமிழ் மகன்' மற்றும் 'வில்லு' பட காட்சிகள் 

இதனையடுத்து, நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் இவ்விரு கதாபாத்திரங்களும் திரையில் ஒரே நேரத்தில் வராதது போல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. அதனால் இப்படமும் தோல்வியை தழுவியது. இதனால் மனதளவில் இரட்டை வேடப்படங்கள் என்றாலே அது விஜய்க்கு தோல்வியை தரக்கூடிய வகையில்தான் இருக்கும் என்ற மனநிலை பரவலாக எழ ஆரம்பித்தது மட்டுமின்றி, அது பேசுபொருளாகவும் மாறியது. இது விஜய்க்கு வருத்தத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ.. விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.  இதற்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த புலி திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்த விஜய்க்கு அப்படமும் கைகொடுக்கவில்லை. இதனால் இரட்டை வேடங்கள் ஏற்று விஜய் நடிக்கிறார் என்றாலே, அவரது ரசிகர்களிடம் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். இருந்தும் விடாமல் முயற்சி செய்யும் விஜய் தனது ரசிகர்களை குஷிப்படுத்திடும் வகையில், எப்படியாவது இரட்டை வேடத்தில் ஒரு படத்திலாவது ஜெயித்திட வேண்டும் என்று அந்த தருணத்திற்காக காத்திருந்து யாரும் எதிர்பார்த்திடாத வகையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார்.

வெற்றியை தந்த ஏ.ஆர் முருகதாஸ், அட்லீ

விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ், அட்லீ இருவரும் படம் இயக்குகிறார்கள் என்றாலே ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். ஏனென்றால் இருவருமே விஜய்யை வைத்து இயக்கிய படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி மாபெரும் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், முதலில் 2012-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்து மாஸ்ஹிட் வெற்றி கொடுத்திருந்ததால், மீண்டும் 2014-ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘கத்தி’ படத்தில் இணைந்தார். முதல் படத்தின் வெற்றியால், இவர்களின் கூட்டணி மீண்டும் இணைவதை கேட்டு விஜய் ரசிகர்கள் எந்த அளவிற்கு சந்தோஷப்பட்டார்களோ, அதே அளவிற்கு சற்று பயப்படவும் செய்தார்கள். காரணம் ‘கத்தி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்புதான். படம் வெளிவரும் வரை விஜய்யின் ரசிகர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. படம் வெளிவந்த பிறகு கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு வேடங்களில் வரும் விஜய் நடிப்பில் அசத்தியிருந்தது மட்டுமின்றி அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் மிக நேர்த்தியாகவும் இருந்தது. நிச்சயம் விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிதான் என ஒவ்வொருவரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர். முடியாது, இது செட் ஆகாது என்று பிறர் கூறும் வார்த்தையை தன் விடாமுயற்சியால் சாதனையாக மாற்றி காட்டும் பழக்கம் கொண்ட விஜய், ‘கத்தி’ படத்தில் சாதித்துக்காட்டியது போலவே, அடுத்த படைப்பிற்காகவும் காத்திருந்தார்.


ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இரட்டை வேட படத்தின் காட்சிகள் 

ஆனால் இந்த முறை ஒன்றல்ல.. இரண்டல்ல.. மூன்று வேடங்களில் நடிக்க முடிவெடுத்தார். அதன்படி ‘தெறி’ என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குநர் அட்லீயை நம்பி, அடுத்ததாக அவரின் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் வெற்றிமாறனாக தந்தை கதாபாத்திரத்திலும், மாறனாக ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் 5 ரூபாய் மருத்துவர் கதாபாத்திரத்திலும், வெற்றியாக மேஜிக் செய்யும் கதாபாத்திரத்திலும் என முப்பரிமாணங்களில் நடிப்பில் மிளிர்ந்து ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தினார். அதேபோல் மீண்டும் 2019ஆம் ஆண்டு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘பிகில்’ படத்திலும் மைக்கேல், ராயப்பன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு பிறகு பெரிதாக இரட்டை வேடப் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படமும் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளார் விஜய்.

மீண்டும் சாதிப்பாரா விஜய்?


''The Greatest of All Time'' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்த நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். ‘GOAT’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திலும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டது. இரட்டை வேடப் படங்களில் முதலில் தோல்வி, பின்னர் வெற்றி என மாறி மாறி சரித்திரம் படைத்திருக்கும் நடிகர் விஜய், இந்த படத்திலும் நிச்சயம் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் சமீபகாலமாக விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருவதோடு, இப்படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் கதை தேர்வில் வல்லவர்கள் என்பதால்தான். இதற்கு முன் விஜய்யை வைத்து இரட்டை வேடத்தில் வெளிவந்த 'பிகில்' திரைப்படத்தை தயாரித்தவர்களும் இதே ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான். அதே போல் இயக்குநர் வெங்கட் பிரபு 'மாநாடு' படத்திற்கு பின்னர் சில சறுக்கல்களை சந்தித்துள்ளபோதும் பெரிய ஹீரோக்களின் படங்களை வித்தியாசமாகவும், கவனமாகவும் கையாளக் கூடிய நபர். அதற்கு சாட்சியே அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' படத்தின் பிரம்மாண்ட வெற்றி. இதனால் படத்தின் டைட்டிலை போலவே விஜய்க்கு இப்படம் ''The Greatest of All Time'' படமாக அவரது திரைப்பயணத்தில் அமைய வாழ்த்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்